யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பாஸ்கா காலம் 4வது வாரம் வியாழக்கிழமை
2013-04-25


முதல் வாசகம்

அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்
1பேதுரு 5:5-14

5 இளைஞர்களே, நீங்கள் முதியவர்களுக்குப் பணிந்திருங்கள். ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், "செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்." 6 ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். 7 உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார். 8 அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. 9 அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? 10 எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார். 11 அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென். 12 நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள். 13 உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். 14 அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

:: ஆண்டவரே, உமது பேரன்பை என்றென்றும் நான் அறிவிப்பேன்.
திருப்பாடல்கள் 89:1-2,5-6,15,16

1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! 2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். பல்லவி
4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி
5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! 7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு16:15-20

இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 15 16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். 17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" என்று கூறினார். 19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். 20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.)

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்றார் (மாற்கு 16:15)

இயேசு கொணர்ந்த நற்செய்தி என்ன? கடவுள் நம்மை அன்புசெய்கிறார்; நாம் கடவுளின் பிள்ளைகளாக இருப்பதால் கடவுள் காட்டும் வழியில் நடந்து சென்று அவரிடத்தில் நிலையான அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டுகொள்ள வேண்டும்; கடவுள் உலகின்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் தன் ஒரே மகனை (இயேசுவை) நமக்கு மீட்பராக அளித்தார்; அவரிடத்தில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். - இதுவே இயேசு கொணர்ந்த நற்செய்தியின் சுருக்கம். இச்செய்தியை இயேசு ஒருசில மனிதர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படவேண்டிய இரகசியமாகக் கருதவில்லை. மாறாக, உலகில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் இந்நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதே இயேசுவின் பார்வை. ஆகவே, அவர் தம் சீடர்களுக்கு ஒரு முக்கிய கட்டளை தருகிறார்: ''உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'' என்பதே இக்கட்டளை. இதை மத்தேயு இன்னும் விரிவாகத் தருகிறார் (காண்க: மத் 28:16-20). இயேசுவின் சீடர்கள் ஆற்ற வேண்டிய முக்கிய பணி ''நற்செய்தி அறிவித்தல்'' ஆகும். இது வெறும் வார்த்தைகளால் நடைபெறுகின்ற நிகழ்வு அல்ல. மாறாக, நற்செய்தி என்பது ஒரு வாழ்க்கை முறை. இயேசுவின் போதனையை உள்ளத்தில் ஏற்று, அதை வாழ்வில் கடைப்பிடிப்பதே நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சம். இதையே நாம் ''சான்று பகர்தல்'' என்கிறோம்.

இவ்வாறு நாம் நற்செய்திக்கு நம் வாழ்வின் வழியாகச் சான்று பகர்ந்தால் உலக மக்கள் நற்செய்தியை அன்னியமாகப் பார்க்கமாட்டார்கள். மேலும், இயேசுவின் போதனை மனிதரை ஓர் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் வழியாக உள்ளது. இவ்வுலகத்தோடு எல்லாமே முடிந்துபோகும் என்றில்லாமல், கடவுளின் ஆட்சி நிறைவுறும் காலம் இவ்வுலகைக் கடந்தது என கிறிஸ்தவ நம்பிக்கை நமக்கு அறிவுறுத்துகிறது. அதே நேரத்தில் இவ்வுலகை அன்பு நிலவும் ஓர் இடமாக, நீதி தவழ்கின்ற தளமாக மாற்றியமைத்திட நாம் உழைக்க வேண்டும் என்பதும் நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சம் ஆகும். இவ்வாறு, இயேசுவைப் பின்செல்வோர் அவருடைய ஆவியால் உந்தப்பட்டு நற்செய்தியின் தூதுவர்களாக மாறினால் இவ்வுலகில் கடவுளின் ஆட்சி இன்னும் தெளிவாகத் துலங்கும். நற்செய்தியை அறிவிப்போர் கிறிஸ்துவையே உலகுக்குக் கொண்டுசெல்கின்ற கருவிகளாகச் செயல்படுவர். நற்செய்தியின் ஆற்றல் இவ்வுலகை உருமாற்றும் திறன் கொண்டது என நாம் உணர்ந்தால் நம் வாழ்வு அனைத்துமே நற்செய்தியில் தோய்ந்ததாக மாறும்.

மன்றாட்டு:

இறைவா, உம் மகன் வெளிப்படுத்திய நற்செய்தியால் நாங்கள் உருமாற்றம் அடைய அருள்தாரும்.