யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பொதுக்காலம் 12வது வாரம் வியாழக்கிழமை
2013-06-27

புனித சிறில் ஆயர்


முதல் வாசகம்

ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 16: 1-12,15-16

அந்நாள்களில் ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லை. சாராய்க்கு ஆகார் என்ற எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள். சாராய் ஆபிராமிடம், ``ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும். ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்'' என்றார். ஆபிராம் சாராயின் சொல்லைக் கேட்டார். ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்த பின், அவர் மனைவி சாராய் எகிப்தியப் பணிப்பெண் ஆகாரைத் தம் கணவருக்கு மனைவியாகக் கொடுத்தார். அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள். அப்பொழுது சாராய் ஆபிராமிடம், ``எனக்கு இழைக்கப்பட்ட தீங்கு உம்மேல் இருக்கட்டும். நீர் தழுவும்படி நானே கொடுத்த என் பணிப்பெண், அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கண்டதிலிருந்து என்னை ஏளனமாக நோக்குகிறாள். ஆண்டவரே எனக்கும் உமக்கும் நீதி வழங்கட்டும்'' என்றார். ஆபிராம் சாராயிடம், ``உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள். உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்'' என்றார். இதற்குப் பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள். ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது. அவர் அவளை நோக்கி, ``சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?'' என்று கேட்டார். அதற்கு அவள், ``என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்'' என்றாள். ஆண்டவரின் தூதர் அவளிடம், ``நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட'' என்றார். பின்பு ஆண்டவரின் தூதர் அவளிடம், ``உன் வழிமரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்'' என்றார். மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், ``இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு `இஸ்மயேல்' எனப் பெயரிடுவாய். ஏனெனில் உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார். ஆனால் அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லாரையும் அவன் எதிர்ப்பான். எல்லாரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்'' என்றார். ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார். ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்!
திருப்பாடல்கள் 106;1-5

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்! என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு! பல்லவி

2 ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை யாரால் இயம்ப இயலும்? அவர்தம் புகழை யாரால் விளம்பக் கூடும்? பல்லவி

3 நீதிநெறி காப்போர் பேறுபெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபெற்றோர்! பல்லவி

4 ஆண்டவரே! நீர் உம் மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவுகூரும்! பல்லவி

4b அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணை செய்யும்! 5 நீர் தேர்ந்தெடுத்த மக்களின் நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்; பல்லவி

உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்! அப்போது, உமது உரிமைச் சொத்தான மக்களோடு உம்மைப் போற்றிட இயலும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ன்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?' என்பர். அதற்கு நான் அவர்களிடம், `உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்' என வெளிப்படையாக அறிவிப்பேன். ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.'' இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்' என்றார்'' (மத்தேயு 7:24)

அறிவாளி என்றால் யார், அறிவிலி என்றால் யார்? - இக்கேள்விக்கு விடை பழைய ஏற்பாட்டு நூல்களில், குறிப்பாக நீதி மொழி போன்ற ''ஞான இலக்கிய'' நூல்களில் காணப்படுகிறது. அறிவாளி என்பவர் ''ஞானி''; அறிவிலி என்பவர் ''மூடர்''. இவர்களை முறையே ''நேர்மையாளர்'' (''நல்லார்'') எனவும் ''தீயோர்'' (''பொல்லார்'') எனவும் விவிலியம் குறிப்பிடுகிறது (காண்க: நீமொ 12:5-15). ஆக, உண்மையான அறிவும் ஞானமும் கொண்ட மனிதர்கள் கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுத்து, அதன்படி நடப்பார்கள். இயேசு தம் சீடர்களிடமிருந்து இத்தகைய நடத்தையை எதிர்பார்க்கிறார். அவருடைய வார்த்தையைக் கேட்பதோடு நாம் நின்றுவிடக் கூடாது. அதுபோலவே, அவரை நோக்கி ''ஆண்டவரே, ஆண்டவரே'' என அழைப்பதோடு நாம் நிறுத்திக் கொள்ளக் கூடாது (காண்க: மத் 7:21). மாறாக, இயேசுவின் போதனைகளை நாம் உள்வாங்கி, அதை வெளி நடத்தையிலும் எண்பிக்க வேண்டும். அப்போது, நாம் கேட்ட இறைவார்த்தை நம் வாழ்வில் எதார்த்தமாகும். வெறும் சொல்லளவில் நிற்போர் பெரிய சாதனைகளை நிகழ்த்த இயலாது. மாறாக, சொல்லும் செயலும் இணையும்போதுதான் அங்கே நலமான விளைவுகள் ஏற்படும்.

இயேசுவின் போதனை நம் உள்ளத்தில் மாற்றம் கொணர வேண்டும். அந்த மாற்றம் வெறும் உள்ளளவிலேயே நின்றுவிடக் கூடாது. மாறாக, நம் உள்ளத்தை மாற்றுகின்ற அதே வார்த்தை நம் செயல்களையும் அதற்கு ஏற்ப நிர்ணயிக்க வேண்டும். இயேசு நமக்குப் ''பாறை'' போன்ற உறுதியான அடித்தளமாக இருக்கின்றார். அந்த அடித்தத்தின்மீது நம் வாழ்க்கை எழும்போது அது உறுதியாக நிலைக்கும். அடித்தளமே ஆட்டம் கண்டுவிட்டால் அதன்மீது கட்டப்பட்ட கட்டடம் தகர்ந்துவிழும். அந்நிலை நமக்கு ஏற்படாதவாறு நாம் கவனமாயிருக்க வேண்டும். பாறைமீது வீடு கட்டினால் அந்த வீட்டின் அடித்தளம் உறுதியாக இருக்கும். இயேசுவின் போதனை நமக்கு உறுதியான அடித்தளமாகும்போது நாம் நிலைகுலைந்து விழ மாட்டோம். ஏனென்றால் நாம் தடுமாறுகிற வேளைகளிலும் இயேசு நம்மைத் தாங்கிக் கொள்வார். அவருடைய போதனை நமக்கு அரணாக இருந்து நமக்குப் பாதுகாப்பாக அமையும். உறுதியான அடித்தளம் இருந்தால் நம் வாழ்வில் ஏற்படுகின்ற துன்பங்களைக் கண்டு நாம் அச்சமுற மாட்டோம். மாறாக, நமக்காகத் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் ஒரு குற்றவாளி போல உயிர்துறந்த இயேசு தம்மை எதிர்கொண்டு வந்த துன்பங்களைக் கண்டு பயந்து ஓடவில்லை. மாறாக, அவர் துன்பத்தைத் தழுவிக் கொண்டார். நாமும் இயேசுவைப் பின்சென்று, துன்பங்களைத் தாங்கிக்கொண்டால் நம் கட்டிய வீடு உறுதியாய் இருக்கும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் உம்மையே அடித்தளமாகக் கொண்டு எழுந்த இல்லம் என உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.