யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பொதுக்காலம் 12வது வாரம் சனிக்கிழமை
2013-06-29

புனிதர்கள் பேதுரு பவுல்


முதல் வாசகம்

ஏரோதின் கையிலிருந்து ஆண்டவர் என்னை விடுவித்துக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11

அந்நாள்களில் ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்ப விழா நாள்களில் நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப் பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது. ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, ``உடனே எழுந்திடும்'' என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன. வானதூதர் அவரிடம், ``இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக்கொள்ளும்'' என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர் அவரிடம், ``உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்'' என்றார். பேதுரு வானதூதரைப் பின்தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரை விட்டு அகன்றார். பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, ``ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்
திருப்பாடல்கள் 34: 1-2. 3-4. 5-6. 7-8

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.பல்லவி

2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்பல்லவி.

4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.பல்லவி

6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர். பல்லவி

8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி

இரண்டாம் வாசகம்

இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 17-18

அன்பிற்குரியவரே, நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

அக்காலத்தில் இயேசு பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ``மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ``யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இரு துருவங்களும், இரு தூண்கள்!

திருத்தூதர் பேதுரு, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று விசவாச அறிக்கையிட்ட பின், உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார். ஏன் நீங்கள் விசுவாச அறிக்கை செய்யவில்லையா? ஆமாம். தினமும் செய்கிறீர்கள். ஆகவே நீங்களும் பாறைதான். அந்த பாறையின் ஒரு பகுதிதான்.உங்கள் விசுவாசம் உறுதியாக இருந்தால், நீங்களும் பாறைதான். உங்களை யாரும் எதுவும் அசைக்க முடியாது. எந்த தீங்கும் உங்களை அணுகாது. தீண்டாது. மேற்கொள்ளாது.அந்த பாறையிடம் வழங்கப்பட்ட ஆற்றல் அனைத்திலும் உங்களுக்கும் பங்கு உண்டு. அந்த பாறையிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு அனைத்திலும் உங்களுக்கும் பங்கு உண்டு. விண்ணரசின் திறவுகோல்களை நான் உங்களிடம் கொடுத்துள்ளார். இறை ஆட்சியில் பங்கு கொள்வது முற்றலும் உங்கள்பொறுப்பு.அதே வேளையில் நாம் அனைவரும் ஒன்றாக ஒரே குடும்பமாக, ஒரே ஆட்சியின் பங்காளிகளாகவும் இருப்பதால் ஒருவருக்கொருவர்கூட்டுறவில் வாழ்வின் முழுமையை அடைகிறோம். இனிது வாழுங்கள்.

மன்றாட்டு:

ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இருவேறு துருவங்களாய் இருந்த பேதுருவையும், பவுலையும் உமது திருத்தூதர்களாக அழைத்து, பெருமைப்படுத்தினீரே, உமக்கு நன்றி. அவர்களைப் போல நாங்களும் உமது பெருமைமிகு சாட்சிகளாக வாழ அருள்தந்தருளும். ஆமென்.