யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 30வது வாரம் புதன்கிழமை
2013-10-30


முதல் வாசகம்

தாம் முன் குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்;
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-30

சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார். மேலும், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். தம்மால் முன்பே தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்கவேண்டும் எனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்கவேண்டும் என்றே இப்படிச் செய்தார். தாம் முன் குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்.
திருப்பாடல்கள் 13: 3-4. 5-6

3 என் கடவுளாகிய ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கி எனக்குப் பதில் அளித்தருளும்; என் விழிகளுக்கு ஒளியூட்டும். 4 அப்பொழுது, நான் சாவின் உறக்கத்தில் ஆழ்ந்து விடமாட்டேன்; என் எதிரி, `நான் அவனை வீழ்த்தி விட்டேன்' என்று சொல்லமாட்டான்; நான் வீழ்ச்சியுற்றேன் என்று என் பகைவர் அக்களிக்கவுமாட்டார். -பல்லவி

5 நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்; நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும். 6 நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 22-30

அக்காலத்தில் இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், ``ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?'' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: ``இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். `வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்' என்று கேட்பீர்கள். அவரோ, `நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது' எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், `நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே' என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், `நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்' என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இடுக்கமான பாதை

இயேசு எருசலேம் நகர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். எருசலேம் அரண் சூழ்ந்த நகர். சுற்றுச் சுவர்கள், காவல்மாடங்கள் நிறைந்த நகர். காரணம், அது அரசரின் நகர். ஏரோதின் அரண்மனை, பிலாத்துவின் அரண்மனை, தலைமைக்குருக்களிள் அரண்மனை எல்லா இங்கு உண்டு. இவை அனைத்திற்கும் மேலாக, பேரரசரின் நகர் இது. அரசர்க்கரசராம் யாவே இறைவனின் ஆலயமே அவ்வரண்மனை.

எருசலேம் நகருக்குள் நுழைவதாயினும், எருசலேம் தேவாலயத்துள் நுழைவதாயினும் அவ்வளவு எளிதல்ல. பல சிரமங்கள் துன்பங்கள் அடைந்தே நுழைய முடியும். இடுக்கான வாயில்கள், சில நுழைவாயில்களில் மிகக் குனிந்தும் தவண்டும் செல்லவேண்டும். எருசலேம் தேவாலயத்துள் நுழைவதும் அவ்வளவு எளிதல்ல.

இந்த அன்றாட அனுபவத்தை, புதிய எருசலேமாம் விண்ணகத்தில் நுழைய "இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்" என்கிறார் இயேசு. நாங்கள் உம்மோடு உண்டோம், குடித்தோம் என்பதெல்லாம் வகைக்கு உதவாதவை. தன்னுடைய சிலுவையை நாள்தோறும் சுமந்து இயேசுவைப் பின் செல்பவனும், எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்து இயேசுவைப் பின் செல்பவனும், பசியாய் இருந்தவனுக்கு உண்ணக்கொடுத்தவனும், தாகத்தைத் தணித்தவனும், அன்னியனை ஏற்றுக்கொண்டவனும்,.. இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுபவர்களே.

இப்பாதையில் நுழையும் ஒருவராக உன்னை உறுதிப்படுத்திக்கொள்.

மன்றாட்டு:

இறைவா, மனித வாழ்வு சிறு தொடக்கமாயினும் நிறைவை நோக்கி நீர் எங்களை வழிநடத்துகிறீர் என நாங்கள் உணர்ந்து செயல்பட அருள்தாரும்.