வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)



WUCWO ஒன்றியம் நடத்தும் நிகழ்நிலை சந்திப்பு

உலக கத்தோலிக்கப் பெண்கள் அமைப்புகளின் ஒன்றியத்திற்கு (WUCWO) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகுந்தளவில் தனது ஆதரவை வழங்கி வருகின்றார் என்று கூறியுள்ளார் அதன் தலைவர் Mónica Santamarina. வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி, இவ்வமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இணையதளவழி (zoom) உரையாடல் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு உரைத்துள்ள Santamarina அவர்கள், இச்சந்திப்பு திருஅவையில் பெண்கள் தங்களின் பங்களிப்பை இன்னும் வலுப்படுபடுத்திக்கொள்ள உதவக்கூடியதாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
'தூய ஆவியில் உரையாடல்கள்' என்ற தலைப்பில் இந்த இணையதளவழி உரையாடல் நிகழவிருப்பதாகவும், இந்த முன்மொழிவு ஒருங்கிணைந்த பயணக் கற்றலின் (School of Synodality) ஒரு பகுதிதான் என்றும் இந்த நேர்காணலில் எடுத்துக்காட்டியுள்ள Santamarina அவர்கள், இந்தத் திட்டத்தின் வழியாகப் பல பெண்கள் ஐந்து கண்டங்களில் பயிற்சி பெறுகின்றனர் என்று உரைத்துள்ளார்.
இக்கூட்டத்தில் ஒவ்வொரு பங்கேற்பாளரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்ற அனுபவங்களையும் கண்ணோட்டஙகளையும் கேட்கவும் உதவும் விதமாக, இவ்வுரையாடல் ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் பிரஞ்சு மொழிகளில் சிறிய குழுக்களையும் கொண்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் Santamarina
எங்களின் ஒன்றியத்திற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கி வருகின்றார் என்று தெரிவித்த Santamarina அவர்கள், எங்களின் இந்த இணையதளவழி உரையாடல் நிகழ்வை அவர் மிகவும் விரும்பினார் என்றும், கடந்த ஆண்டு எங்களை சந்தித்தபோது, சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களைச் சென்றடையும் வகையில் தொடர்ந்து பணியாற்றுமாறு அவர் எங்களை ஊக்குவித்தார் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார். [2024-04-17 22:03:15]


காசாவில் பாதிக்கப்பட்ட குழந்தையின் நேரடி சாட்சியம்

காசாவில் 200 நாட்களாக நீடித்து வரும் மோதலால் குழந்தைகளின் துயரங்கள் மேலும் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளன என்றும், போரின் கொடூரத்தால் அவர்களின் வாழ்க்கையே மாறிபோயுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
ஏப்ரல் 17, இப்புதனன்று இத்தகவலை வழங்கியுள்ள அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம், 14 வயது நிரம்பிய Yousef என்ற குழந்தையின் திகிலுறச்செய்யும் நேரடி சாட்சியம் அடங்கிய காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
14 வயது நிரம்பிய Yousef என்ற குழந்தை காசா பகுதியின் தெற்கில் உள்ள கான் யூனிஸில் வசிக்கிறார். தற்போது ஜோர்டான் அரசால் அமைக்கப்பட்டுள்ள கள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், கொடூரமான இரவுநேர வெளியேற்றத்தின் போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட திகிலுறச்செய்யும் அனுபவத்தை இந்தக் காணொளிக்காட்சியில் விவரிக்கிறார். அதில் தனது தந்தை கொல்லப்பட்டது மற்றும் தனது இரண்டு சகோதரர்கள் காயமடைந்தது குறித்தும், தான் மருத்துவமனையை அடைந்தது குறித்தும் கூறியது அனைத்தும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. [2024-04-17 22:01:49]


