திருவழிப்பாட்டு ஆண்டு C (13-10-2013)

பத்து தொழுநோயாளர்கள்...ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள் (லூக்கா 17:13)/> பத்து தொழுநோயாளர்கள்...ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள் (லூக்கா 17:13)/> பத்து தொழுநோயாளர்கள்...ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள் (லூக்கா 17:13)/>


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் ஒன்றாக இணைந்து ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் வார வழிபாட்டில் பங்கேற்கும் அன்பின் சொந்தங்களே! உங்கள் அனைவருக்கும் என் கனிவான வாழ்த்தை உரிமையாக்குகிறேன். நலமளிக்கும் இயேசுவின் சந்நிதானத்தில் அவரது அன்பையும், ஆசீரையும் பெற்று மகிழ ஒன்று கூடியுள்ளோம்.

இன்றைய நாளில்: எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.! என்னும் அழைப்பையும், உண்மையையும் இறைவார்த்தைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அத்தோடு, நாம் கைவிடப்பட்ட நிலையிலிருந்தாலும் இறைவன் எப்பொழுதும் நம்மீது கரிசனையுடையவராக இருந்து நமக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்கின்றார். ஆகவே நாம் அனைவரும் வியத்தகு செயல்கள் நமக்காகப் புரிந்து, வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பை எப்பொழுதும் நமக்குக் காண்பித்து, தமது உறுதிமொழியையும்; தவறாது நிறைவேற்றி வரும் ஆண்டவருக்கு முழுமனதுடனே நன்றி சொல்லுவோம். அந்த இறைமொழிகளை அப்படியே ஏற்று அவற்றை நம் வாழ்வாக்குவது நமக்கு நல்லது. இதில் மாற்றுக் கருத்திற்கு இடமேயில்லை என்னும் நிலைப்பாட்டுடன் அவர் தந்த இறைமொழியை நம் வாழ்வாக்க முயல்வோம். தொடரும் திருப்பலியில் அர்த்தமுள்ள விதத்திலே பங்கேற்போம்.



முதல் வாசகம்

நாமான் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 14-17

அந்நாள்களில் நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறு பிள்ளையின் உடலைப் போல் மாறினது. பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து,�இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும்� என்றார். அதற்கு எலிசா, �நான் பணியும் வாழும் ஆண்டவர்மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன்� என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது நாமான் அவரை நோக்கி, �சரி, அப்படியே ஆகட்டும். ஆயினும் ஒரு சிறு வேண்டுகோள்; இரு கழுதைப் பொதி அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தாரும். இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர வேறு தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒருபோதும் செலுத்தமாட்டேன்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை மக்களினத்தார் காண வெளிப்படுத்தினார்.
திருப்பாடல்கள் 98: 1. 2-3a. 3b-4

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ய இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3b உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 8-13

அன்பிற்குரியவரே, தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர் பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள். இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன். பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: `நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவர் நம்மை மறுதலிப்பார். நாம் நம்பத் தகாதவரெனினும் அவர் நம்பத் தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது.' இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19

அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, ``ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்'' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ``நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்'' என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு அவரைப் பார்த்து, ``பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!'' என்றார். பின்பு அவரிடம், ``எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அன்புத் தந்தையே இறைவா!

உமது திருமகனார் மன்னிப்பு என்னும் அருட்சாதனத்தை ஏற்படுத்தி அதை முழுமையாக நிறைவேற்ற நீர் நியமித்தீருக்கும் எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: தூய ஆவியின் நிறை வல்லமையால் அவர்களை நிரப்பி, தீமைகளை முறியடிக்க வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் தந்தையே!

இறைவா, நீரே எங்கள் பிணிகளைப் போக்கி நலமளிக்கின்றீர் என நாங்கள் உணர்ந்து வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருக்கும் ஆண்டவரே

கவலை, நோய், துன்பம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெறத் தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக்கொள்ளவும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ள தந்தையே!

நாம் உம்மிடமிருந்து கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொண்டு. எமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக் கொள்ளவும் வேண்டிய நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ள தந்தையே!

