யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 30வது வாரம் திங்கட்கிழமை
2013-10-28

சிமோன் யுதா


முதல் வாசகம்

கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22

சகோதரர் சகோதரிகளே, இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது. நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
திருப்பாடல்கள் 19: 1-2. 3-4

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. -பல்லவி

3 அவற்றிற்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம். திருத்தூதர்களின் அருளணியும் ஆண்டவரே, உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19

அக்காலத்தில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே. இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள். அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

அவரைத் தொடுவோம்

"அங்கு திரண்டிருந்த யாவரும் அவரைத் தொட முயன்றனர்" (லூக் 6'19) இதேN;பால பலரும் நம்மோடு தொடர்பு கொள்ளும்படியும் பலர் நம்மோடு உறவோடு வாழும்படியும் பலருக்குப் பயன்படும் விதத்திலும் நாம் வாழ்ந்தால், அந்த வாழ்வு தெய்வீகமயமாக இருக்கும்.பெருமையாக இருக்கும்.

இந்த உன்னதமான நிலையை எட்டிப்பிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல. இயேசுவைப்போல உயர்ந்த மலை உச்சிக்குச் செல்லவேண்டும். கொடைக்கானல்,ஊட்டிக்குச் செல்வதல்ல. அருகில் உள்ள ஆலயம்தான் அந்த மலை. அன்புச் செயல்களால், அதிகமான செபத்தால், தான தருமங்களால், நற்பண்புகளால் உயர்வடையும்போது, செயற்கையாக ஒரு மலையை உருவாக்கி அதன் உச்சிக்குச் செல்லவேண்டும்.

அங்கு கடவுளிடம் வேண்டுவதில் இரவெல்லாம் செலவிட வேண்டும். ஆண்டவரோடு உறவுள்ள மனிதருக்கு அண்டை அயலாருடைய அரவணைப்பு கிடைக்கும். நண்பர் பலர் தேடி வருவர். நல்லவைகள் நடக்கும். தொட்டவைகள் துலங்கும். நோய் பிணி அணுகாது. ஆண்டவனைத் தொட்டு தொடர்புகொண்டு வாழத்தெறிந்திருந்தால் வாழ்வே சொர்க்கம்தான்.

ஆண்டலனைத் தொட முயல்வோம். தொடரும் தெய்வ வல்லமை.

மன்றாட்டு:

இறைவா, தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தை எங்களில் உருவாக்கியருளும்.