உரோம் புறநகர் பங்குதளத்தில் சிறார்களுடன் திருத்தந்தை

உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையில் உரோம் புறநகர் பகுதியின் புனித ஜான் மரி வியான்னி பங்குதளத்திற்குச் சென்று அங்கு புது நன்மைக்காகத் தயாரித்துவரும் சிறார்களுக்கு இறைவேண்டலின் பள்ளி என்ற இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். புது நன்மைக்குத் தயாரித்துவரும் சிறாரின் கேள்விகளுக்குப் பதிலளித்து அவர்களோடு உரையாடி அவர்களுக்கு உற்சாகமூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்ல நேரங்களிலும், துயர் நிறைந்த வேளைகளிலும் செபத்தில் இறைவனை நோக்கித் திரும்புமாறு அழைப்புவிடுத்தார்.
ஏறக்குறைய 200 குழந்தைகள் குழுமியிருக்க அவர்களிடையே இயல்பாக உரையாடிய திருத்தந்தை, அனைத்து வேளைகளிலும் இறைவனோடு உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என புது நன்மைக்கு தயாரித்துவரும் சிறாரிடம் கேட்டுக்கொண்டார்.
2025ஆம் ஆண்டின் ஜூபிலிக்கென ஆன்மீகத் தயாரிப்பின் ஒரு பகுதியாக இறைவேண்டல் ஆண்டை இவ்வாண்டு சிறப்பித்துவரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக சிறார்களுக்கென இறைவேண்டல் பள்ளி என்னும் இயக்கத்தை ஏப்ரல் 11 வியாழக்கிழமை துவக்கிவைத்தார் திருத்தந்தை.
அனைத்திற்கும் நன்றி சொல்ல நாம் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நன்றி சொல்லல், மன்னிப்பு கேட்டல், தவறுக்காக மனம் வருந்துதல் ஆகியவைகளின் முக்கியத்துவம் குறித்து சிறார்களுக்கு எடுத்துரைத்தார்.
நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத் துறையால் தயாரிக்கப்பட்டு, வத்திக்கான் அச்சகத்தால் அச்சிடப்பட்ட ஜெபக்குறிப்புகள் அடங்கிய கையேடுகளையும் சிறார்களுக்கும், மறைக்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். [2024-04-13 01:24:19]


உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சி நமக்கானது! : திருத்தந்தை பிரான்சிஸ்

உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சி நமக்கானது, ஏனென்றால் அது நம்முடைய திருமுழுக்கின் நாளில் நமக்குக் கொடுக்கப்பட்டது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஏப்ரல் 11, இவ்வியாழனன்று, வெளியிட்ட தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பாஸ்கா காலத்தின் மகிழ்ச்சியை நாம் தழுவிக்கொள்வோம் என்றும் உரைத்துள்ளார்.
மேலும் உயிர்த்த கிறிஸ்துவை நற்கருணையிலும், அவருடைய மன்னிப்பிலும், இறைவேண்டலிலும், நற்பணி செயல்களிலும் தேட விரைவோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை. [2024-04-11 23:02:39]


இஸ்லாமியர்-கிறிஸ்தவர்களுக்கிடையே நல்லிணக்கம் மலரட்டும்!

