யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 14வது வாரம் சனிக்கிழமை
2013-07-13

புனித கென்றி


முதல் வாசகம்

கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். இந்த நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 49: 29-32; 50: 15-26

அந்நாள்களில் யாக்கோபு தம் புதல்வர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: ``இதோ நான் என் இனத்தவரோடு சேர்க்கப்பட இருக்கிறேன். என்னை என் தந்தையருடன் இத்தியனான எப்ரோனின் நிலத்திலுள்ள குகையில் அடக்கம் செய்யுங்கள். அது கானான் நாட்டில் மம்ரே பகுதிக்கு அருகேயுள்ள மக்பேலாவின் நிலத்தில் அமைந்துள்ளது. ஆபிரகாம் இத்தியனான எப்ரோனிடமிருந்து அந்த நிலத்தை கல்லறை நிலத்திற்கென விலைக்கு வாங்கினார். அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவி சாராவையும் அடக்கம் செய்தனர்; அங்கு ஈசாக்கையும் அவர் மனைவி ரெபேக்காவையும் அடக்கம் செய்தனர்; அங்கேதான் நானும் லேயாவை அடக்கம் செய்துள்ளேன். அந்நிலமும் அக்கல்லறையும் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கப்பெற்றவை.'' யாக்கோபு தம் புதல்வர்களுக்குக் கட்டளைகளை வழங்கி முடித்தபின், தம் கால்களைப் படுக்கையினுள் மடக்கிக்கொண்டு உயிர் நீத்து, தம் இனத்தாருடன் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அப்பொழுது, யோசேப்பின் சகோதரர் தங்கள் தந்தை இறந்துவிட்டதைக் கண்டு, ``யோசேப்பு நாம் அவருக்குச் செய்த அனைத்துத் தீமைகளையும் கருதி, இப்பொழுது நம்மை வெறுத்து உறுதியாகப் பழிவாங்குவார்'' என்று எண்ணினர். எனவே அவர்கள் யோசேப்புக்கு இவ்வாறு செய்தி அனுப்பினர்: ``உம் தந்தை இறப்பதற்குமுன், `உன் சகோதரர் உனக்குத் தீங்கிழைத்ததன் மூலம் உண்டான குற்றப்பழியையும், பாவத்தையும் மன்னித்துவிடு என்று யோசேப்புக்குச் சொல்லுங்கள்' என்று எங்களுக்குக் கட்டளையிட்டார். ஆகவே, இப்பொழுது உம் தந்தையின் கடவுளுடைய அடியார்களாகிய எங்களின் குற்றப்பழியை மன்னித்தருளும்.'' அவர்கள் இதைத் தம்மிடம் அறிவித்தபோது யோசேப்பு அழுதார். அவர் சகோதரரும் அழுது அவர்முன் தாள் பணிந்து, `நாங்கள் உம் அடிமைகள்' என்றனர். யோசேப்பு அவர்களிடம், ``அஞ்சாதீர்கள்; நான் கடவுளுக்கு இணையானவனா? நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை இன்று நடப்பதுபோல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார். ஆகவே இப்பொழுது அஞ்சவேண்டாம். உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நான் பேணிக் காப்பேன்'' என்றார். இப்படியாக அவர் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்; அவர்களுடன் இதமாகப் பேசிவந்தார். யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும் எகிப்தில் குடியிருந்தனர். யோசேப்பு நூற்றுப் பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும் மனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார். யோசேப்பு தம் சகோதரரிடம், ``நான் சாகும் வேளை வந்துவிட்டது. ஆனால் கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தாம் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்கு இந்த நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்'' என்றார். மீண்டும் யோசேப்பு, ``கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். அப்பொழுது நீங்கள் என் எலும்புகளை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்'' என்று சொல்லி, இஸ்ரயேல் புதல்வரிடமிருந்து உறுதிமொழி பெற்றுக்கொண்டார். யோசேப்பு தம் நூற்றுப்பத்தாம் வயதில் இறந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்
திருப்பாடல்கள் 105: 1-2. 3-4. 6-7

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! பல்லவி

3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 24-33

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரை விடப் பெரியவர் அல்ல. சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக் குறைவாகப் பேச மாட்டார்களா? எனவே, அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில் வெளிப் படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல் தளத்திலிருந்து அறிவியுங்கள். ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள். மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடரை நோக்கி, 'சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்' என்றார்'' (மத்தேயு 10:31)

கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை அறிவிக்க இயேசு தம் சீடர்களை அனுப்புகிறார். அப்போது அவர்கள் சந்திக்கப் போகின்ற எதிர்ப்புகள் பல உண்டு எனவும் இயேசு கூறுகிறார். ஆனால் எந்த எதிர்ப்பைக் கண்டும் சீடர்கள் அஞ்ச வேண்டியதில்லை. மூன்று முறை இயேசு இவ்வாறு தம் சீடர்களுக்கு ஊக்கமூட்டுகிறார் (காண்க: மத் 10:26,28,31). சீடர்கள் நற்செய்திப் பணியில் ஈடுபடும்போது அவர்களைத் தரக்குறைவாகப் பேசுகின்ற மனிதரைக் கண்டு ''அஞ்ச வேண்டாம். ஏனெனில் உண்மை ஒருநாள் வெளிப்படத்தான் செய்யும். அப்போது சீடர் கடவுளின் வல்லமையால் உண்மையையே அறிவித்தனர் என்பது எல்லாருக்கும் தெரியவரும்'' (காண்க: மத் 10:25-26). இயேசு மக்களுக்கு வழங்கிய செய்தி ஒளிவுமறைவாக, காதோடு காதாய் ஊதப்பட வேண்டிய இரகசியச் செய்தி அல்ல. மாறாக, அது எல்லா மக்களுக்கும் வெளிப்படையாக அறிவித்து முழங்கப்பட வேண்டிய நல்ல செய்தி (மத் 10:27). இவ்வாறு சீடர்கள் துணிந்து செயலாற்றும்போது அவர்களைத் துன்புறுத்தவும், ஏன் கொன்றுபோடவும் தயங்காதோர் இருப்பார்கள். ஆனால் அவர்களால் சீடர்களின் உடலைத்தான் சிதைக்க முடியுமே ஒழிய அவர்களது ஆன்மாவை, உள்ளார்ந்த நம்பிக்கையைச் சிதைக்க இயலாது. எனவே, தங்களை எதிர்த்துநின்று, கொலைசெய்யவும் தயங்காதவர்களைக் கண்டு சீடர்கள் ''அஞ்ச வேண்டாம்'' என இயேசு கூறுகிறார் (மத் 10:28).

நற்செய்தியை அறிவிக்க அனுப்பப்படுகின்ற சீடர்களைக் கடவுள் அன்போடு பாதுகாத்துப் பராமரிப்பார் என்பதையும் இயேசு உணர்த்துகிறார். கடவுளின் பராமரிப்பு எத்தகையது என விளக்க இயேசு ஒரு சிறு உவமை கூறுகிறார். அதாவது, வானத்தில் பறக்கின்ற சிட்டுக் குருவி யாதொரு கவலையுமின்றி சுதந்திரமாகப் பறந்து மகிழ்வதை யாரும் காணலாம். அக்குருவிகளும் கடவுளின் படைப்புகளே. அவை கடவுள் படைத்த இயற்கைக்கு எழிலூட்டுகின்றன. சாதாரண குருவிகளுக்கும் கூட கடவுள் உணவளித்துக் காக்கிறார் என்றால் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதரை அவர் அன்போடும் கரிசனையோடும் பாதுகாக்க மாட்டாரா? கடவுளின் அன்பு பற்றிப் பிறருக்கு எடுத்துக் கூறி அவ்வன்பை மனமுவந்து பகிர்ந்துகொள்ளும் சீடர் மட்டில் கடவுள் அக்கறையின்றி இருப்பாரா? இதனால்தான் இயேசு சீடர்களிடம், ''சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்'' எனக் கூறுகிறார் (மத் 10:31). இன்று கிறிஸ்துவின் சீடர்களாக வாழ்ந்து பணிசெய்ய அழைக்கப்படுகின்ற நம்மையும் பார்த்து இயேசு ''அஞ்சாதீர்கள்'' எனக் கூறி ஊக்கமூட்டுகிறார். கடவுளையும் கடவுளாட்சியை அறிவிக்க நம்மை அனுப்புகின்ற இயேசுவையும் நாம் நம்பிக்கையோடு ஏற்று, உறுதியுள்ள நெஞ்சினராய் நற்செய்தியை முழங்கும்போது எந்த எதிர்ப்பைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. அப்போது, ''அஞ்சாதிருங்கள்'' என இயேசு கூறுகின்ற ஊக்க மொழி நம் உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் நற்செய்தியை அச்சமின்றி முழங்கிட அருள்தாரும்.