திருவழிப்பாட்டு ஆண்டு C (18-08-2013)

இயேசு, 'மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? 
இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்'./> இயேசு, 'மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? 
இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்'./> இயேசு, 'மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? 
இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்'./> இயேசு, 'மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? 
இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்'./> இயேசு, 'மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? 
இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்'./> இயேசு, 'மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? 
இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்'./>


திருப்பலி முன்னுரை

எல்லாம் வல்ல இறைவனின் அன்பு மக்களுக்கு, இயேசுவால் வாழ்வுபெற்று அவரில் என்றும் நிறைந்து வாழ அணியமாகி இன்று ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் கனிவான வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று ஆண்டின் பொதுக்காலம் 20 ஆம் ஞாயிறு.

இன்றைய நற்செய்தி வாசகத்திலே ''மண்ணுலகில் தீமூட்ட வந்தேன்'' என்கிறார் இயேசு. நெருப்பு பல விதங்களில் நமக்குப் பயன்படுகிறது. உணவு சமைப்பதற்கு நெருப்பு உதவுகிறது. குளிர் காலத்தில் நெருப்பின் அருகே அமர்ந்து குளிர்காய்வது இதமான அனுபவம். அழுக்குகளைச் சுட்டெரித்து அழிப்பதற்கும் நெருப்பு பயன்படுகிறது. அதே நேரத்தில் நெருப்பு அழிவுக்கும் காரணமாகலாம். கலவரங்கள் ஏற்படும்போது வீடுகளுக்கும் ஊர்களுக்கும் தீவைத்து அழிக்கின்ற செயல்கள் இப்போதும் நடந்துவருவது ஒரு கசப்பான அனுபவம். இயற்கையாகவோ மனிதரின் கவனக்குறைவாலோ காடுகளில் தீ எரிந்து பெரும் அழிவு ஏற்படுவதும் உண்டு. இவ்வாறு ஆக்கவும் அழிக்கவும் பயன்படுகின்ற தீயை மூட்டிவிட இயேசு வந்தார் என்றால் அதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இயேசுவின் உள்ளத்தில் ஒரு தீ எரிந்துகொண்டிருந்தது. அதுதான் கடவுள் தம்மிடம் ஒப்படைத்த பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்னும் தணியாத ஆர்வம். இந்த ஆர்வத்தால் உந்தப்பட்ட இயேசு இவ்வுலகத்தில் மனித உள்ளங்களில் ஒரு தீயை மூட்டிட வந்தார். கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் கொணரவேண்டும் என்னும் ஆர்வம்தான் இயேசுவின் போதனைக்கும் செயல்பாட்டுக்கும் உந்துசக்தியாக அமைந்தது.

இயேசு இவ்வுலகில் மூட்டவந்த தீ ஆக்கவும் அழிக்கவும் வல்லது. நம்மிடமிருக்கின்ற சுயநலப் போக்கையும் தீய நாட்டங்களையும் அழிக்கின்ற சக்தி அதற்கு உண்டு; அதே நேரத்தில் நம்மைத் தூய்மைப்படுத்தி, நமக்குப் புத்துணர்வு அளித்து, நம்மைப் புடமிட்டுப் புத்தொளி வீசச் செய்கின்ற பண்பையும் இயேசு மூட்டுகின்ற தீயில் நாம் காணலாம். இயேசு கொணர்கின்ற தீ நம்மை மட்டும் மாற்றுவதோடு நின்றுவிடுவதில்லை. அவர் மூட்டுகின்ற தீ நம்மிடமிருந்து பிறருக்கும் பரவ வேண்டும். பிறரும் இறையாட்சியை விரிவடையச் செய்யவேண்டும் என்னும் தீயால் பற்றியெரிய வேண்டும். இதற்கு நாம் கருவிகளாக மாறினால் இந்த உலகமே மாற்றுருப் பெற்று இறையாட்சிக்குச் சாட்சியாக மாறும். இதுவே இயேசு கண்ட கனவு. இத்திருப்பலியில், இறைத் திருமொழிகள் வழியாக நாம் ஆண்டவரின் அருள்மொழிகளைக் கேட்டு அவரில் ஒன்றாகுவோம்.