இரமலான் பண்டிகையைக் கொண்டாடும் நமது இஸ்லாமிய சகோதரர் சகோதரிகளுக்கு நமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும், இவ்விழா கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வலுவான உறவை உருவாக்க உதவட்டும் என்றும் பேராயர் Lawrence S. Howlader அவர்கள் அறிக்கையொன்றில் கூறியுள்ளதாக ஆசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 11, வியாழன் இன்று, இஸ்லாமிய சகோகதரர் சகோதரிகள் இரமலான் பண்டிகையைக் கொண்டாடும் வேளை, இவ்வாறு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள வங்காள தேசத்தின் சாத்தோகிராம் பேராயர் Howlader அவர்கள், நம்பிக்கையின் ஒழுக்கத்தின் கீழ் அமைதியான சகவாழ்வு செழிக்கட்டும் என்றும் உரைத்துள்ளார். ஒவ்வொரு மதமும் அதன் நம்பிக்கைக்கு ஏற்ப பண்டிகைகளைக் கொண்டிருக்கின்றன. இஸ்லாமிய சகோதர சகோதரிகள் மாத நோன்பை முடித்துவிட்டு பெருநாள் கொண்டாடுகிறார்கள். இந்த நேரத்தில், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஸ்லிம்களுடன் எங்கள் ஒன்றிப்பை வெளிப்படுத்த விரும்புகின்றோம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Howlader.
சமூக சகோதரத்துவம் மற்றும் உலகில் அமைதியின் மதிப்புகளை 'அனைவரும் உடன்பிறந்தோரே' (Fratelli tutti) என்ற தனது திருத்தூது மடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே எடுத்துரைத்துள்ளார் என்றும், அமைதி மற்றும் உடன்பிறந்த உறவை நிலைநாட்ட, மதங்களுக்கு இடையேயான உரையாடல் ஒரு கடமையாகும் என அவர் கூறியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் Howlader. ஒவ்வொரு மதமும் அமைதியான சகவாழ்வைக் கற்பிப்பதாகவும், ஒவ்வொரு மதமும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தால் ஈர்க்கப்பட்ட போதனைகளைக் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு மதத்தின் ஆண்டுவிழாக்களும் அமைதியான மனநிலையில் கொண்டாடப்பட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Howlader.
மோதல் மற்றும் பகைமைக்குப் பதிலாக அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட இறைவேண்டல் செய்வோம் என்று கூறியுள்ள பேராயர் Howlader அவர்கள், அனைத்துக் கிறிஸ்தவச் சமூகங்களின் சார்பாகவும் இஸ்லாமிய சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறி அவ்வறிக்கையை நிறைவு செய்துள்ளார். (ASIAN) [2024-04-11 23:01:46]


காசாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இறக்கிறது!

காசாவில் நிகழ்ந்துவரும் கடந்த 6 மாத மோதலில், ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை தனது உயிரை இழக்கிறது என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தை நல அமைப்பு.
இந்த மரணங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துலகச் சமூகத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அவ்வமைப்பின் பணியாளர்கள் உரோமையிலுள்ள அதன் தலைமையகம் அருகே ஒன்றுகூடி, பயங்கர உருவம் கொண்ட பதாகை ஒன்றைக் காட்டினர் என்று அவ்வமைப்பின் செய்தியறிக்கைத் தெரிவிக்கின்றது. காசாவில் மோதல் நிகழும் பகுதிகளில் குழந்தைகளின் அடிப்படை வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டதை எடுத்துக்காட்டும் விதமாக, அக்குழந்தைகள் பயன்படுத்தும் பல்வேறு பொருள்கள் அதன் தலைமை அலுவலகத்தின் படிக்கட்டுகளில் பலரின் பார்வைக்காக வைக்கப்பட்டது என்றும் அதன் செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அதன் அமைப்பின் தலைவர் Daniela Fatarella அவர்கள், ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை உயிரை இழக்கிறது என்று நினைப்பது, இந்தப் போர் அண்மைகால வரலாற்றில் மிகக் கொடிய மற்றும் அழிவுகரமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த ஆறு மாதமாக நிகழ்ந்து வரும் மோதலில், ஏறத்தாழ 26,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்றும், உயிர் பிழைத்தவர்கள் தங்கள் வீடுகளையும், தங்கள் அன்புக்குரியவர்களையும், தாங்கள் படித்த பள்ளிகளையும், தங்கள் அன்றாட வாழ்க்கையையும் இழந்து, இன்று பட்டினியால் வாடுகிறார்கள் என்றும் பெரும் கவலையுடன் எடுத்துக்காட்டியுள்ளார்.
இத்தகையதொரு மோசமான நிலை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனச் சுட்டிக்காட்டியுள்ள Fatarella அவர்கள், உடனடி மற்றும் உறுதியான போர்நிறுத்தம் மற்றும் கட்டுப்பாடற்ற மனிதாபிமான அணுகலை உறுதிப்படுத்த உலகம் இப்போது செயல்பட வேண்டும் என்று விண்னப்பித்துள்ளார். இங்கு வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளும் அழிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர்களை நமக்கு நினைவூட்டுகிறது என்றும், ஆனால் அதேவேளையில், அதில் வன்முறைக்கும் மரணத்திற்கும் இடமில்லாத ஒரு குழந்தையின் வாழ்க்கையை நிரப்ப வேண்டிய அனைத்து அழகுகளையும் அவைகள் நமக்கு நினைவுபடுத்துகின்றன என்றும் விளக்கியுள்ளார் Fatarella.
Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தை நல அமைப்பு, பாலஸ்தீனிய குழந்தைகளுக்கு அத்தியாவசிய சேவைகளையும் ஆதரவையும் 1953-ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய நில எல்லைப் பகுதிகளில் உள்ள அமைப்பின் குழு 24 மணி நேரமும் உழைத்து, தீவிர அவசரநிலையில் உள்ள மக்களுக்கு உதவ முக்கிய ஏற்பாடுகளை செய்து காசாவிற்கு உதவி பெறுவதற்கான வழியைக் கண்டறிய உதவி வருகிறது. [2024-04-10 23:02:06]


