யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பொதுக்காலம் 7வது வாரம் புதன்கிழமை
2013-05-22


முதல் வாசகம்

ஞானத்தை நம்புவோர் அதனை உரிமையாக்கிக் கொள்வர்;
சீராக் ஆகமம் 4;11-19

1 ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும்; தன்னைத் தேடுவோர்க்குத் துணைநிற்கும். 12 ஞானத்திற்கு அன்பர் வாழ்விற்கும் அன்பர்; அதனை வைகறையிலேயே தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர். 13 அதனைப் பற்றிக்கொள்வோர் மாட்சியை உரிமையாக்கிக்கொள்வர்; அது செல்லும் இடமெல்லாம் ஆண்டவர் ஆசி வழங்குவார். 14 அதற்குப் பணி செய்வோர் தூய இறைவனுக்கே ஊழியம் புரிகின்றனர்; ஞானத்துக்கு அன்பர் ஆண்டவருக்கும் அன்பர். 15 ஞானத்துக்குப் பணிவோர் மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்குவர்; அதற்குச் செவிசாய்ப்போர் பாதுகாப்பாய் வாழ்வர்; 16 ஞானத்தை நம்புவோர் அதனை உரிமையாக்கிக் கொள்வர்; அவர்களுடைய வழி மரபினரும் அதனை உடைமையாக்கிக் கொள்வர்; 17 முதலில் அவர்களை அது கோணல் வழியில் அழைத்துச் செல்லும்; அவர்களுக்கு அச்ச நடுக்கத்தை வருவிக்கும்; தனக்கு அவர்கள்மீது நம்பிக்கை ஏற்படும்வரை அவர்களை அது கண்டிக்கும், வதைக்கும்; தன் நெறிமுறைகளால் அவர்களைச் சோதிக்கும். 18 அது மீண்டும் அவர்களிடமேவந்து அவர்களை மகிழ்விக்கும்; அவர்களுக்குத் தன் இரகசியங்களை வெளிப்படுத்தும். 19 அதைவிட்டு அவர்கள் விலகிச் சென்றால், அவர்களை அது கைவிட்டுவிடும்; அழிவுக்கு அவர்களை இட்டுச் செல்லும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உம் வாக்கைக் குறித்து என் நா பாடுவதாக! ஏனெனில், உம் கட்டளைகள் எல்லாம் நீதியானவை.
திருப்பாடல்கள் 119;165;168, 171-172,174-175

உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை. உம் நியமங்களையும் ஒழுங்குமுறைகளையும் நான் கடைப்பிடிக்கின்றேன்; ஏனெனில், என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவை. பல்லவி

உம் விதிமுறைகளை எனக்கு நீர் கற்பிப்பதால், என் இதழ்களினின்று திருப்புகழ் பொங்கிவரும். உம் வாக்கைக் குறித்து என் நா பாடுவதாக! ஏனெனில், உம் கட்டளைகள் எல்லாம் நீதியானவை பல்லவி .

ஆண்டவரே! உம்மிடமிருந்து வரும் மீட்பை நான் நாடுகின்றேன்; உமது திருச்சட்டத்தில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். உயிர்பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக! உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக!


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு 9;38-40

அப்பொழுது யோவான் இயேசுவிடம், "போதகரே , ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்றார். 39 அதற்கு இயேசு கூறியது; "தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார். 40 ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

எதிராக இராதவர்; சார்பாக இருக்கிறார்

எதிரி, அவன் எதுவுமே செய்யக்கூடாது; செய்ய விடக்கூடாது.அதுவும் நல்லது செய்து பாராட்டு பெறுவது என்றால் சகிக்க முடியுமா! "போதகரே , ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்று யோவான் சொன்னபோது இந்த எண்ணம் பிரதிபலிக்கிறதல்லவா?

இயேசு இத்தகைய எண்ணங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக நல்லவைகள் யாரிடமிருந்து வெளிப்பட்டாலும், நற்செயல்கள் யார் செய்தாலும், ஏன் எதிரியிடமிருந்தே நல்லவை வந்தால், அவை குறித்துப் பெருமைப்பட வேண்டும்; அவர்களைப் பாராட்ட வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்துகிறார்.

யாராயினும், எதிரியாயினும் நல்லவற்றைச் செய்யும் போது அங்கே ஒரு போட்டி உருவாகிறது. போட்டிகள் அவசியம். போட்டிகள் வளர்ச்சியின் அறிகுறி. அவை பொறாமையாக மாறிவிடக்கூடாது. நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். இவ்வாறு எதிரிகளைச் சம்பாதிப்பதற்குப் பதிலாக நண்பர்களைச் சம்பாதித்துக்கொண்டால், நம் வாழ்வும் நிம்மதி நிறைந்ததாக இருக்கும். நம்மிடையே நல்லவை பலவும் நடைபெறும். பெற்று இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் தூய ஆவி எந்நாளும் எங்களோடு இருந்து எங்களை வழிநடத்துவதை உணர்ந்து நாங்கள் ஆறுதல் அடைந்திட அருள்தாரும்.