முதல் வாசகம்

நாடெங்கும் வழக்குக் காரணமாய் இருக்கும்படி என்னைப் பெற்றாயே!
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 38: 4-6, 8-10

அந்நாள்களில் தலைவர்கள் அரசனைப் பார்த்து, ``இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாக வேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை'' என்றார்கள். அதற்கு அரசன் செதேக்கியா, ``நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே'' என்றான். எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல் கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார். எபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி, ``என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்; ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது'' என்று கூறினார். அதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபேது மெலேக்கை நோக்கி, ``உன்னோடு மூன்று பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கிவிடு'' என்று கட்டளையிட்டான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.
திருப்பாடல்கள் 40: 1. 2. 3. 17 (பல்லவி: 13b)

1 நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். பல்லவி

2 அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். பல்லவி

3 புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர். பல்லவி

17 நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி

இரண்டாம் வாசகம்

நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4

சகோதரர் சகோதரிகளே, திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார். பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,

உம் திருச்சபையை வழிநடத்தும்; எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வார்த்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உமது பாடுகளாலும், சிலுவைச் சாவாலும் எங்களுக்கு மீட்பு வழங்கிய இயேசுவே,

நீர் பெற்றுக்கொண்ட இரண்டாவது திருமுழுக்குக்காக உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்விலும் நாங்கள் எங்கள் முதல் திருமுழுக்கில் வழங்கிய வார்த்தைப்பாடுகளைத் தொடர்ந்து வாழ்ந்து, இரண்டாவது திருமுழுக்குக்கு என்றும் சான்று பகிர எங்களுக்கு வரம்தந்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீர் வாக்களித்த அனைத்தையும் எமக்கெனச் செய்து முடிக்கும் ஆண்டவரே!

இப் மண்ணிலே புலம்பதித்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்களும், எங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரும், உமது அன்பிலிருந்து எங்களைப் பிரிக்க முற்படும் எல்லாவித தீய சக்திகளையும் இனங்கண்டு அவற்றை முறியடித்து, உமக்கேற்றவர்களாக வாழ எமக்கு வேண்டிய ஞானத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனநிறைவின் ஊற்றே இறைவா,

எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாத மனதை எனக்குத் தந்தருளும். நீர் எனக்குத் தந்திருக்கிற கொடைகள், நன்மைகள், செல்வங்களை எண்ணிப்பார்த்து, நன்றி சொல்கிற, மகிழ்ச்சி அடைகிற மனநிலையை எங்களுக்குத் தாரும். நீர் தரும் ஆறுதலும், உம்மோடு, உமக்காக செலவழிக்கும் நேரமும், எவ்வளவோ மேலானவை என்பதை நாங்கள் உணரச் செய்ய, எங்களுக்கு அருள் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாழ்வளிககும் வார்த்தைகளைக் கொண்டுள்ள தந்தையே!

உம் அன்புத் தீ எங்கள் உள்ளங்களில் என்றுமே அணையா விளக்காக எரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் தந்தையே!

பலியிலே பங்கேற்கும் நாங்கள் உம்மை ஏற்று பயணிப்பதால் வரும் இடர்பாடுகளை ஏற்று துணிவுடன் சந்திக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்'' (லூக்கா 12:51)

