யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பொதுக்காலம் 11வது வாரம் திங்கள்கிழமை
2013-06-17


முதல் வாசகம்

இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!
புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதியஇரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 6;1-10

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ``தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்'' எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்! எவரும் குறைகூறா வண்ணம் எங்கள் திருப்பணியை ஆற்ற விரும்புகிறோம். எனவே நாங்கள் எவருக்கும் இடையூறாக இருப்பதில்லை. மாறாக அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்; வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை மிகுந்த மன உறுதியோடு தாங்கி வருகிறோம். நாங்கள் அடிக்கப்பட்டோம்; சிறையில் அடைக்கப்பட்டோம்; குழப்பங்களில் சிக்கினோம்; பாடுபட்டு உழைத்தோம்; கண்விழித்திருந்தோம்; பட்டினி கிடந்தோம்; தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக் கிறோம்; உண்மையையே பேசி வருகிறோம்; கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம். நேர்மையே எங்கள் படைக்கலம். அதை வலக்கையிலும் இடக்கையிலும் நாங்கள் தாங்கியுள்ளோம். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை. ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும் நாங்கள் உண்மையான பணியாளர்கள். அறிமுகமில்லாதோர் எனத் தோன்றினாலும் எல்லாரும் எங்களை அறிவர். செத்துக் கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோர் எனத் தோன்றினாலும் நாங்கள் கொல்லப்படவில்லை. துயருற்றோர் எனத் தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏழையர் எனத் தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம். எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
திருப்பாடல்கள் 98;1-4

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ய இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3b உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் 5;38-42

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: `` `கண்ணுக்குக் கண்', `பல்லுக்குப் பல்' என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'தீமை செய்வோரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்' என்றார்'' (மத்தேயு 5:39)

நமக்கு எதிராக அநீதியான முறையில் செயல்பட்டு நம்மை வன்முறையாகத் தாக்குவோரை நாம் என்ன செய்வது? இயேசுவின் போதனைப்படி, வன்முறையை வன்முறையால் எதிர்ப்பது சரியா அல்லது வன்முறைக்கு முன் நாம் பணிந்து செல்ல வேண்டுமா? அநீதிகளை நாம் எதிர்க்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் போதனை. ஆனால் அநீதியை நாம் வன்முறையால் எதிர்ப்பது சரியல்ல என்று இயேசு கற்பிக்கிறார். தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பிறரை வன்முறையால் தாக்குவோரை நாம் எவ்வாறு நடத்துவதது என்பதற்கு இயேசு மூன்று எடுத்துக்காட்டுகள் தருகிறார். வலது கையின் பின்புறத்தைக் கொண்டு பிறருடைய கன்னத்தில் அறைவது அவர்களை இழிவுபடுத்தும் செயலாகக் கருதப்பட்டது. அச்சூழ்நிலையில் பழிக்குப் பழி என்று எண்ணாமல், நாம் இடது கன்னத்தைக் காட்டினால் நம்மைத் தாக்குவோர் வலது கையின் பின்புறத்தைக் கொண்டு நம்மை இன்னொரு முறை அறைய இயலாது. இதனால் அவர் வெட்கமுற்றுத் தம் நடத்தையைத் திருத்தலாம் (மத் 5:39). இரண்டாம் எடுத்துக்காட்டு அக்கால மனிதர் உடுத்துகின்ற ஆடைகளைப் பற்றியது. கடன் கொடுத்த ''ஒருவர் உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள்'' என இயேசு கூறுகிறார் (மத் 5:40). அக்காலத்தில் மக்கள் உள்ளாடை (அங்கி), மேலாடை என இரண்டு ஆடைகளை அணிவது வழக்கம். பெற்ற கடனைத் திருப்பிக் கொடுக்க இயலா நிலையில் உள்ள ஏழை மனிதரிம் சென்று, அவருடைய உள்ளாடையைப் பறிக்க வருபவரிடம் தம் மேலாடையையும் கொடுத்துவிட்டால் அம்மனிதர் அம்மணமாகத்தான் நிற்பார். இதைக் கண்டாவது கடன் கொடுத்த மனிதர் வெட்கமுற்று, தம் செயல் முறையற்றது என உணர்ந்து மனம் மாறலாம் என்பது எதிர்பார்ப்பு. இங்கே அக்காலத்தில் நிலவிய அநீதியான பொருளாதார அமைப்பை இயேசு கடிந்துகொள்கிறார். மேலும் கடன் கொடுத்தவரும் கடன் பெற்றவரும் கடவுள் முன் அம்மணமாகவே உள்ளனர் என்பதால் அவர்களுடைய மனித மாண்பு மீறத் தகாதது எனவும் இயேசு குறிப்பாக உணர்த்துகிறார்.

மூன்றாம் எடுத்துக்காட்டு உரோமைப் படைவீரர்களின் செயல் பற்றியது. தமக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி படைவீரர்கள் சாதாரண மக்களைக் கட்டாயப்படுத்தித் தம் பொருள்களைச் சுமந்து வழிநடக்க வற்புறுத்தும் பழக்கம் இருந்தது. இவ்வாறு ஒரு கல் தொலை செல்லக் கட்டாயப்படுத்தினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இரண்டு கல் தொலை செல்வதாக இருந்தால் அந்தப் படைவீரருக்கு அவருடைய மேலதிகாரிகளிடமிருந்து தண்டனை கிடைக்கும் (மத் 5:41). இவ்வாறு ''இன்னா செய்தாருக்கும் இனியவே செய்யும்போது'' (குறள் 987) அவர்கள் வெட்கமுற்று மனம் திரும்பலாம் என்பது எதிர்பார்ப்பு. இயேசு கூறிய இந்த மூன்று எடுத்துக்காட்டுகளிலும் பிற்காலத்தில் மகாத்மா காந்தி வழங்கிய அகிம்சைக் கொள்கை துலங்குவதை நாம் காணலாம். வள்ளுவர் ''இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு?'' எனக் கூறும் செய்தியும் இயேசுவின் போதனையை எதிரொலிப்பதை இங்கே நாம் காணலாம்.

மன்றாட்டு:

இறைவா, பழி வாங்கும் மனப்பான்மையை நாங்கள் களைந்திட அருள்தாரும்.