யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் திங்கட்கிழமை
2013-11-04

புனித சார்ல்ஸ். பொரோமியோ


முதல் வாசகம்

அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின;
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 29-36

சகோதரர் சகோதரிகளே, கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை. ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக்கொண்டீர்கள். அது போல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்குரியவர்களாக இருக்கிறீர்கள்; அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக்கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது. ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார். கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! ``ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?'' அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உமது பேரன்பின் பெருக்கினால் கடவுளே, எனக்குப் பதில் தாரும்.
திருப்பாடல்கள் 69: 29-30. 32-33. 35-36

29 எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! 30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி

32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. பல்லவி

35 கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். 36 ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்புகூர்வோர் அதில் குடியிருப்பர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-14

அக்காலத்தில் தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ``நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

வேறுபாடான விருந்து

இதற்கு முன்னைய பகுதியில் விருந்தில் மனிதாபிமானம் இருந்தால் மகிழ்ச்சி பெருகும் என்று பாரத்தோம். இப்பகுதியில் இன்னும் ஒரு படி முன் சென்று எதிர்பாராத மகிழ்ச்சியை பிறருக்கு வழங்குவதன் மூலம் நாம் அடையும் இனம்புரியாத தெய்வீக மகிழ்ச்சியை அறிமுகம் செய்கிறார்.

இத்தகைய இனம்புரியாத தெய்வீக மகிழ்ச்சியை பெறுவதற்கு சற்று வித்தியாசமாகச் செயல்படச் சொல்கிறார். ஆம். உங்கள் அழைப்பில் அந்த வேறுபாடு இருக்க வேண்டும். உறவுகளை அழைப்பதற்குப் பதிலாக அன்னியர்களை அழையுங்கள். செல்வம் படைத்தோருக்குப் பதிலாக வருமையில் வாடுவோருக்கு வாய்ப்பு கொடுங்கள்.

வீட்டில் விருந்து என்றால் ஒரு பகுதியை ஒரு ஏழைக் குழந்தையின் கல்விக்கென ஒதுக்கி வையுங்கள். விருந்தில் ஒரு பகுதியை அருகில் உள்ள கருணை இ;ல்லம், முதியோர் இல்லம் இவற்றுக்கு வழங்குங்கள். குழந்தையின் பிறந்த நாள், ஊர் திருவிழா, வெள்ளி விழா, கிறிஸ்மஸ் விருந்து நிகழ்ச்சிகளின் போது எதிர்பாராதவர்களை அழையுங்கள். இவர்கள் மகிழ்வதைக் காணும் உங்கள் உள்ளம் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

இதுவே இயேசு விரும்பும் விருந்து. இயேசு தரும் மகிழ்ச்சி. இத்தகைய எதிர்பாராதவைகளை உங்கள் வாழ்வில் செய்து, எதிர்பாராதவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியைக் கொடுங்கள். நீங்கள் நிறைவடைவீர்கள்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவை எங்களுக்குக் கொடையாகத் தந்ததற்கு நன்றி!