இயேசுவை அமைதியின் அரசர் என்றும் சமாதானத் தூதுவர் என்றும் நாம் போற்றுகிறோம். அவர் பிறந்தபோது விண்ணகத் தூதர்கள் ஒருங்கிணைந்து, ''உலகில் கடவுளுக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!'' எனப் பாடி வாழ்த்தினார்கள் (காண்க: லூக் 2:14). இயேசு இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு முன்னால் தம் சீடரை நோக்கி, ''அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்'' என வாக்களித்தார் (காண்க: யோவா 14:27). மேலும், தாம் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பிறகு இயேசு தம் சீடர்களை நோக்கி, ''உங்களுக்கு அமைதி உண்டாகுக!'' என வாழ்த்தினார் (காண்க: லூக் 24:36). இவ்வாறு அமைதியைப் போற்றிய இயேசுவா ''பிளவு உண்டாக்க வந்தேன்'' எனக் கூறுவார் என நாம் கேள்வி எழுப்பினால் அது தவறு எனக் கூற முடியாது. ஆக, இயேசு கொணர்ந்த அமைதி யாது, அவர் கொணர்ந்த பிளவு யாது என்னும் கேள்வி எழுகிறது. இயேசு தம் சீடர்களுக்கு அமைதியை வாக்களித்தார் என்பதில் ஐயமில்லை. அந்த அமைதி கடவுளுக்கும் நமக்கும் இடையே உருவாகின்ற நல்லுறவையும் பிறரோடு நாம் கொள்கின்ற நல்லுறவையும் குறிப்பதாகும். பாவத்தை முறியடித்து நம்மைக் கடவுளோடும் எல்லா மனிதரோடும் ஒப்புரவாக்குகின்ற பணியை இயேசு தம் சிலுவைச் சாவு வழியாக நிறைவேற்றினார். எனவே அவர் உலகுக்கு அமைதி கொணர்ந்தார் எனலாம்.

ஆனால் அதே இயேசு நாம் வாழும் உலகில் ''பிளவையும் உண்டாக்குகிறார்'' (லூக் 12:51). இயேசு கொணர்கின்ற பிளவு பற்றி இயேசுவின் குழந்தைப் பருவத்தின்போதே அறிவிக்கப்பட்டது. குழந்தை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிப்பதற்காக மரியாவும் யோசேப்பும் செல்கிறார்கள். அங்கே சிமியோன் என்னும் இறைவாக்கினர் இயேசு மக்களிடையே பிளவு கொணர்வார் என முன்னறிவிக்கிறார்: ''இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்...'' (லூக் 2:34). ஒருசிலர் இயேசுவை ஏற்பர், வேறு சிலர் அவரை எதிர்ப்பர். இவ்வாறு மனிதரிடையே பிளவு உண்டாகும். இயேசு வாழ்ந்த சமுதாயத்தில் குடும்ப உணர்வு மிக ஆழமாக வேரூயஅp;ன்றியிருந்தது. துன்ப துயரங்கள் ஏற்பட்ட வேளைகளிலும் மக்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாமல் நெருங்கிய குடும்ப உணர்வோடு வாழ்ந்தார்கள். அவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்த குடும்பங்களிலும் இயேசுவின் பொருட்டு பிளவு எற்பட்டது. ஏனென்றால் அக்குடும்பங்களில் சிலர் இயேசுவை ஏற்றார்கள், பிறர் அவரை எதிர்த்தார்கள். இவ்வாறு இயேசுவின் வருகையால் மனிதரிடையே பிளவு ஏற்பட்டது தொடக்க காலத் திருச்சபையில் தெளிவாகத் தெரிந்தது. அதையே லூக்கா பதிவுசெய்துள்ளார். இன்றைய உலகிலும் இயேசுவை ஏற்போரும் அவரை எதிர்ப்போரும் உள்ளனர். இயேசுவின் மதிப்பீடுகளின்படி நடப்போரும் அவருடைய போதனைகளைப் புறக்கணிப்போரும் உள்ளனர். ஏன், இயேசுவின் சீடர்களாகத் தம்மை அடையாளம் காட்டுவோர் கூட சிலவேளைகளில் அவருடைய போதனையை மறந்து விடுகிறார்கள். ஆக, இயேசு ''முரண்பாட்டு அறிகுறியாக'' இன்றும் உள்ளார் என்பதில் ஐயமில்லை. இயேசு கொணர்கின்ற அமைதி ஒருவிதமான மயான அமைதி அல்ல. கடவுளையும் மனிதரையும் ஒருங்கிணைக்கின்ற இயேசுவை நாம் ஏற்கிறோமா அல்லது எதிர்க்கிறோமா என்பதைப் பொறுத்தே நம் வாழ்விலும் நாம் வாழ்கின்ற உலக சமுதாயத்திலும் உண்மையான அமைதி நிலவும் என்பதே உண்மை.

மன்றாட்டு:

இறைவா, உண்மையான அமைதியை உம்மில் கண்டுகொள்ள அருள்தாரும்.