இந்தோனேசியாவில் மனித வர்த்தகத்தை நிறுத்த வேண்டுகோள்!

இந்தோனேசியாவின் கத்தோலிக்கர்கள் அதிகம் வாழும் புளோரஸ் தீவில் மனித வர்த்தகத்தை நிறுத்துமாறு கிறிஸ்தவ ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.
இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தன் மாநிலத்தில் பட்டினியால் தொழிலாளி ஒருவர் அண்மையில் இறந்ததை அடுத்து, கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் புளோரஸ் தீவில் மனித வர்த்தகத்தில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அரசை வலியுத்தியுள்ளனர் கிறிஸ்தவ ஆர்வலர்கள் என்றும் தெரிவிக்கிறது அச்செய்தி நிறுவனம்.
இதுகுறித்து யூகான் செய்தி நிறுவனத்திடம் கூறிய மனிதாபிமான தானார்வக் குழுவின் (TRUK) ஒருங்கிணைப்பாளரும், தூய ஆவியார் துறவு சபையைச் சேர்ந்தவருமான அருள்சகோதரி Maria Fransiska Imakulata அவர்கள், சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாததால் அவர்கள் படகில் கடத்தப்பட்டனர் என்றும், சரியான உணவு அல்லது தங்குமிடம் இல்லாமல் கிழக்கு கலிமந்தனில் உள்ள பாமாயில் நிறுவனத்தில் அவர்கள் கட்டாய வேலைக்கு அமர்த்தப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் மனித வர்த்தகப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அருள்சகோதரி Imakulata அவர்கள், இதுசமந்தமாக, ஆதாரங்கள் தெளிவாக இருப்பதால், இதில் தொடர்புடைய அரசியல்வாதியை கைது செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிக்கா பகுதியில் வசிக்கும் 40 வயதான யோடிமஸ் மோன் காக்கா (Yodimus Moan Kaka) என்பவர், கடந்த மார்ச் 28, வியாழனன்று பட்டினியால் இறந்தார். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி மரியா ஹெர்லினா எம்பானி (Maria Herlina Mbani), ஏப்ரல் 5, வெள்ளிக்கிழமையன்று, சிக்காவில் தனது கணவருடன் மேலும் 70 பேர் அரசியல்வாதியான யுவினஸ் சோலோ என்பவரால் பணியமர்த்தப்பட்டதாகக் காவல் துறையில் புகார் செய்துள்ளார். தற்போது காக்காவின் மனைவி எம்பானி மற்றும் அவரது குழந்தைகளுக்கு ஆதரவளித்து வருகின்றார் அருள்சகோதரி Imakulata. [2024-04-10 23:00:50]


