யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பொதுக்காலம் 8வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-05-31

கன்னிமரியாள் எலிசபேத்தைச் சந்தித்தல்


முதல் வாசகம்

சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம்.
செப்பனியா 3;14-18

14 மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. 15 ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். 16 அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்; "சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். 17 உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். 18 அது திருவிழாக் காலம்போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்
எசாயா 12;2-6

2 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. பல்லவி

3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.பல்லவி

4 அந்நாளில் நீங்கள் சொல்வதாவது; ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;பல்லவி

மக்களினங்களிடையே அவர்செயல்;களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள்.பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.பல்லவி

6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா 1;39-56

39 அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். 40 அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். 41 மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். 42 அப்போது அவர் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! 43 என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? 44 உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. 45 ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார். 46 அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்; 47 "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. 48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். 49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். 50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். 51 அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். 52 வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். 53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். 54 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவி;ல் கொண்டுள்ளார்; 55 தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார் ". 56 மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்'' (லூக்கா 1:42)

இயேசுவை இவ்வுலகில் பெற்றுத் தந்த பெருமையுடைத்தவர் மரியா. அவரைத் திருச்சபை கன்னித் தாய் எனப் போற்றுகின்றது. கடவுளின் ஆவி வல்லமையோடு இறங்கிவந்ததால் மரியா கடவுளின் வார்த்தையைத் தம் வயிற்றில் தாங்கிக் குழந்தை இயேசுவாக ஈன்றளித்தார். எனவே, மரியாவை நாம் ''கடவுளின் தாய்'' எனவும் போற்றுகின்றோம். இத்தகைய உயர்ந்த பேற்றினை மரியா பெற்றதால் அவர் உண்மையிலேயே பெண்களுக்குள் ஆசிபெற்றவர்தாம் (காண்க: லூக் 1:42). மரியாவின் உறவினராகிய எலிசபெத்து உரைத்த வாழ்த்துரையை நாமும் மரியாவுக்கப் புகழாரமாகச் சூடுகின்றோம். மரியா ஆசிபெற்றவர் என்பதன் பொருள் என்ன? கடவுள் மரியாவைத் தம் மகனின் தாயாகத் தேர்ந்துகொண்டார் என்பதே இங்குக் குறிக்கப்படுகின்ற ஆழ்ந்த பொருள். இவ்வாறு தாய்மைப் பேறு எய்திய மரியா நம் தாயாகவும் இருக்கின்றார். நாம் மரியாவைப் போன்று கடவுளை முற்றும் நம்புகின்ற போது கடவுளின் செயல் நம்மிலும் வல்லமையோடு துலங்கும். கடவுளின் திருவுளத்தை நாம் ஏற்போம்; அதன்படி செயல்படுவோம்.

மரியா ஆசிபெற்றவர் என்பதன் இன்னொரு பொருள் அவர் தம் மகன் இயேசுவின் சீடராக மாறினார் என்பதாகும். சீடர்கள் எப்பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என இயேசு போதித்தார். அப்பண்புகளை மரியா தலைசிறந்த விதத்தில் கொண்டிருந்தார். அவர் தம்மை முழுவதும் கடவுளிடம் கையளித்தார். நாமும் அவ்வாறு செய்யும்போது உண்மையிலேயே பேறுபெற்றவர் ஆவோம். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மரியா சிறந்த முன்மாதிரியாக உள்ளார். அதாவது, மரியாவிடம் துலங்கிய நற்பண்புகள் மனிதர் அனைவருக்கும் பொருந்துவனவே. பெண்களோடு பெண்ணாக மரியா உள்ளார் என்பதால் அவருக்கும் பெண்களுக்கும் இடையே ஒரு சிறப்பு உறவு உள்ளது என்றாலும், மரியா மனித இனத்திற்கே ஒரு சிறந்த முன்னோடியாக இருக்கின்றார். மனிதர் எவ்வாறு கடவுளை முழுமையாக ஏற்று வாழ முடியும், வாழ வேண்டும் என்பதற்கு மரியா எடுத்துக்காட்டாக அமைகிறார்.

மன்றாட்டு:

இறைவா, அன்னை மரியாவிடம் துலங்கிய தாழ்ச்சியை நாங்கள் பெற்றிட அருள்தாரும்.