யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 19வது வாரம் சனிக்கிழமை
2013-08-17


முதல் வாசகம்

`எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் ஊழியம் புரிவோம்.
யோசுவா நூலிலிருந்து வாசகம் 24: 14-29

அந்நாள்களில் யோசுவா மக்களிடம் கூறியது: ``ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும் அவருக்கு ஊழியம் புரியுங்கள். நதிக்கு அப்பாலும், எகிப்திலும், உங்கள் மூதாதையர் பணிந்து வந்த தெய்வங்களை விட்டு விலகுங்கள். ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.'' மக்கள் மறுமொழியாக, ``ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார். ஆண்டவர் எல்லா மக்களையும், இந்நாட்டில் வாழ்ந்த எமோரியரையும் எங்கள் முன்னிருந்து விரட்டினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்'' என்றனர். யோசுவா மக்களிடம், ``உங்களால் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய இயலாது. ஏனெனில் அவர் தூய கடவுள். அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத கடவுள். உங்கள் குற்றங்களையும் பாவங்களையும் அவர் மன்னிக்க மாட்டார். ஆனால் நீங்கள் ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்கினால் அவர் மீண்டும் உங்களுக்குத் தீங்கு செய்வார். உங்களுக்கு நன்மை செய்த அவர் உங்களை அழித்துவிடுவார்'' என்றார். மக்கள் யோசுவாவிடம், ``இல்லை, நாங்கள் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்'' என்றனர். யோசுவா மக்களிடம் ``ஆண்டவருக்கு ஊழியம் செய்ய அவரை நீங்களே தெரிந்துகொண்டீர்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகள்'' என்றார். அவர்கள், ``நாங்களே சாட்சிகள்'' என்றனர். இப்பொழுது உங்கள் நடுவில் உள்ள வேற்றுத் தெய்வங்களை விலக்கி விடுங்கள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடம் உங்கள் இதயங்களைத் திருப்புங்கள்'' என்றார். மக்கள் யோசுவாவிடம், ``எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் ஊழியம் புரிவோம். அவரது குரலுக்குக் கீழ்ப்படிவோம்'' என்றனர். அன்று யோசுவா மக்களுக்காக உடன்படிக்கை செய்தார். செக்கேமில் அவர் அவர்களுக்கு விதிமுறைகளையும் ஒழுங்குகளையும் கொடுத்தார். யோசுவா இவ்வார்த்தைகளைக் கடவுளின் திருச்சட்ட நூலில் எழுதினார். ஒரு பெரும் கல்லை எடுத்து அதை ஆண்டவரின் திருத்தலத்தில் ஒரு கருவாலி மரத்தின் கீழ் நாட்டினார். யோசுவா எல்லா மக்களிடமும், ``இதோ! இக்கல் நமக்கு எதிரான சான்றாக இருக்கும். ஏனெனில் ஆண்டவர் நம்மோடு பேசிய எல்லாவற்றையும் இது கேட்டது. நீங்கள் உங்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள மறுத்தால் இது உங்களுக்கு எதிரான சான்றாக இருக்கும்'' என்றார். யோசுவா மக்களை அவரவர் உரிமைச் சொத்தாகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சிக்குப்பின் நூனின் மகனும் ஆண்டவரின் ஊழியருமாகிய யோசுவா இறந்தார். அவருக்கு வயது நூற்றுப்பத்து.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்
திருப்பாடல்கள் 16: 1-2 ,5. 7-8. 11

1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். 2ய நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்' என்று சொன்னேன். 5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி

7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ``சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 13-15

அக்காலத்தில் சிறு பிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். ஆனால் இயேசு, ``சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது'' என்றார். அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''சிறுபிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்'' (மத்தேயு 19:13)

இயேசு கடவுளாட்சி பற்றிய போதனையை மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார். அவ்வாறு உரையாற்றும்போது, மணமுறிவு கடவுளுக்கு ஏற்புடையதல்ல எனவும் இயேசு விளக்கிச் சொல்கிறார். வைத்த கண் வாங்காமல் இயேசுவின் சொற்களை மக்களெல்லாரும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கின்ற அந்த வேளையில் பெற்றோர் சிலர் தங்கள் சிறு குழந்தைகளோடு இயேசுவை அணுகி வருகின்றனர். தம் பிள்ளைகள்மேல் கைகளை வைத்து இயேசு அவர்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என அப்பெற்றோர் வேண்டுகின்றனர். இயேசுவின் சீடருக்கோ தாங்க முடியாத எரிச்சல்! சிறுபிள்ளைகள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டும், விளையாட்டுத்தனமாய்ப் பேசிக்கொண்டும் இருந்தால் இயேசுவின் சொற்களை மக்கள் கேட்பது கடினமாகும்; பராக்குக்கும் இடமாகும். அது மட்டுமல்ல, இயேசு போதிக்கின்ற இடத்தில் குழந்தைகளுக்கு என்ன வேலை? பெரியவர்கள் கூடியிருந்து உரையாடும் வேளையில் சிறுபிள்ளைகள் அங்கே நுழைந்தால் குழப்பம்தானே! எனவே அச்சிறுபிள்ளைகளையும் அவர்களைக் கூட்டி வந்தவர்களையும் பார்த்து இயேசுவின் சீடர் முறுமுறுக்கின்றனர்; அங்கிருந்து போய்விடுமாறு அவர்களை அதட்டுகின்றனர். இதைக் கண்ட இயேசுவின் கவனம் அக்குழந்தைகள்மீது திரும்புகிறது. அவரது பார்வையில் குழந்தைகளும் வயதில் முதிர்ந்தோரும், பெற்றோரும் பிள்ளைகளும் எல்லாருமே சமம்தான். யாரையும் ஒதுக்கிவைக்கின்ற போக்கு இயேசுவுக்குக் கிடையாது. எனவே இயேசு ''சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்'' என்கிறார்.

இன்னார் இன்னார் மட்டுமே கடவுளை அணுகிச் செல்ல முடியும் என நம் சமுதாயம் எல்லைக் கோடுகளை வரைகின்ற நேரங்கள் உண்டு. குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கோவிலுக்குள் நுழைந்து இறை சன்னிதானத்தில் வழிபடலாம் எனவும் அநீதியான கட்டுப்பாடுகள் ஆங்காங்கே உண்டு. அல்லது, மக்களைப் பிரித்து வேறுபடுத்தி அவர்களுக்குக் கடவுளின் இல்லத்தில் உயர்ந்த இடம், தாழ்ந்த இடம் என்று இட ஒதுக்கீடு செய்யும் பாணிகள் நிலவுகின்றன. இயேசு இவ்வாறு மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. கடவுளின் முன்னிலையில் அனைவரும் சமமே என்பதுதான் கடவுளின் மகனாகிய இயேசு நமக்கு வழங்குகின்ற போதனை. அன்றைய சமுதாயத்தில் சிறுபிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் உரிமைகள் இருக்கவில்லை. இன்றும்கூட சில இடங்களில் இதே நிலைதான். அனைவரையும் கைகளை விரித்து வரவேற்கின்ற சமுதாயம் உருவாக வேண்டும். மனிதரை உயர்ந்தவர் தாழ்ந்தவர், சிறியவர் பெரியவர் என வேறுபடுத்திப் பிரித்து, சம நீதி வழங்க மறுக்கின்ற சமுதாயம் மறைந்து, புதிய உலகம் உதித்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, மனிதர் அனைவரும் உம் பிள்ளைகளே என்பதை மறவாமல், அனைவருக்கும் மதிப்பளித்து வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.