யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 27வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-10-11


முதல் வாசகம்

ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம்; அது வந்து விட்டது.
இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 1: 13-15; 2: 1-2

குருக்களே, சாக்கு உடை உடுத்திக் கொண்டு தேம்பி அழுங்கள்; பலிபீடத்தில் பணிபுரிவோரே! அலறிப் புலம்புங்கள்; என் கடவுளின் ஊழியர்களே, சாக்கு உடை அணிந்தவர்களாய் இரவைக் கழியுங்கள்; ஏனெனில், உங்கள் கடவுளின் வீட்டில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமற் போயின. உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்; ஊர்ப் பெரியோரையும் நாட்டில் குடியிருப்போர் அனைவரையும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தில் கூடிவரச் செய்யுங்கள்; ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள். மிகக் கொடிய நாள் அந்த நாள்! ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; எல்லாம் வல்லவர் அழிவை அனுப்பும் நாளாக அது வரும். சீயோனிலே எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; என்னுடைய திருமலைமேலிருந்து கூக்குரலிடுங்கள்; நாட்டில் குடியிருப்பவர்கள் அனைவரும் நடுங்குவார்களாக! ஏனெனில், ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம்; அது வந்து விட்டது. அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள்; மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்; விடியற்கால ஒளி மலைகள்மேல் பரவுவதுபோல், ஆற்றல்மிகு வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் வருகின்றது; இதுபோன்று என்றுமே நிகழ்ந்ததில்லை; இனிமேல் தலைமுறை தலைமுறைக்கும் நிகழப்போவதும் இல்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகிற்கு ஆண்டவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்.
திருப்பாடல்கள் 9: 1-2. 5,15. 7b-8

1 ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். 2 உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன். பல்லவி

5 வேற்றினத்தாரைக் கண்டித்தீர்; பொல்லாரை அழித்தீர்; அவர்களது பெயர் இனி இராதபடி அடியோடு ஒழித்துவிட்டீர். 15 வேற்றினத்தார் வெட்டின குழியில் அவர்களே விழுந்தனர்; அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில் அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன. பல்லவி

7b ஆண்டவர் அரியணையில் என்றென்றும் வீற்றிருக்கின்றார்; நீதி வழங்குவதற்கென்று அவர் தம் அரியணையை அமைத்திருக்கின்றார். 8 உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்; மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 15-26

அக்காலத்தில் மக்களுள் சிலர் இயேசுவைக் குறித்து, ``பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்'' என்றனர். வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர். இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: ``தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள். நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா! வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார். என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார். ஒருவரை விட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், `நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்' எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும். மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''அவர்களுள் சிலர், 'பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்' என்றனர். வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்'' (லூக்கா 11:15-16)

இயேசு புரிந்த புதுமைகள் அதிசயமான செயல்களாக மக்களுக்குத் தெரிந்தன. அவ்வாறு மக்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சிய விதத்தில் இயேசு செயல்பட்டதால் ஒருசிலர் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டனர். அவர்கள் எனவே ''பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இயேசு பேய்களை ஓட்டுகிறார்'' என முடிவுசெய்தனர் (காண்க: லூக் 11:15). கடவுளின் வல்லமை இயேசு வழியாக வெளிப்பட்டது என ஏற்றுக்கொண்டால் இயேசு அறிவித்த செய்தியையும் ஏற்கவேண்டியிருக்கும். ஆனால் கடவுளின் வல்லமைக்கு எதிராகச் செயல்படுகின்ற தீய ஆவிகளின் உதவியோடு இயேசு செயல்பட்டார் என முடிவுசெய்துவிட்டால் கடவுளாட்சி பற்றி இயேசு அறிவித்த செய்தியையும் ஏற்கவேண்டியதில்லை. -- இவ்வாறு நினைத்தவர்கள் இயேசுவிடமிருந்து ''வேறு அடையாளம்'' எதிர்பார்த்ததாகக் கூறினார்கள். அந்த அடையாளம் ''வானத்திலிருந்து'' வரவேண்டும் எனவும் கேட்டார்கள் (காண்க: லூக் 11:6). இயேசுவின் போதனையை ஏற்கமுடியாது என்று முடிவுசெய்துவிட்ட பிறகு அவர் எவ்வளவு பெரிய அடையாளத்தைக் காட்டினாலும் அவருடைய எதிரிகள் நிறைவடைய மாட்டார்கள். இயேசுவை ஏற்க வேண்டும் என்றால் நம் உள்ளம் அடைபட்டிராமல் திறந்த நிலையில் இருக்கவேண்டும். நம் பார்வையில் நேர்மை வேண்டும். நம் இதயக் கதவுகளை மூடிவிட்ட பிறகு அங்கே கடவுளின் செயல் தோன்றட்டும் என நாம் எதிர்பார்த்தால் அந்த எதிர்பார்ப்பு கானல்நீர் போல மறைந்துபோகும். மாறாக, நம் உள்ளத்தில் கடவுளின் அருள் துலங்கிச் செயல்படும் வண்ணம் நம்மையே அவரிடத்தில் கையளித்துவிட்டால் நம் வாழ்விலும் அதிசயங்கள் நிகழும். கடவுளின் வல்லமை நம் வழியாகவும் வெளிப்படும். ஏனென்றால் கடவுள் மனிதரின் துணையோடுதான் தம் திட்டத்தைச் செயல்படுத்துகின்றார். கடவுளின் செயலை நம் வாழ்விலும் பிறர் வாழ்விலும் கண்டுகொள்ளவும், அதன் ஒளியில் புது மனிதர்களாக உருமாற்றம் அடையவும் வேண்டுமென்றால் கடவுளின் கைகளில் நம்மை முழுமையாகக் கையளித்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் வல்லமை எங்கள் வாழ்வில் துலங்குவதைக் கண்டுகொள்ள எங்களுக்கு அருள்தாரும்.