யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-09-10


முதல் வாசகம்

நீங்கள் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள்
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-15

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டீர்கள். அவரோடு இணைந்து வாழுங்கள். அவரில் வேரூன்றியவர்களாகவும் அவர்மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். நன்றி மிக்கவர்களாய்த் திகழுங்கள். போலி மெய்யியலாலும் வீணான ஏமாற்றுப் பேச்சாலும் உங்களை யாரும் கவர்ந்துகொள்ள விடாதீர்கள். அவை கிறிஸ்துவை அல்ல, மனித மரபுகளையும் உலகின் பஞ்சபூதங்களையும் சார்ந்தவை. அவற்றைக் குறித்துக் கவனமாயிருங்கள். இறைத் தன்மையின் முழு நிறைவும் உடலுருவில் கிறிஸ்துவுக்குள் குடிகொண்டிருக்கிறது. அவரோடு இணைந்திருப்பதால் நீங்களும் நிறைவு பெறுகிறீர்கள். ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், அனைவரும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர். நீங்கள் மனிதக் கையால் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் அல்ல; கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் அவர் வழியாய் விருத்தசேதனம் செய்யப்பட்டு ஊனியல்பைக் களைந்துள்ளீர்கள். நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள். உடலில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார். நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்துவிட்டார். தம் சிலுவையினால் கிடைத்த வெற்றியால் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகியோரின் படைக்கலன்களைக் கிறிஸ்து பிடுங்கிக் கொண்டு அவர்களை இகழ்ச்சிக்குள்ளாக்குமாறு ஊர்வலமாக இழுத்துச் சென்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்
திருப்பாடல்கள் 145;1-2,8-11

1 என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். 2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19

அந்நாள்களில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே. இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள். அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''விடிந்ததும் இயேசு தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்'' (லூக்கா 6:13)

''பன்னிரு திருத்தூதர்'' இயேசுவோடு மிக நெருக்கமான உறவில் ஒன்றித்திருந்த சீடர்கள் ஆவர். இப்பன்னிருவரும் ''அப்போஸ்தலர்'' என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர். கிரேக்க மொழியில் ''அப்போஸ்தொலோஸ்'' என்றால் ''அனுப்பப்பட்டவர்'', ''தூதர்'' என்பது பொருள். இவர்கள் எதற்காக அனுப்பப்பட்டார்கள் என்பதை நற்செய்தி ஆசிரியர்கள் எடுத்துக் கூறுகின்றனர். அதாவது, ''தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் இயேசு பன்னிருவரையும் நியமித்தார்'' (மாற் 3:14-15). லூக்காவும் மாற்கும் இச்செய்தியை விவரிக்கும்போது ''இயேசு ஒரு மலைக்குப் போனார்'' என்றும், அப்போது பன்னிருவரையும் திருத்தூதர்களாக ஏற்படுத்தினார் எனவும் குறிப்பிடுகின்றனர் (மாற் 3:13; லூக் 6:12). அது மட்டுமன்று, இயேசு ''மலைக்குப் போய் அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்'' எனவும் லூக்கா எழுதுகிறார் (லூக் 13:12). ''மலை'' என்னும் உருவகம் விவிலிய வழக்கில் சிறப்பான பொருளுடைத்தது. எடுத்துக்காட்டாக, எரிந்துகொண்டிருந்த முட்புதரின் நடுவே கடவுளின் பிரசன்னத்தை மோசே உணர்ந்து அனுபவித்தது ஓரேபு என்னும் மலையில் (விப 3:1-6); இஸ்ரயேல் மக்களோடு கடவுள் உடன்படிக்கை செய்துகொண்டது சீனாய் என்னும் ''மலை''யில் நிகழ்ந்தது; அதே மலையில்தான் மோசே கடவுளிடமிருந்து திருச்சட்டத்தைப் பெற்று அதை மக்களுக்கு அறிவித்தார் (விப 19:20-25; 20:1-21). மேலும் இயேசு மலைமீது உருமாற்றமடைந்த போதும் (மத் 17:1-9) ஒலிவ மலையில் துன்புற்ற போதும் தம்மோடு சில திருத்தூதர்களை அழைத்துச் சென்றிருந்தார் (லூக் 22-39:42). ஆக, ''மலை'' என்னும் உருவகத்தின் வழியாக நற்செய்தி ஆசிரியர்கள் உணர்த்துகின்ற கருத்து இது: இயேசு பன்னிருவரைத் திருத்தூதர்களாக ஏற்படுத்திய நிகழ்ச்சி கடவுளின் திட்டத்தில் மிக முக்கியமான ஒன்று. கடவுளின் உடனிருப்பு அந்த நிகழ்ச்சியில் தோன்றுகிறது. முற்காலத்தில் பன்னிரு குலத்தலைவர்கள் இஸ்ரயேல் மக்களுக்கு அடித்தளம் போல அமைந்தார்கள். அதுபோல, புதிய உடன்படிக்கையின்போது பன்னிரு திருத்தூதர்கள் இயேசு உருவாக்குகின்ற புதிய சமூகத்திற்குத் அடித்தளம் போல அமைவார்கள்.

இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு அம்சம் இயேசு தாம் தேர்ந்துகொண்ட பன்னிருவருக்கும் ''திருத்தூதர் என்று பெயரிட்டார்'' என்னும் செய்தியாகும். மண்ணையும் விண்ணையும் படைத்த கடவுள் படைப்புப் பொருள்களுக்குப் ''பெயரிட்டார்'' என்னும் செய்தி தொடக்க நூலில் உண்டு (தொநூ 1:3-10). அவை அனைத்தும் அவருடைய உடைமைகள். விலங்குகளுக்குப் ''பெயரிடும்'' பொறுப்பைக் கடவுள் ஆதாமுக்குக் கொடுத்த போது முதல் மனிதர்கள் கடவுளின் வல்லமையில் பங்கேற்று, படைப்புப் பொருள்களை ஆண்டு நடத்தும் பொறுப்பையும் பெற்றார்கள் (தொநூ 2:20). அதுபோலவே, இயேசு பன்னிருவருக்குத் ''திருத்தூதர் என்று பெயரிட்ட'' நிகழ்ச்சியிலிருந்து அவர்களுக்குத் தம் அதிகாரத்தையும் ஆற்றலையும் பகிர்ந்தளிக்கின்றார் என நாம் அறிகிறோம். திருச்சபையின் பண்புகளில் ஒன்று அதன் ''திருத்தூது இயல்பு'' ஆகும். அதாவது, மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து, அவர்களை இயேசு அறிவித்த இறையாட்சியில் பங்கேற்க அழைக்கும் பொறுப்பைப் பன்னிரு திருத்தூதர்களும் பெற்றது போல, கிறிஸ்துவின் பெயரால் கூடிவருகின்ற திருச்சபையும் இயேசு பற்றிய ''தூது அறிவிக்க'' அனுப்பப்பட்டுள்ளது. நாம் நற்செய்தியின் ''தூதுவர்களாக'' முழு மூச்சுடன் செயல்பட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பின் செய்தியை உலகுக்கு அறிவிக்க எங்களுக்கு ஆற்றல் அளித்தருளும்.