யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் வியாழக்கிழமை
2013-08-08

புனித தோமினிக்


முதல் வாசகம்

மோசே தம் கையை ஓங்கித் தம் கோலால் பாறையை இரு முறை அடித்தார்; தண்ணீர் தாராளமாக வந்தது
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 20: 1-13

அக்காலத்தில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சீன் பாலைநிலத்துக்கு வந்தது; மக்கள் காதேசில் தங்கினர். மிரியாம் அங்கே இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள். அப்போது மக்கள் கூட்டமைப்புக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக ஒன்று கூடினர். மக்கள் மோசேயுடன் வாதாடிக் கூறியது: ``ஆண்டவர் திருமுன் எங்கள் சகோதரர்கள் மாண்டபோது நாங்களும் மாண்டிருந்தால் நலமாய் இருந்திருக்குமே! ஆண்டவரின் சபையை இந்தப் பாலைநிலத்துக்கு நீங்கள் கொண்டு வந்தது ஏன்? நாங்களும் எங்கள் கால்நடைகளும் இங்குச் சாகவேண்டுமென்றா? இந்தக் கொடிய இடத்துக்கு அழைத்துவர, எங்களை எகிப்திலிருந்து வெளியேறப் பண்ணினது ஏன்? தானிய நிலம், அத்தி மரங்கள், திராட்சைக் கொடிகள், மாதுளைச் செடிகள் எவையுமே இங்கு இல்லை; குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லையே!'' பின், மோசேயும் ஆரோனும் சபைக்கு முன்னின்று சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலுக்குச் சென்று முகங்குப்புற விழுந்தனர். ஆண்டவரின் மாட்சி அவர்களுக்குத் தோன்றியது. ஆண்டவர் மோசேயிடம், ``கோலை எடுத்துக்கொள்; நீயும் உன் சகோதரன் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பைக் கூடிவரச் செய்யுங்கள்; அவர்கள் பார்வையில் பாறை தண்ணீரைத் தரும்படி அதனிடம் பேசுங்கள்; இவ்வாறு அவர்களுக்காகப் பாறையிடமிருந்து நீங்கள் தண்ணீர் பெறுவீர்கள்; மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் கால்நடைகளுக்கும் குடிக்கக் கொடுப்பீர்கள்'' என்றார். அவர் கட்டளைப்படியே மோசே ஆண்டவர் திருமுன்னின்று கோலை எடுத்தார். மோசேயும் ஆரோனும் பாறைக்கு முன்பாகச் சபையை ஒன்று கூட்டினர். மோசே அவர்களிடம், ``கலகக்காரரே, இப்போது கேளுங்கள், இப்பாறையிலிருந்து உங்களுக்குத் தண்ணீர் வரவழைக்க எங்களால் கூடுமா?'' என்று கேட்டார். பின் மோசே தம் கையை ஓங்கித் தம் கோலால் பாறையை இரு முறை அடித்தார்; தண்ணீர் தாராளமாக வந்தது, மக்கள் கூட்டமைப்பினரும் அவர்கள் கால்நடைகளும் குடித்தனர். ஆண்டவரோ மோசேயிடமும் ஆரோனிடமும், ``இஸ்ரயேல் மக்கள் பார்வையில் நான் தூயவராக விளங்கும்படி நீங்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாமல் போனதால் இந்தச் சபையை நான் அவர்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் கொண்டு சேர்க்கமாட்டீர்கள்'' என்றார். இது மெரிபாவின் தண்ணீர்; இங்குத்தான் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் வாதாடினர், அவர் அவர்களிடையே தம்மைத் தூயவராகக் காண்பித்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்.
திருப்பாடல்கள் 95: 1-2. 6-7. 8-9

1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! -பல்லவி

8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது போல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, ``என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16;13-23

அக்காலத்தில் இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ``மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ``யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார். பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார். இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டு, ``ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது'' என்றார். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, ``என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தம் சீடரை நோக்கி, 'நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என்று உரைத்தார்'' (மத்தேயு 16:15-16)

கடவுளின் ஆட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே செல்கிறார் இயேசு. அப்போது மக்கள் அவரைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். ''யார் இவர்?'' என்னும் கேள்வி அவர்கள் உள்ளத்தில் எழுகிறது. அதற்கு ஒவ்வொருவரும் ஓரொரு பதில் கொடுக்கின்றனர். இதை இயேசு தம் சீடர்களிடம் கேட்டு அறிந்துகொள்கிறார். ஆனால் இயேசுவைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தவிர அவருடைய சீடர்களே அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய அவருக்கு விருப்பம். தம் சீடர்கள் தம்மைச் சரியாகப் புரிந்துகொண்டுள்ளார்களா என்பதை அறிய விழைந்த இயேசு அவர்களிடம், ''நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்கிறார் (மத் 16:15). வழக்கம்போல சீமோன் பேதுரு இயேசுவின் கேள்விக்குப் பதில் தருகிறார். அதாவது இயேசு ''மெசியா''; ''வாழும் கடவுளின் மகன்''. மெசியா மக்களைத் தேடி வந்து, அவர்களை உரோமை ஆதிக்கத்திலிருந்து விடுவித்து அவர்களுச் சுதந்திரம் நல்குவார் என்னும் நம்பிக்கை யூத மக்களிடையே நிலவியது. பேதுரு அதையே இயேசுவிடம் சொல்கிறார். அதே நேரத்தில் மாட்சியுடன் வருகின்ற மெசியா ''கடவுளின் மகனாகவும்'' இருப்பதை சீமோன் வெளிப்படுத்துகிறார்.

தம்மை மெசியா என அழைத்த சீமோன் பேதுருவுக்கு இயேசுவும் ஒரு புதிய பெயர் அளிக்கின்றார். அதாவது, இனிமேல் அவர் ''பேதுரு'' என அழைக்கப்படுவார். அதற்கு, பாறை, கல் என்று பொருள். அந்த உறுதியான கல்லின்மீது திருச்சபை கட்டி எழுப்பப்படும். இதன் பொருள் என்ன? பேதுரு திருச்சபையில் ஒரு முக்கிய பொறுப்பு வகிக்கிறார். பன்னிரு திருத்தூதர்கள் நடுவே பேதுருவை முதல்வராக ஏற்படுத்திய இயேசு தாம் உருவாக்கிய திருச்சபையை அன்புச் சமூகமாக வழிநடத்தும் பொறுப்பையும் அவர்களிடம் கொடுக்கிறார். இருப்பினும், திருச்சபை என்பது இயேசுவின் பெயரால் கூடி வருகின்ற அன்புச் சமூகம். சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசுவின் ஆவியானவர் திருச்சபையின் உயிர்மூச்சாக இருக்கின்றார். அவருடைய தூண்டுதலுக்கு நாம் செவிமடுக்க வேண்டும்; நம் நடுவே உயிருடன் இருந்து செயலாற்றும் அவருடைய துணையோடு ''இயேசு யார்'' என்னும் கேள்விக்குப் பதில் இறுக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பை எந்நாளும் துய்த்து வாழ்ந்திட அருள்தாரும்.