கருக்கலைத்தலை எதிர்க்கும் ஐரோப்பிய ஆயர்களின் அறிக்கை

பெண்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கும், கருக்கலைத்தலை ஊக்குவிப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உரைத்துள்ளனர் ஐரோப்பிய ஆயர்கள்.
ரோப்பிய ஒன்றிய அவையில் அடிப்படை உரிமைகள் குறித்த ஆவணத்தில் கருக்கலைத்தலை அனுமதிக்கும் உரிமையை இணைக்க ஐரோப்பிய பாராளுமன்ற அங்கத்தினர்கள் முயற்சித்துவரும் வேளையில், கருக்கலைத்தலுக்கும் கொள்கை திணிப்பிற்கும் தங்கள் எதிர்ப்பை ஓர் அறிக்கை வழி தெரிவித்துள்ளனர் ஐரோப்பிய ஆயர்கள்.
கருக்கலைத்தலை சட்டபூர்வமாக அங்கீகரிப்பது குறித்து ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை ஐரோப்பிய பாராளுமன்றம் விவாதிக்க உள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், கருக்கலைத்தலை அனுமதிப்பதற்கும் பெண்கள் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உரைத்துள்ளதோடு, தாய்மை அடைவதை ஒரு தடையாக நோக்காமல் அதனை ஒரு வரமாகக் காணவேண்டும் என உரைத்துள்ளனர்.
ஒரு தாயாக இருப்பது என்பது தனிப்பட்ட, சமூக மற்றும் தொழில் சம்பந்தப்பட்டவைகளில் ஒரு தடைக்கல்லாக இருக்க முடியாது என்பது மட்டுமல்ல, கருக்கலைத்தலை ஊக்குவிப்பதே பெண்களின் முன்னேற்றத்திற்கு எதிராகச் செல்கிறது என மேலும் கூறியுள்ளனர் ஆயர்கள்.
கருக்கலைத்தல் என்பது மனிதனின் அடிப்படை உரிமையாக இருக்கமுடியாது, மாறாக, வாழ்விற்கான உரிமையை, அதிலும் குறிப்பாக கருவில் வளரும் குழந்தைகளின் வாழ்வதற்கான உரிமையை மதிப்பதே அடிப்படை உரிமை என தங்கள் அறிக்கையில் கூறும் ஆயர்கள், இதில் புலம்பெயர்ந்தோர், முதியோர், நோயுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளும் அடங்கும் என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளனர். கருவில் வளரும் குழந்தையின் உரிமைகளை மதிப்பது என்பது அனைத்து மனித உரிமைகளையும் மதிப்பதோடு தொடர்புடையது எனக்கூறும் ஆயர்கள், மனிதனின் மீறமுடியாத மாண்பு மதிக்கப்பட வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதையும் நினைவூட்டியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தினர் நாடுகளின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை மதிப்பதாக ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முடிவுகள் இருக்கவேண்டும் என விண்ணப்பிக்கும் ஆயர்கள், பாலியல், பாலினம், திருமணம் மற்றும் குடும்பம் தொடர்புடைய கொள்கைகள் எவர் மீதும் திணிக்கப்படக்கூடாது என்பதையும் எடுத்தியம்பியுள்ளனர். [2024-04-09 23:04:44]


