யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 21வது வாரம் திங்கட்கிழமை
2013-08-26


முதல் வாசகம்

நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான, வாழும் கடவுளுக்கு ஊழியம் புரியக் கடவுளிடம் திரும்பி வந்தீர்கள்
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5, 8-10

சகோதரர் சகோதரிகளே, தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற தெசலோனிக்க சபைக்கு, பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள உங்கள் மன உறுதியையும் நம் தந்தையாம் கடவுள்முன் நினைவுகூருகிறோம். கடவுளின் அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே! நீங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனெனில் நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி, தூய ஆவி தரும் வல்லமையோடும் மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டுவந்தோம். உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். எப்படியெனில் ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நடுவிலிருந்தே பரவியது. கடவுள்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பது மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் தெரிய வந்துள்ளது. எனவே இதைப்பற்றி நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. நாங்கள் உங்களிடம் வந்தபோது எவ்வாறு நீங்கள் எங்களை வரவேற்றீர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான, வாழும் கடவுளுக்கு ஊழியம் புரியக் கடவுளிடம் திரும்பி வந்தீர்கள் என்றும் கூறிவருகிறார்கள். இவ்வாறு நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப்போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்;
திருப்பாடல்கள் 149: 1-2. 3-4. 5-6ய,9

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வாராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவாராக! 6ய அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு! யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 13-22

அக்காலத்தில் இயேசு கூறியது: ``வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை. வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களை விட இரு மடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள். குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு! யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா? யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் அதில் படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். குருடரே! எது சிறந்தது? காணிக்கையா? காணிக்கையைத் தூயதாக்கும் பலிபீடமா? எனவே பலிபீடத்தின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதன் மேலுள்ள அனைத்தின்மீதும் ஆணையிடுகிறார். திருக்கோவிலின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதில் குடிகொண்டிருக்கிறவர்மீதும் ஆணையிடுகிறார். வானத்தின்மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணைமீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள்மீதும் ஆணையிடுகிறார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ...நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை'' (மத்தேயு 23:13-14)

இயேசு மக்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்தபோது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் பலர். அவர்கள் நடுவே யூத சமயத்தின் நுணுக்கங்களைத் தெரிந்த மறைநூல் அறிஞரும், சமய நெறிகளைத் துல்லியமாகக் கடைப்பிடித்துவந்த பரிசேயரும் இருந்தனர். அவர்களைப் பார்த்து இயேசு கூறிய வார்த்தைகள் உண்மையிலேயே கடினமானவை. அவர்களை இயேசு ''வெளிவேடக்காரர்கள்'' என்று கூறிக் கடிந்துகொண்டார். சமய நெறியை விளக்குகிறோம் என்று சொல்லி மக்கள்மீது கடினமான சுமையைச் சுமத்திவிட்டு, தாங்கள் மட்டும் அந்த நெறிப்படி நடக்காமல் இருந்த அந்த வெளிவேடக்காரர்களைப் பின்பற்றலாகாது என்று இயேசு கூறினார். அவர்களுடைய தவறான செயல்பாட்டைச் சுட்டிக்காட்டிய இயேசு அவர்கள் விண்ணரசில் நுழைவதுமில்லை, விண்ணரசில் நுழைய விரும்புவோரை விடுவதுமில்லை என்றுகூறிக் கடிந்தார். இக்கருத்தைக் கவிதையாக வடித்த கண்ணதாசன் இயேசுவின் எதிரிகளை ''வைக்கோற் போரில் படுத்த நாய்''க்கு ஒப்பிடுவது கருதத்தக்கது:

''வைக்கோற் போரில் படுத்த நாய்போல் தானுண்ணாமல் உண்ண விடாமல் தடுக்கும் உமக்கு ஐயோ கேடு!'' (இயேசு காவியம், பாடல் எண் 108, பக். 283).

பிறருக்கு நல்லதே செய்ய வேண்டும் என இயேசு வழங்கிய போதனையை மறந்துவிட்டு அவர்களுக்குத் தீங்கிழைக்க முனைவோர் இயேசுவின் வழியில் நடக்க மறுக்கின்றனர். அவர்கள் நல்லது செய்வதுமில்லை, பிறர் நல்லது செய்ய விடுவதுமில்லை. இத்தகையோர் நடக்கும் வழி அழிவுக்கே இட்டுச்செல்லும். மாறாக, இயேசுவைப் போல நாமும் பிறருக்காக வாழ்ந்தால் விண்ணரசில் புகுந்திடத் தகுதி பெறுவோம்.

மன்றாட்டு:

இறைவா, பிறருக்கு நன்மை செய்வதில் நாங்கள் நிலைத்திருக்க அருள்தாரும்.