யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பாஸ்கா காலம் 7வது வாரம் வியாழக்கிழமை
2013-05-16


முதல் வாசகம்

ஆண்டவர் அவரருகில் நின்று, "துணிவோடிரும்; எருசலேமில் என்னைப்பற்றி சான்று பகர்ந்தது போல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22;30,23;6-11

30 யூதர்கள் பவுல்மீது என்ன குற்றம் சுமத்துகிறார்கள் என்பதை உறுதியாக அறிய ஆயிரத்தவர் தலைவர் விரும்பினார். எனவே, மறுநாள் தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு அவர் ஆணை பிறப்பித்துப் பவுலை சிறையிலிருந்து கொண்டு வந்து அவர்கள் முன் நிறுத்தினார். 6 அவர்களுள் ஒரு பகுதியினர் சதுசேயர் என்றும், மறுபகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து, "சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்; இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன்" என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார். 7 அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர். 8 சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்; பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர். 9 அங்குப் பெருங்கூச்சல் எழுந்தது. பரிசேயப் பிரிவினைச்சேர்ந்த மறைநூல் அறிஞருள் சிலர் எழுந்து, "இவரிடம் தவறொன்றையும் காணோமே! வானதூதர் ஒருவரோ, ஓர் ஆவியோ இவரோடு பேசியிருக்கலாம் அல்லவா!" என வாதாடினர். 10 வாக்குவாதம் முற்றவே அவர்கள் பவுலைப் பிய்த்தெறிந்து விடுவர் என ஆயிரத்தவர் தலைவர் அஞ்சி படைவீரரை வரச்சொல்லி அவரை அவர்கள் நடுவிலிருந்து பிடித்துக் கோட்டைக்குள் கூட்டிக்கொண்டு செல்லுமாறு ஆணை பிறப்பித்தார். 11 மறுநாள் இரவு" என்றார் ஆண்டவர் அவரருகில் நின்று, "துணிவோடிரும்; எருசலேமில் என்னைப்பற்றி சான்று பகர்ந்தது போல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்
திருப்பாடல்கள் 16;1-2 ,5-11

1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.2 நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன்.பல்லவி

5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;6 இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன; உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே.பல்லவி

7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.பல்லவி

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "தந்தையே, உலகம் தோன்றுமுன்னே நீர் என்மீது அன்புகொண்டு எனக்கு மாட்சி அளித்தீர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17;20-26

20 "அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். 21 எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும். 22 நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன். 23 இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும். 24 "தந்தையே, உலகம் தோன்றுமுன்னே நீர் என்மீது அன்புகொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன். 25 நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள். 26 நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப்பற்றி அவர்களுக்கு அறிவித்;தேன்; இன்னும் அறிவிப்பேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

ஒன்றாய் இருப்பார்களாக! (யோவான் 17:20)

இயேசு ஒற்றுமைக்காகச் செபிக்கிறார். " .. ..எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! " .. ..அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! "அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு .. .. " .. ..அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இயேசுவின் இச் செபம் மக்கள் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதில் அவருக்குள்ள ஆசையையும் ஆர்வத்தையும் எண்பிக்கிறது. அதே வேளையில் இந்த ஒன்றித்து வாழும் ஒற்றுமை வாழ்வில் மனிதன் எத்தனை சிக்கல்களைச் சந்திக்கிறான்; எவை எல்லாம் மனிதனின் ஒற்றுமையைப் பிளவுபடுத்துகின்றன என்பதையும் சிந்திக்கத் தூண்டுகிறார்.

சின்னச் சின்னக் காரணங்கள் கணவன் மனைவியைப் பிரித்துவிடுகிறது. ஒரு அடி நிலம், ஒரு வரப்பு, அண்ணன் தம்பியை அன்னியனாக்கிவிடுகிறது. இரண்டு கிராம் தங்கம்,அக்காள் தங்கையை கட்சிக்காரியாக்கிவிடுகிறது. சில பொருட்கள் உறவை உடைத்து விடுகிறது.சில வெறிகள் சமூக ஒற்றுமையைக் குலைத்து விடுகிறது. சில சுய நலங்கள் நட்பில் வளரும் ஒற்றுமையைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது.

இப்படி எல்லாம் மனிதன் பிளவுபடுவான்; ஒற்றுமைளை இழப்பான் என்பதை இயேசு அறிந்து அவனுக்காகச் செபிக்கிறார். மனிதனை ஒன்றுபட்டு வாழ அழைக்கிறார். நம் குடும்பத்தின் ஒற்றுமையைச் சிதைப்பது எது? உறவில் விரிசலை உண்டாக்குவது எது? சமுதாயத்தில் பிரிவினை ஏற்படுத்துவது எது? அடையாளம் காண்போம். இயேசுவோடு செபித்து ஒன்றித்து வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் காட்டுகின்ற வழியில் நாங்கள் நடந்து சென்று உம்மைக் கண்டடைய அருள்தாரும்.