யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம்
2013-04-05

பாஸ்கா எண்கிழமை வெள்ளி


முதல் வாசகம்

இயேசுவில் அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 1-12

அந்நாள்களில் பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்; அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும் இறந்தோர் இயேசுவின்மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும் கண்டு எரிச்சல் அடைந்து, அவர்களைக் கைது செய்தார்கள்; ஏற்கெனவே மாலையாகி விட்டதால் மறுநாள்வரை காவலில் வைத்தார்கள்.
அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட பலரும் நம்பிக்கை கொண்டனர். இவ்வாறு நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.
மறுநாள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் எருசலேமில் ஒன்றுகூடினார்கள். அவர்களுடன் தலைமைக் குருவான அன்னாவும், கயபா, யோவான், அலக்சாந்தர் ஆகியோரும், தலைமைக் குருவின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கூடியிருந்தார்கள். அவர்கள் திருத்தூதர்களை நடுவில் நிறுத்தி, ``நீங்கள் எந்த வல்லமையால், அல்லது எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்?'' என்று வினவினார்கள்.
அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: ``மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, உடல் நலமற்றிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, `கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்.' இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!
திபா 118: 1-2,4. 22-24. 25-27ய

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 2 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! 4 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. பல்லவி
22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! 24 ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். பல்லவி
25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்! 26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 27ய ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-14

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்.
அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ``நான் மீன்பிடிக்கப் போகிறேன்'' என்றார். அவர்கள் ``நாங்களும் உம்மோடு வருகிறோம்'' என்று, போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார்.
ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், ``பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?'' என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், ``இல்லை'' என்றார்கள். அவர், ``படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்'' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.
இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், ``அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்'' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், ``நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்'' என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், ``உணவருந்த வாருங்கள்'' என்றார். சீடர்களுள் எவரும், ``நீர் யார்?'' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்"

பேதுருவும் அவரோடிருந்தவர்கள் அனைவரும் தங்கள் மீன்பிடித்தொழிலில் கைதேர்ந்தவர்கள். அனுபவமுள்ளவர்கள். அன்று அவர்கள் இரவு முழுவதும் தங்கள் அனுபவம், திறமை, உடல் வலி மை அனைத்தையும் பயன்படுத்தி உழைத்துள்ளனர். ஆனால் ஒரு பயனும் இல்லை. ஒன்றும் கிடைக்கவில்லை.உயிர்த்த இறைவன் ஆசீரோடு, ஆலோசனையுடன் அவரது வார்த்தையை நம்பி வலையை வீசுகின்றனர். கை தேர்ந்த தொழிலாளிபோல, "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்" என்று ஆசீரும் ஆலோசனையும் கொடுக்கிறார். வலையை இழுக்க முடியாத அளவு நிறைய மீன்கள் கிடைத்துள்ளன. உங்கள் இயேசு உங்களை விட உங்கள் தொழிலில் நிபுணத்துவம் பெற்றவர். உங்களை விட அவரது அறிவியல் அறிவு, கணித அறிவு, கணணி புலமை,பெரிது. அவர் உருவாக்கி வைத்துள்ளதை இன்று கொஞ்சம் கொஞ்சம் அறிய வருகிறோம்.பெரிய அறிவியல் மேதைளும் பேதுருபோல தங்கள் அறிவின் ஆற்றாமையையும் இயலாமையையும் ஏற்றும் ஆண்டவனின்; படைப்பின் ஞானத்தைப் போற்றியும் வியந்தும் அறிக்கையிடுவதும் அறிவோம். ஆகவே நம் தொழிலில், உழைப்பில் நம்மைப் பெரிதும் நம்புவதைவிட இயேசுவின் ஆசீரையும் ஆலோசனையையும் அதிகமாகத் தேடுவோம். அவரது உதவியைக் கேட்டு செபித்து தினமும் அலுவலகப் பணிகளைத் தொடங்குவோம். வீட்டு வேலைகளைச் செய்வோம். களைப்பு இருக்காது; கஷ்டம் இருக்காது. இழப்பு இருக்காது.எல்லாம் நிறைவாக நிறைந்து இருக்கும். நிறைந்து வழியும். பெற்று இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு எப்போதும் செவிமடுக்க எங்களுக்கு அருள்தாரும்.