யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-11-05


முதல் வாசகம்

ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 5-1

சகோதரர் சகோதரிகளே, நாம் பலராய் இருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம். ஆயினும், நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு அருள்கொடைகளைப் பெற்றுள்ளோம். இறைவாக்கு உரைக்கும் கொடையை நாம் பெற்றிருந்தால் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அதைப் பயன்படுத்த வேண்டும். தொண்டாற்றும் கொடையை நாம் பெற்றிருந்தால் அதைத் தொண்டு புரிவதற்குப் பயன்படுத்த வேண்டும். கற்றுக்கொடுப்போர் கற்றுக்கொடுப்பதிலும், ஊக்கமூட்டுவோர் ஊக்கம் தருவதிலும், தமக்குள்ளதை வழங்குவோர் தாராளமாய்க் கொடுப்பதிலும், தலைமை தாங்குவோர் முழு ஆர்வத்தோடு செயல்படுவதிலும், இரக்கச் செயல்களில் ஈடுபடுவோர் முக மலர்ச்சியோடு அவற்றைச் செய்வதிலும் தாம் பெற்ற அருள் கொடைகளைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களை விட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். விடாமுயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள். எதிர் நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள். வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள். உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம். மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள். நீங்கள் ஒரு மனத்தவராய் இருங்கள்; உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் நெஞ்சம் அமைதிபெற உம் திருமுன் வைத்துக் காத்தருளும்.
திருப்பாடல்கள் 131: 1. 2. 3

1 ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. பல்லவி

2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. பல்லவி

3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-24

அக்காலத்தில் இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இயேசுவிடம், ``இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்'' என்றார். இயேசு அவரிடம் கூறியது: ``ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, `வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகிவிட்டது' என்று சொன்னார். அவர்கள் எல்லாரும் ஒருவர் பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர். முதலில் ஒருவர், `வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார். `நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார் வேறொருவர். `எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது' என்றார் மற்றொருவர். பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார். வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், `நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டி வாரும்' என்றார். பின்பு பணியாளர், `தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது' என்றார். தலைவர் தம் பணியாளரை நோக்கி, `நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டி வாரும். அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்' '' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

விருந்துக்கு வருகிறீர்களா?

இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட ஒருவர், சாக்குப்போக்குச் சொல்லி அதில் கலந்து கொள்ளாவிட்டால், அந்த மனிதன் மேல் நாம் பரிதாபப்படுவோம். பைத்தியக்காரன் என்று சொல்வோம்.

இறுதி நாட்களில் இறைவன் தரும் விண்ணக விருந்தில் கலந்துகொள்ளாமல் நொண்டிச் சாக்குச் சொல்வோர் இத்தகையோரே. தினமும் திருப்பலி விருந்தில் பங்கு பெறாது காரணம் சொல்வோரும் இக்கூட்டத்தில் சேர்வர். பிறருக்கு உதவி செய்து,ஆறுதல் அளித்து அதில் ஒரு விருந்தின் மகழ்ச்சியைப் பெறும் வாய்ப்பு கிடைத்தும் அதை உதறிச் செல்வோரும் இவர்களே.

வயல் வாங்குவதும், ஏர் மாடுகள் வாங்குவதும், திருமணம் முடிப்பதும், அன்றாட நிகழ்வுகள். சர்வ சாதாரண நிகழ்ச்சிகள். வாழ்வின் இத்தகு அன்றாட நிகழ்ச்சிக்காக கிடைத்தற்கரிய விருந்தை மறுப்பது அறிவுடமையாகாது. உன்னதமான, தெய்வீக ஆசீரை அனுபவிக்க, சில உலகிற்கடுத்த காரியங்களை தியாகம் செய்வதே விவேகம்.

நாம் கலந்து கொள்ளாவிட்டால், நமக்காக அந்த வாய்ப்பு காத்திருக்காது. கொஞ்ச காலம் கடந்து பார்த்துக்கொள்ளலாம் என்று பிந்தி போட முடியாது. யாருக்கும் அந்த இடம் கொடுக்கப்படலாம். ஆகவே தயாராக இருப்போம். விருந்தை உண்டு மகிழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவை எங்களுக்குக் கொடையாகத் தந்ததற்கு நன்றி!