யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 17வது வாரம் திங்கள்கிழமை
2013-07-29


முதல் வாசகம்

9 நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்
1யோவான் 4;7-16

7 அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். 8 அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். 9 நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. 10 நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது. 11 அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். 12 கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். 13 அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோமெனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார்எனவும் அறிந்து கொள்கிறோம். 14 தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம். 15 இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார். 16 கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருகிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;
திருப்பாடல்கள் 34;1-10

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.பல்லவி r>
2 நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.பல்லவி 3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். r>
4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். r>
5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லைபல்லவி. r>
6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்.பல்லவி r>
7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம்புகுவோர்பேறுபெற்றோர.பல்லவி r>
9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராதுபல்லவி. r>
10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. பல்லவி r>


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11;19-27

அக்காலத்தில்9 சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். 20 இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். 21 மார்த்தா இயேசவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். 22 இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்" என்றார். 23 இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார். 24 மார்த்தா அவரிடம் , "இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்" என்றார். 25 இயேசு அவரிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். 26 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?" என்று கேட்டார். ' 27 மார்த்தா அவரிடம், "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை" (மத்தேயு 13:34)

இயேசு மக்களுக்கு வழங்கிய போதனையில் பெரும்பகுதி உவமைகள் வழியாகவே வழங்கப்பட்டது என்பது உண்மை. மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய முதல் மூன்று நற்செய்தி நூல்களிலும் இயேசு கூறிய உவமைகள் பல அடங்கியுள்ளன. உவமைக்கும் கதைக்கும் இடையே சில ஒற்றுமைகளை நாம் காணலாம். ஆயினும் அவற்றிற்கிடையே பல வேற்றுமைகளும் உண்டு. இயேசு கூறிய உவமைகள் மக்களை மகிழ்விப்பதற்காகக் கூறப்பட்ட கட்டுக் கதைகளோ, கற்பனைச் சித்திரங்களோ அல்ல. இயேசுவின் உவமைகள் கடவுளாட்சி இவ்வுலகில் வருவது பற்றியும் அந்த ஆட்சியின் தன்மை பற்றியும் அமைந்திருந்தன. அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கின்ற நிகழ்ச்சிகளை இயேசு கதையாக எடுத்துச் சொல்லி, அவற்றின் வழியாக மக்களுக்கு இறையாட்சி பற்றிய உண்மைகளை உணர்த்தினார். எனவே, இயேசுவின் உவமைகளைக் கேட்ட மனிதர்களை இயேசு சிந்திக்கத் தூண்டினார். கருத்தளவிலான உண்மைகளை வாழ்க்கையோடு எவ்விதத் தொடர்புமின்றி எடுத்துக் கூறுவதன்று இயேசுவின் பாணி. அவர் மக்களின் வாழ்க்கையைத் தொடுகின்ற விதத்தில், அவர்கள் எளிதாகக் கண்டுகொள்கின்ற ஆள், இடம், பொருள் போன்றவற்றை உள்ளடக்கிய கதைகளை எடுத்துச் சொன்னார். இயேசு சொன்ன உவமைகளில் சிறப்பு மிக்கவை பல உண்டு. எடுத்துக்காட்டாக, "நல்ல சமாரியர்", "காணாமற்போன மகன்" போன்ற உவமைகளைக் கூறலாம்.

இயேசுவின் போதனைகளில் மட்டும்தான் உவமைகள் உண்டு என்பது சரியல்ல. இயேசு புரிந்த அரும் செயல்களும் உவமைகளாக மாறின. எடுத்துக்காட்டாக, இயேசு தண்ணீரை இரசமாக மாற்றிய நிகழ்ச்சியை நம்முடைய பகுத்தறிவால் விளக்கமுடியாத ஒரு அதிசயச் செயலாக மட்டுமே பார்த்தால் அச்செயலின் உட்பொருளைக் காண நாம் தவறிவிடுவோம். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான கல் தொட்டிகளைத் தண்ணீரால் நிரப்பி அத்தண்ணீரை இயேசு சுவையான இரசமாக்கினார். பழையன கழிந்து புதியன பிறக்கும் காலம் வந்துவிட்டது என இயேசு இச்செயல் வழியாக அறிவித்தார். இயேசுவின் வருகையால், அவருடைய போதனை மற்றும் செயல்களால் கடவுளின் ஆட்சி என்னும் புதுமை இவ்வுலகில் வரத் தொடங்கிவிட்டது என இச்செயல் காட்டுகிறது. எனவே, உவமைகள் இயேசுவின் சொல் மற்றும் செயல்களில் வெளிப்பட்டன எனலாம். இன்னும் துல்லியமாகப் பார்த்தால் இயேசுவே "கடவுளின் உவமை" என்றுகூட நாம் சொல்லலாம். அதாவது இயேசுவைப் புறக்கண்களால் மட்டுமே பார்த்தவர்கள் அவரிடத்தில் கடவுளின் வல்லமை துலங்கியதை உணரவில்லை. ஆனால், தம் அகக்கண்களைத் திறந்து, இதயக் கதவுகளை அடைத்து மூடாமல் இயேசுவை அணுகிய மக்கள் இயேசுவின் சொற்களிலும் செயல்களிலும் கடவுளின் உடனிருப்பைக் கண்டுகொண்டார்கள். அவர்கள்தான் இயேசுவை உண்மையாகவே "நம்பியவர்கள்". இவ்வாறு நம்பிக்கை கொள்ள இயேசு இன்று நம்மை அழைக்கிறார். நம்பிக்கையோடு இயேசுவை அணுகுவோர் கடவுளின் உவமையாகிய இயேசுவை அடையாளம் காண்பதோடு, அவரை நம் மீட்பராக நமக்களித்த தந்தையாம் கடவுளையும் நம்மோடு குடிகொண்டு நம்மை வழிநடத்தும் தூய ஆவியையும் அடையாளம் கண்டு, வாழ்க்கையில் அனுபவித்து உணர்வர்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவின் வெளித்தோற்றத்தைத் தாண்டிச் சென்று, அவர் வெளிப்படுத்துகின்ற உட்பொருளைக் கண்டுணர எங்களுக்கு அருள்தாரும்.