யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 17வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-07-30


முதல் வாசகம்

`ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்;
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம்

அந்நாள்களில் மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம். அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியே உள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர். மோசே கூடாரத்துக்குச் செல்லும் போதெல்லாம் மக்கள் அனைவரும் அவரவர் கூடார நுழைவாயிலில் எழுந்து நின்று கொண்டு, அவர் கூடாரத்தில் நுழையும்வரை அவரைப் பார்த்துக் கொண்டேயிருப்பர். மோசே கூடாரத்தில் நுழைந்ததும், மேகத்தூண் இறங்கி வந்து கூடார நுழைவாயிலில் நின்று கொள்ளும். அப்போது கடவுள் மோசேயிடம் பேசுவார். கூடார நுழைவாயிலில் மேகத்தூண் நின்று கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் காண்பர். அப்போது அவரவர் கூடார நுழைவாயிலில் நின்று கொண்டே மக்கள் அனைவரும் வணங்கித் தொழுவர். ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார். பின்னர் மோசே பாளையத்துக்குத் திரும்புவார். இளைஞனும் நூனின் மகனுமான யோசுவா என்ற அவருடைய உதவியாளர் கூடாரத்தை விட்டு அகலாமல் இருப்பார். ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்று கொண்டு, `ஆண்டவர்' என்ற பெயரை அறிவித்தார். அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், ``ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்கு உரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்; ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்'' என அறிவித்தார். உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, ``என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்'' என்றார். அவர் அங்கே நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவருடன் இருந்தார். அப்போது அவர் அப்பம் உண்ணவும் இல்லை; தண்ணீர் பருகவும் இல்லை. உடன்படிக்கையின் வார்த்தைகளான பத்துக் கட்டளைகளை அவர் பலகைகளின் மேல் எழுதினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார்.
திருப்பாடல்கள் 103;6-13

6 ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார். 7 அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். -பல்லவி r>
8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினம் கொள்ளுபவரல்லர். -பல்லவி r>
10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. 11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. -பல்லவி r>
12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவில் உள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். 13 தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். -பல்லவி r>


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13;36-43

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, ``வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்'' என்றனர். அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: ``நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, 'வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்' என்றனர் (மத்தேயு 13:36

இயேசு இறையாட்சி பற்றி மக்களுக்குப் போதிக்க உவமைகளைப் பயன்படுத்தினார். அவற்றுள் இரு உவமைகளுக்கு இயேசுவே விளக்கம் அளித்ததாக மத்தேயு பதிவுசெய்துள்ளார். விதை விதைப்போர் பற்றிய உவமைக்கு விளக்கம் அளித்த இயேசு (காண்க: மத் 13:18-23) வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமைக்கும் விளக்கம் தருகிறார் (மத் 13:36-43). இந்த விளக்கம் தொடக்க காலத் திருச்சபை இயேசு உரைத்த உவமையைப் புரிந்துகொண்டதைக் காட்டுகிறது. இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, தம் சீடருக்கு மட்டுமே விளக்கம் தருகிறார். இயேசுவோடு இருக்கவும் அவர் கூறியவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் சீடர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அது கடவுளே அவர்களுக்கு அளிக்கின்ற ஒரு தனிக் கொடை (காண்க: மத் 13:16). அதே நேரத்தில், இயேசுவைப் பின்செல்வோர் திறந்த மனத்தோடு கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுக்க வேண்டும். அந்த வார்த்தை வழியாகக் கடவுள் தம்மோடு பேசி தம் வாழ்க்கையை நல்வழிப்படுத்துவதை அவர்கள் அறிந்திட வேண்டும்.

சீடர்களுக்கு வழங்கப்படுகின்ற இறைவார்த்தையை அவர்கள் ஏற்று அதற்கேற்ப வாழாவிட்டால் அவர்களும் ''தீயோனைச் சேர்ந்தவர்களாக'' (காண்க: மத் 13:38) மாறிவிடுகின்ற ஆபத்து உள்ளது. மாறாக, அவர்கள் ''கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்களாக'' வாழ்ந்திட அழைக்கப்படுகிறார்கள் (மத் 13:38). கடவுளின் ஆட்சி அன்பையும் இரக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது. அங்கே பகைமைக்கும் வன்முறைக்கும் இடம் கிடையாது. மன்னிக்கும் மனிநிலையும் பிறரைக் கடவுளின் பிள்ளைகளாக மதிக்கும் பார்வையும் கடவுளின் ஆட்சியில் நிலவும் பண்புகள். இயேசுவின் சீடர்கள் இறைவார்த்தையை மையமாகக் கொண்டு வாழும்போது ''கதிரவனைப் போல் ஒளிவீசுவார்கள்'' (மத் 13:43). அவர்கள் ''ஒளியின் மக்களாக'' வாழ்வதைக் கண்டு பிறரும் கடவுளிடம் நம்பிக்கை கொள்வர். ''இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்ன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்'' (மத் 5:16) என இயேசு இன்றுவாழும் நம்மைப் பார்த்துக் கூறுவதை நாம் செவிமடுத்துக் கேட்க வேண்டும் (மத் 13:43).

மன்றாட்டு:

இறைவா, உம் வார்த்தை எங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருப்பதை நாங்கள் உணர்ந்து அதன்படி வாழ்ந்திட அருள்தாரும்.