திருவழிப்பாட்டு ஆண்டு C (04-08-2013)

மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் 
ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது/> மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் 
ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது/> மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் 
ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது/>


திருப்பலி முன்னுரை

காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்: அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். எல்லாம் வல்ல இறைவனின் அன்பு மக்களுக்கு, இன்று பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு.

இன்றைய மூன்று வாசகங்களும் இவ்வுலக செல்வங்களின் நிலையாமையையும், இறைவனே நம் ஒப்பற்ற செல்வம் என்னும் கருத்தையும் வலியுறுத்துகின்றன. இவ்வுலக செல்வத்திற்காக உழைப்பதனால் ஏற்படும் இழப்புகளை நாம் பட்டியல் இடலாம்:

எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் இறுதியில் அது நம்மோடு வரப்போவதில்லை. வேறொருவர்தான் அதை அனுபவிக்கப்போகிறார்.

இவ்வுலக செல்வம் நம்மை இறைவனிடம் சேர்ப்பதில்லை. இறைவனைவிட்டுப் பிரிக்கிறது.

மிகுதியான செல்வம் இருந்தாலும், நிறைவாழ்வு, மகிழ்ச்சி கிடைக்காது. மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால், ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.

இதை நாம் உணரவேண்டும். எனவே, எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு நம் எச்சரிக்கையாய் இருப்போம். இவ்வுலக செல்வத்தைச் சேர்ப்பதற்குப் பதில் இறைவனின் முன்னிலையில் செல்வம் சேர்ப்போம். நமது நல்ல எண்ணங்கள், செபங்கள், நற்செயல்களே இறைவனின் முன்னிலையில் நமது செல்வங்கள். அத்தகைய செல்வத்தின்மீது ஆர்வம் காட்டுவோம். உணர்ந்தவர்களாக, இத்திருப்பலியில் பங்கேற்று இறையாசீர் பெறுவோம்.



முதல் வாசகம்

உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார்
முதல் வாசகம்: சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம். 1:2, 2:21-23

வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்: வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்: உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே. இது பெரிய அநீதி. உலகில் அவர் செய்த எல்லா முயற்சிக்காகவும் வகுத்த செயல் திட்டங்களுக்காகவும் அவருக்குக் கிடைக்கும் பயனென்ன? வாழ்நாளெல்லாம் அவருக்குத் துன்பம்: வேலையில் தொந்தரவு: இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை.எல்லாம் வீணே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.14
திருப்பாடல்கள் 90;3-6,12-14,17

3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; 'மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர்.4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.பல்லவி

5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;6 அது காலையில் தளிர்த்துப் ப+த்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்து போகும்.பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்பல்லவி

.14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்!பல்லவி

இரண்டாம் வாசகம்

நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவாகளானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-5,9-11

சகோதர சகோதரிகளே! நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவாகளானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்.ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள். ஆகவே உலகப்போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள். ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும். புதப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடில்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார்."

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!"போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும் " அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12:13-21

அக்காலத்தில் கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், "போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும் " என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, "என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்? " என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, "எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது " என்றார். அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: "செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், "நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே! " என்று எண்ணினான். "ஒன்று செய்வேன்: என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்: அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன் ". பின்பு, "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன: நீ ஓய்வெடு: உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு " எனச் சொல்வேன் " என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், "அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்? " என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே. "

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்: தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,

உம் திருச்சபையை வழிநடத்தும்; எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வார்த்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் ஒப்பற்ற செல்வமாகிய இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். அழிந்துபோகும்; பயனற்ற செல்வத்திற்காக உழைக்காமல், அழியாத வாழ்வு தரும் செல்வத்திற்காக உழைக்கவும், நீரே எம் ஒப்பற்ற செல்வமாய் இருந்தருளவும், எங்களுக்கு வரம்தந்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீர் வாக்களித்த அனைத்தையும் எமக்கெனச் செய்து முடிக்கும் ஆண்டவரே!

இப் மண்ணிலே புலம்பதித்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்களும், எங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரும், உமது அன்பிலிருந்து எங்களைப் பிரிக்க முற்படும் எல்லாவித தீய சக்திகளையும் இனங்கண்டு அவற்றை முறியடித்து, உமக்கேற்றவர்களாக வாழ எமக்கு வேண்டிய ஞானத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனநிறைவின் ஊற்றே இறைவா,

எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாத மனதை எனக்குத் தந்தருளும். நீர் எனக்குத் தந்திருக்கிற கொடைகள், நன்மைகள், செல்வங்களை எண்ணிப்பார்த்து, நன்றி சொல்கிற, மகிழ்ச்சி அடைகிற மனநிலையை எங்களுக்குத் தாரும். நீர் தரும் ஆறுதலும், உம்மோடு, உமக்காக செலவழிக்கும் நேரமும், எவ்வளவோ மேலானவை என்பதை நாங்கள் உணரச் செய்ய, எங்களுக்கு அருள் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாழ்வளிககும் வார்த்தைகளைக் கொண்டுள்ள தந்தையே!