புனித பூமி கிறிஸ்தவர்களின் வருங்காலத்தை இருளாக்கும் போர்

காசா பகுதியில் இஸ்ராயேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் போர் புனித பூமி கிறிஸ்தவர்களின் வருங்காலத்தை இருள் நிறைந்ததாக மாற்றிவருகிறது என கவலையை வெளியிட்டுள்ளார் பிரான்சிஸ்கன் துறவி Ibrahim Faltas.
புனித பூமிக்கு பொறுப்பாளராக இருக்கும் துறவி இப்ராஹிம் உரைக்கையில், காசா, வெஸ்ட் பேங், மற்றும் இஸ்ராயேலில் வாழும் கிறிஸ்தவர்கள் ஏனைய மதத்தவர்களுடன் இணைந்து பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும், இயேசு வாழ்ந்த புனித பூமியில் கிறிஸ்தவர்களின் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருவதாகவும் தெரிவித்தார்.
பெரும் துயர்களை அனுபவித்துவரும் அப்பகுதியின் காயப்பட்ட மனித குலம் தன் விசுவாசத்திற்கு சான்று பகர்கின்றது எனக்கூறும் பிரான்சிஸ்கன் துறவி இப்ராஹிம் அவர்கள், வேதனைகளை தாங்குவதிலும் மற்றவர்களின் வேதனைகளைப் பகிர்வதிலும் அது சான்று பகர்கின்றது என மேலும் கூறினார்.
புனித பூமியில் சிறுபான்மையினராக வாழும் கிறிஸ்தவர்கள் இன்றைய துயர்களை எதிர்கொள்ள சிரமப்படுகிறார்கள் என உரைக்கும் துறவி இப்ராஹிம், காசாவில் எண்ணூறு கிறிஸ்தவர்கள் திருக்குடும்ப பங்குதளத்திலும், மேலும் இருநூறு கிறிஸ்தவர்கள் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கோவிலிலும் அடைக்கலம் தேடியுள்ளதாகவும், அதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். அடைக்கலம் தேடியுள்ள மக்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்துள்ள நிலையில், உணவு, தண்ணீர், மருந்துக்கள் பற்றாக்குறையையும் சந்தித்துவருவதாகவும், கத்தோலிக்க திருஅவையில் புனித பூமிக்கு பொறுப்பாக இருக்கும் பிரான்சிஸ்கன் துறவி இப்ராஹிம் மேலும் தெரிவித்தார். [2024-04-09 23:03:14]


ஜிம்பாப்வே மக்களை பசிச் சாவுகளிருந்து காக்க ஆயர்கள் கோரிக்கை

ஜிம்பாப்வே நாட்டில் விவசாய உற்பத்தி ஒரு பெரும் அழிவை சந்தித்துவரும் வேளையில், மக்களை பசிச் சாவுகளிலிருந்து காப்பாற்ற கத்தோலிக்க உதவி அமைப்புக்கள் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள். விவசாய உற்பத்தி தோல்வியால் ஏழைமக்கள் பெருமளவான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்ற ஜிம்பாப்வே ஆயர்கள், உணவு பாதுகாப்பின்மை மற்றும் பசிச் சாவுகளிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என உரைத்துள்ளனர்.
ஏற்கனவே பொருளாதார சிரம நிலைகளாலும், ஏழ்மையாலும், இளையோரிடையே வேலைவாய்ப்பின்மைகளாலும் துன்புறும் சமூகத்தை, இந்த வறட்சியும் தானிய உற்பத்தியின்மையும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளன என ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர் ஜிம்பாப்வே ஆயர்கள். கால நிலை மாற்றம் தன் கொடூர முகத்தைக் காட்டியுள்ளது எனக் கூறும் ஆயர்கள், தங்கள் உயிர்நாடியான விவசாயத்தை இழந்து தவிக்கும் கிராமப்புற மக்களின் அவலநிலை விவரிக்க முடியாதது எனவும் கூறியுள்ளனர்.
தேவையிலிருக்கும் மனிதர்களுக்கு ஒவ்வொருவரும் உதவவேண்டிய கடமையை உணர்ந்து நல்மனதுடைய கத்தோலிக்கர்கள் அனைவரும் உதவ முன்வரவேண்டும் எனவும் தங்கள் மேய்ப்புப்பணி சுற்றறிக்கையில் கேட்டுள்ளனர் ஆயர்கள். இத்துன்பவேளையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏழைமக்களின் துயர் துடைக்க நம் கரங்களை நீட்டவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர் ஜிம்பாப்வே ஆயர்கள்.
இதற்கிடையே, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு உட்பட பல்வேறு கத்தோலிக்க உதவி அமைப்புக்கள் அந்நாட்டு மக்களுக்கு உதவிகளை வழங்கும் பணிகளைத் துவக்கியுள்ளன. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான உணவுப் பொருட்கள், தாவர எண்ணெய் போன்றவை வழங்கப்படுவதோடு, கல்வி நிலையங்கள் வழியும் மதிய உணவு வழங்கப்படும் என கத்தோலிக்க உதவி அமைப்புக்கள் அறிவித்துள்ளன. [2024-04-09 23:02:30]