நாம் உம்மிடமிருந்துகேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொண்டு, எமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக் கொள்ளவும் வேண்டிய நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருளவேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இறைவா,

நீர் எங்களோடு என்றும் வாழ்கின்றீர் என்னும் நம்பிக்கையை எங்களில் வளர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

உம்முடைய இரக்கத்தையும் அன்பையும் நாம் ஒவ்வொருவரும் ஆழமாக உணர்ந்து கொண்டு எல்லாச் சூழ்நிலையிலும் உமக்கு நன்றி கூறி வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''பத்து தொழுநோயாளர்கள்...'ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்'' (லூக்கா 17:13)

இயேசு தம் பணிக்காலத்தின்போது பல மக்களுக்கு நலமளித்தார். அவ்வாறு நலமடைந்தவர்களுள் தொழுநோயாளரும் இருந்தார்கள். இன்று நாம் தொழுநோய் என அறிவியல் முறையில் கருதுவது மட்டுமல்லாமல், எந்த விதமான தோல் நோயும் அக்காலத்தில் தொழுநோய் எனவே அழைக்கப்பட்டது. இயேசு மக்களுக்குக் குணமளிக்கிறார் என்னும் செய்தியைக் கேட்ட பத்துத் தொழுநோயாளர்கள் அவரை அணுகி அவர் தங்களைக் குணமளிக்க வேண்டும் என்று கேட்க விரும்புகிறார்கள்; ஆனால் யூத சட்டப்படி அவர்கள் தங்கள் நோய் பிறருக்குப் பரவிவிடாமல் இருக்க தூரத்தில்தான் நிற்க வேண்டும். அவர்கள் பிற மக்களோடு தொடர்புகொள்ளக் கூடாது என்னும் சட்டம் இருந்ததால் பிறரிடம் கையேந்தி பிச்சை கேட்டுத்தான் வாழ வேண்டியிருந்தது. இவ்வாறு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளர் இயேசுவிடம் வேண்டுகிறார்கள். இயேசு நினைத்தால் தங்களுக்குக் குணமளிக்க முடியும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அவர்களது நம்பிக்கை வீண்போகவில்லை. இயேசு அவர்களுக்குக் குணமளிக்கிறார்.

பத்துப் பேர் நோய்நீங்கப் பெற்ற பிறகும் ஒரே ஒருவர் மட்டுமே திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறார். இவ்வாறு வந்தவர் அக்காலத்தில் தாழ்ந்த இனத்தவராகக் கருதப்பட்ட சமாரியர் என்பது வியப்புக்குரியதே. ஆனால் இயேசு இந்தத் தாழ்த்தப்பட்ட மனிதரின் நம்பிக்கையைப் போற்றி உரைக்கிறார். ''உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது'' என்று பாராட்டிப் பேசுகிறார் (காண்க: லூக்கா 17:19). இங்கே ''நலம்'' என வருகின்ற சொல்லுக்கு உடல் நலம் தவிர, உள நலம், ஆன்ம நலம், மீட்பு என்னும் ஆழ்ந்த பொருள் உண்டு. இயேசுவின் அருளால் உடல்நலம் பெற்ற சமாரியர் கடவுளோடு நல்லுறவு அடைந்தார். நன்றியோடு கலந்த மகிழ்ச்சியை அச்சமாரியர் அடைந்தார். கடவுளின் அன்பினை அவர் தம் உள்ளத்தில் அனுபவித்தார். இயேசுவின் சீடராகிய நாமும் நம்பிக்கையோடு அவரை அணுகிச் சென்றால் நம் பிணிகள் யாவும் நீங்கிப் போக, நாம் ''முழு நலன்'' அடைவோம். இந்த அனுபவத்தைப் பெறுவோர் உண்மையில் பேறுபெற்றவர்களே'

மன்றாட்டு:

இறைவா, நீரே எங்கள் பிணிகளைப் போக்கி நலமளிக்கின்றீர் என நாங்கள் உணரச் செய்தருளும்.