இறைவார்த்தைக்கு பிழையான விளக்கங்களைக் கொடுத்து பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், போட்டி மனநிலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர்மீதும் மனமிரங்கி அவர்கள் இறைவார்த்தையை சரியாக விளங்கிக்கொண்டு தாங்கள் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக்காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் நாங்கள் அனைவரும் அவைகளை மற்றவர்களோடு பகிர்ந்து: எங்கள் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் எம் கடவுளாம் ஆண்டவர் உம்மிடம் அன்பு கொண்டு, எம்மீது அன்புகூர்வது போல் எமக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்ந்து ; உமது சாட்சிகளாய் வாழ எமக்கு அருள் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?'' (லூக்கா 12:20)

''அறிவற்ற செல்வன்'' உவமை உண்மையான செல்வம் எதில் அடங்கியிருக்கிறது என விளக்குகிறது (லூக் 12:13-21). இந்த உவமையைக் கூறிய இயேசு நம்மைப் பார்த்து, ''கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்த்துவைக்க'' கேட்கிறார் (லூக் 12:21). உலகப் பார்வையில் செல்வம் சேர்;த்து வைக்கும் மனிதர் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றலாம். பணம் பாதாளம் வரைப் போகும் என்றொரு கூற்றும் உண்டு. ஆனால் பாதாளத்தையும் எட்டுகின்ற சக்தி வாய்ந்த பணம் நம்மைப் பாதாளத்திற்கே இழுத்துச் சென்றுவிடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். மனித வாழ்வு நிறைவு பெற வேண்டும் என்றால் அதற்குச் செல்வம் மட்டும் போதாது. மாறாக, செல்வம் நம்மைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடக் கூடும். செல்வத்தையே தெய்வமாகக் கொள்வோரும் உண்டு. இவர்கள் செல்வம் திரட்டுவதற்காக எந்தவிதமான தியாகங்களையும் செய்யத் தயங்குவதில்லை. ஏன், ஏமாற்று வழிகளையும் ஏய்ப்பு முறைகளையும் கையாண்டு கூட இவர்கள் செல்வம் குவிக்க நினைப்பார்கள். ஆனால் இத்தகைய முயற்சிகள் எல்லாம் ஒருநாள் முடிவுக்கு வரும். அதுவே நம்மைவிட்டு நம் உயிர் பிரிகின்ற நாள். இறப்பு எல்லா மனிதருக்கும் உண்டு. அதை முறியடிக்கின்ற சக்தி மனிதருக்கு இல்லை. வள்ளுவரும் இதை ''நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு'' எனக் கூறிப் போந்தார் (காண்க: குறள் 336). இவ்வளவுதான் இவ்வுலகத்தின் ''பெருமை'' என வள்ளுவர் கூறுவதில் எதிர்ப்பொருளணி துலங்குவதையும் நாம் காணலாம். நிலையாமைதான் மனித வாழ்க்கையின் முடிவா அல்லது நிலையாமைக்கு அப்பாற்பட்ட நிலைவாழ்வு ஒன்று உளதா?

கிறிஸ்தவ நம்பிக்கைப்படி, கடவுள் நமக்கு எந்நாளும் நிலைத்துநிற்கின்ற வாழ்வை வாக்களித்துள்ளார். அதுவே இம்மண்ணக வாழ்வின் உண்மையான, உயரிய குறிக்கோளாகவும் நம் உள்ளத்தில் இருக்க வேண்டும். இவ்வுலகச் செல்வத்தைக் கொண்டு நாம் ''கடவுள் முன்னிலையில்'' செல்வம் சேர்த்துவைக்க முடியும். இதற்கான வழியையும் இயேசு நமக்குக் காட்டுகிறார். ''உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப் பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்'' (லூக் 12:33) என இயேசு நமக்குக் கற்பிக்கின்றார். ஆகவே, சுய நலப் போக்கும் பேராசையும் நம்மை ஆட்கொண்டுவிட்டால் நாம் இவ்வுலகச் செல்வங்களைக் குவிப்பதிலேயே கருத்தாய் இருப்போம். அச்செல்வங்களால் நமக்கு நிலையான மன அமைதியைத் தர இயலாது. ஆனால் பிறரன்பு என்னும் இலட்சியம் நம்மில் உறதியாக இருந்தால் நாம் தேவையில் உழல்வோரோடு நம் செல்வத்தைப் பகிர்ந்துகொள்வோம். அப்போது ''கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்த்துவைப்போம்'' (லூக் 12:21). அதுவே உண்மையான செல்வம்.

மன்றாட்டு:

இறைவா, அழிந்துபோகும் செல்வத்தை நம்பி வாழாமல் உம் முன்னிலையில் செல்வம் கொண்டவர்களாக மாறிட எங்களுக்கு அருள்தாரும்.