யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 15வது வாரம் திங்கள்கிழமை
2013-07-15

புனித பொனவேந்தர்


முதல் வாசகம்

`பிறக்கும் எபிரேய ஆண் மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 1: 8-14,22

அந்நாள்களில் யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான். அவன் தன் குடிமக்களை நோக்கி, ``இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மைவிடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது. அவர்கள் எண்ணிக்கையில் பெருகிடாதவாறு தந்திரமாய்ச் செயல்படுவோம், வாருங்கள். ஏனெனில் போர் ஏற்படுமாயின், அவர்கள் நம் எதிரிகளுடன் சேர்ந்துகொள்வர்; நம்மை எதிர்த்துப் போரிடுவர்; இந்நாட்டிலிருந்தும் வெளியேறிவிடுவர்'' என்று கூறினான். எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள் மேல் நியமிக்கப்பட்டனர். பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர். ஆயினும் எத்துணைக்கு எகிப்தியர் அவர்களை ஒடுக்கினார்களோ, அத்துணைக்கு அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர்; பெருகிப் பரவினர். இதனால் எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கண்டு அச்சமுற்றனர். எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கொடுமைப் படுத்தி வேலை வாங்கினர்; கடினமான சாந்து செங்கல் வேலையாலும், அனைத்து வயல்வெளி வேலையாலும், மேலும் கொடுமைப்படுத்தி வாங்கிய ஒவ்வொரு வேலையாலும், அவர்கள் வாழ்க்கையே கசந்து போகும்படி செய்தனர். பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, ``பிறக்கும் எபிரேய ஆண் மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள். பெண் மகவையோ வாழ விடுங்கள்'' என்று அறிவித்தான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!
திருப்பாடல்கள் 124: 1-3. 4-6. 7-8

1 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் - இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக! 2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது, 3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். பல்லவி

4 அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெரு வெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;5 கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். 6 ஆண்டவர் போற்றி! போற்றி! எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை. பல்லவி

7 வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம்; கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம். 8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ``நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 34-11: 1

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர். என்னை விடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். என்னை விடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர். உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார். இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.'' இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இயேசு கொணர்ந்த வாள்!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
இயேசுவின் வார்த்தைகள் பன்முகம் கொண்டவை. அமைதியும், ஆறுதலும் தருகின்ற வார்த்தைகளும் உண்டு. அதிர வைக்கும், அறைகூவல் விடுக்கும் வார்த்தைகளும் உண்டு.
இன்றைய நற்செய்தி வாசகம்; இரண்டாம் வகையைச் சேர்ந்தது. இயேசுவின் போதனையும், கொள்கைகளும் ஒரு குடும்பத்திற்குள், ஒரு குழுமத்திற்குள், ஒரு சமுதாயத்திற்குள் பிளவை உருவாக்கும் தன்மை கொண்டவை. அவரது வார்த்தையின்படி வாழ விரும்புகிறவர்கள் சில நேரங்களில் தம் சொந்த குடும்பத்தினரைக்கூட இழக்க வேண்டியிருக்கும். பிரிய வேண்டியிருக்கும். இயேசுவின் பொருட்டு உறவுகளையும் இழக்க ஒருவர் அணியமாக இருக்க வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. இயேசுவின் கொள்கை சமரசம் செய்வதல்ல. தேவைப்பட்டால், எதிர்த்து எழுவது. கிளர்ச்சி செய்வது. நீதி, பரிவு, ஓய்வு நாளிலும் குணமாக்கல், ஒதுக்கபட்டோருடன் உறவு போன்றவற்றில் இந்த சமுதாயம் என்ன நினைக்கும், எனது சீடர்கள் என்ன நினைப்பார்கள், என் உறவினர்கள் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் எண்ணவில்லை. எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளவில்லை. கொண்ட மதிப்பீடுகளுக்காக, நம்பிக்கைக்காக இறுதியில் உயிரையும் கொடுத்தார்.
நமது அன்பு, நம்பிக்கை, விசுவாசம் சமரசம் அற்றதாக அமையட்டும். இதுவே இயேசு கொணர்ந்த வாள்.

மன்றாட்டு:

அன்பின்; இயேசுவே, உம் பொருட்டு தம் உயிரை இழப்போர் அதைக் காத்துக்கொள்வர் என்று மொழிந்தீரே. உமக்கு நன்றி. என்னுடைய நம்பிக்கையில், மதிப்பீடுகளில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் வாழ அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.