யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பொதுக்காலம் 8வது வாரம் திங்கள்கிழமை
2013-05-27

புனித அகுஸ்தீனார்


முதல் வாசகம்

ஆண்டவர் நல்லவர்; அவர் தம் படைப்புகளை அறிவார்
சீராக் ஆகமம் 17;20-29

20 அவர்களுடைய அநீதியான செயல்கள் அவருக்கு மறைவாய் இருப்பதில்லை; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் ஆண்டவர் அறிவார். 21 (ஆண்டவர் நல்லவர்; அவர் தம் படைப்புகளை அறிவார். அவற்றை அவர் விட்டுவிடவில்லை, கைவிடவுமில்லை; மாறாகப் பாதுகாத்தார்.) 22 மனிதர் செய்யும் தருமங்கள் அவருக்குக் கணையாழிபோல் திகழ்கின்றன; அவர்கள் புரியும் அன்புச் செயல்கள் அவருக்குக் கண்மணிபோல் விளங்குகின்றன. 23 பின்னர் அவர் எழுந்து அவர்களுக்குக் கைம்மாறு செய்வார்; அவர்களுக்குச் சேரவேண்டிய வெகுமதியை அவர்களின் தலைமேல் பொழிவார். 24 இருப்பினும் மனம் வருந்துவோரைத் தம்பால் ஈர்த்துக்கொள்கிறார் நம்பிக்கை இழந்தோரை ஊக்குவிக்கிறார். 25 ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; பாவங்களை விட்டு விலகுங்கள்; அவர் திருமுன் வேண்டுங்கள்; குற்றங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள். 26 உன்னத இறைவனிடம் திரும்பி வாருங்கள்; அநீதியை விட்டு விலகிச் செல்லுங்கள்; அவர் அருவருப்பதை அடியோடு வெறுத்திடுங்கள். 27 வாழ்வோர் உன்னத இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்; ஆனால் கீழுலகில் அவரது புகழை யாரே பாடுவர்? 28 உயிர் வாழ்ந்திராதவர் போன்றே இறந்தவர்களும் அவருக்கு நன்றி செலுத்துவதில்லை; உடல் நலத்துடன் உயிர் வாழ்வோரோ அவரைப் போற்றுகின்றனர். 29 ஆண்டவரின் இரக்கம் எத்துணைப் பெரிது! அவரிடம் மனந்திரும்புவோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்
திருப்பாடல்கள் 32;1-2,5-7

1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர்.பல்லவி

2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர் பல்லவி.

5 'என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.பல்லவி

6 ஆகவே, துன்ப வேளையில்; உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்; பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது.பல்லவி

7 நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு 10;17-27

17 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, "நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று அவரைக் கேட்டார். 18 அதற்கு இயேசு அவரிடம், "நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. 19 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? "கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட"" என்றார். 20 அவர் இயேசுவிடம், "போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்" என்று கூறினார். 21 அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்று அவரிடம் கூறினார். 22 இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. 23 இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்" என்றார். 24 சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, "பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். 25 அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார். 26 சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்?" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 27 இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, 'நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்று அவரைக் கேட்டார்'' (மாற்கு 10:17)

இயேசுவைத் தேடி வந்த இந்த மனிதரைப் பற்றிய செய்தியை ஒத்தமைவு நற்செய்தியாளர் மூவரும் குறித்துள்ளனர் (காண்க: மத் 19:16-30; மாற் 10:17-31; லூக் 18:18-30). இந்த மனிதர் இயேசுவை வழியில் எதிர்பாராத விதத்தில் சந்திக்கவில்லை; மாறாக, இயேசு எருசலேமை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார் என்பதை அறிந்து, ''ஓடிவந்து'' இயேசுவின் முன்னிலையில் தாள்பணிகின்றார். ''முழந்தாள்படியிடுவது'' சீடர் தம் குருவுக்குக் காட்டுகின்ற மரியாதையின் அடையாளம். எனவே, இந்த மனிதர் ஒருவிதத்தில் ஏற்கெனவே இயேசுவின் சீடராகத் தம்மைக் கருதி, தம் குருவிடமிருந்து நற்போதனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் நல்ல எண்ணத்தோடு இயேசுவை அணுகுகிறார். ''நல்ல போதகரே'' என அவர் இயேசுவை அழைப்பதும் கருதத் தக்கது. அதற்கு இயேசு, ''நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே'' என்று பதிலளிக்கிறார் (மாற் 10:18). இயேசு கடவுளுக்கு உரிய பண்புகள் தமக்கு உரியவை என இங்கே உரிமை பாராட்டிப் பெருமை கொள்ளவில்லை. அதே நேரத்தில் கடவுளின் நற்பண்புகள் தம்மில் துலங்கியதால்தான் அம்மனிதர் தம்மை ''நல்லவர்'' எனக் கூறுகிறார் என்பதையும் இயேசு மறைமுகமாக ஏற்கிறார். ''நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'' (மாற் 10:17) என்னும் கேள்வி நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுகின்ற கேள்வியே. இம்மண்ணக வாழ்வோடு மனிதரின் இலட்சியங்கள் மடிந்துவிடுவதில்லை. சாவுக்குப் பின் வாழ்வுண்டு என்னும் உறுதிப்பாடு மனித உள்ளத்தில் ஆழப் பதிந்த ஒன்று.

எனவே, ''நிலைவாழ்வை'' அடைய வேண்டும் என்னும் உள்ளார்வத்தால் நாம் உந்தப்பட்டு, நிறைவடைய முனைகின்ற வேளையில் அக்குறிக்கோளை எட்டுவதற்கான வழியைத் தேடுவது இயல்பே. இயேசு அவ்வழியை நமக்குக் காட்டுகிறார். அவரை முழு மனத்தோடும் விருப்போடும் பின்செல்வோர் அவர் வாக்களிக்கின்ற நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வர். அதற்கு நிபந்தனையாக இயேசு நமக்குக் கூறுவது: ''கடவுளிடமிருந்து உங்களைப் பிரிக்கின்ற அனைத்தையும் துறந்துவிடுங்கள்; கடவுளையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்''. இயேசுவின் குரலுக்குச் செவிமடுப்போர் அவர் காட்டிய வழியில் நடப்பார்கள். அந்த வழி நம்மை நிலைவாழ்வுக்கு இட்டுச் செல்லும்.

மன்றாட்டு:

இறைவா, நிலைவாழ்வை நோக்கி நாங்கள் பயணம் சென்றிட எங்களுக்கு அருள்தாரும்.