திருவழிப்பாட்டு ஆண்டு A (08-12-2013)

ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்/> ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்/> ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்/> ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்/> ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்/>


திருப்பலி முன்னுரை

இயேசு பாலகனின் பிறப்பைக் தூய்மையான உள்ளத்தோடு கொண்டாட, அவரை இதயத்தில் வரவேற்க இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி வரவேற்கின்றோம்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு. இறைவனுடைய நீதி எப்படிப்பட்டது என்பதனையும், அவர் எவ்வாறு நீதி வழங்குவார் என்பதனையும், இறைவனுடைய அரசாட்சி நாட்களில் உலகில் உறவும், அமைதியும், சமத்துவமும், சுக வாழ்வும் நிலைபெறும் என்றும் இன்றைய இறைவார்த்தைகள் நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டி நிற்கின்றன. நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்: என்னும் வார்த்தைகள் இன்று நமக்கு புதிய நம்பிக்கையை ஊட்டுவதாய் உள்ளன. எனவே நாம் ஒவ்வொருவரும், ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் என்னும் அழைப்பை இதயத்தில் ஆழமாக ஏற்று, இயேசுவினுடைய பிறப்பு விழாவைத் சிறப்பாகக் கொண்டாட நம்மையும், நமது பிள்ளைகளையும், நமது குடும்பத்தையும் தகுந்த முறையில் ஆயத்தம் செய்வோம். மனமாற்றம் பெற, உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ள இறையருள் கேட்டுத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்:
எசாயா ஆகமத்திலிருந்து வாசகம்11;1-10

ஆண்டவருக்குரிய நாளில் ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்: அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்". அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார். கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்: காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்: நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்: நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்: வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்: உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். நேர்மை அவருக்கு அரைக்கச்சை: உண்மை அவருக்கு இடைக்கச்சை. அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்: கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்: பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்": அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்: சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும்: பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்: பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை: கேடு விளைப்பார் யாருமில்லை: ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும். அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிறஇனத்தார் தேடி வருவார்கள்: அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்ததாக இருக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்.
திருப்பாடல் 72;1-2,7-8,12-13,17

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக பல்லவி

. அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார் பல்லவி

.12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார பல்லவி.

! 17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக!பல்லவி

இரண்டாம் வாசகம்

"பிறஇனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்: உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்15;4-9

சகோதர சகோதரிகளே, முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! இவ்வாறு நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள். ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே. கடவுள் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுமாறு கிறிஸ்து விருத்தசேதனம் செய்து கொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார். மூதாதையருக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தவும், பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார். ஆகவே, "பிறஇனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்: உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன் " என் இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3;1-12

அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது " என்று பறைசாற்றி வந்தார். இவரைக் குறித்தே, " பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் " என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்: தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்: வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். எருசலேமிலும் யூதேயாமுழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள். பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, " விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். "ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை " என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும். நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்: தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்: ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் " என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

இறைவாக்கினரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தந்தையே இறைவா!

நீர் இவ்வுலகில் எமக்கு இறைவாக்குரைத்துப் பணிசெய்யத் தந்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் திருமுழுக்கு யோவானைப் போல வலிமையும், சக்தியும், மாற்றமும் மனப்பக்குவமும் பெற்று, இறைமக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்லும் பணியை இக்காலத்தில் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லுவதற்கு வேண்டிய ஞான ஒளியை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனமாற்றத்தை விரும்பும் இறைவா!

ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள், மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்னும் உமது செய்தியை நாங்கள் எமது கவனத்திற் கொண்டு நாங்கள் இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்த்து தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்காது என்றும் விழிப்புடனிருந்து செயல்பட எமக்கு அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

இந்நாட்களிலே எமக்கு நீர் பல்வேறு விதமாக வெளிப்படுத்தும் உமது செய்தியையும், விருப்பத்தையும், சித்தத்தையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு உம்மோடும், எம் உறவுகளோடும் ஒப்புரவாகி, மனமாற்றமடைந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் மகன் குணமடைவான்” தாயும் தந்தையுமானவரே!

உம் சந்நிதானத்தில் உம் பிள்ளைகளாகிய நாங்கள் பல்வேறு தேவைகள் நிறைவேற வேண்டி நிற்கிறோம் ஆண்டவரே. நாங்கள் எப்போதும் உம் அளவற்ற அன்பை சுவைக்கவும் அதனை பிறருக்கு அளிக்கவும் வேண்டிய தராள மனதை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

எமது இளைஞர்கள் மனமிரங்கி, அவர்கள் தீமைகளைத் தவிர்த்து ஆன்மீக வாழ்வில் ஆர்வமுள்ளவர்களாக வாழுவதற்கு வேண்டிய அருளை அளித்து, அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''யோவான் தொடர்ந்து, 'என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்...' எனப் பறைசாற்றினார்'' (மாற்கு 1:7)

மாற்கு நற்செய்தியின் தொடக்கத்தில் நாம் சந்திக்கின்ற முதல் ஆள் திருமுழுக்கு யோவான். இவர் தம்மைப் பற்றி அறிவிக்கவில்லை; மாறாகத் தமக்குப் பின் வரவிருக்கின்ற ஒருவரைப் பற்றி அறிவிக்கிறார். யோவான் பாலை நிலத்தில் தோன்றி மக்களை நோக்கி, ''பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்'' என்று அறிவித்தபோது மக்கள் அவரை ஓர் இறைவாக்கினராகப் பார்த்திருப்பர். பண்டை நாள்களில் இஸ்ரயேலிலும் யூதாவிலும் தோன்றிய இறைவாக்கினர் இவ்வாறே மக்களின் பாவங்களைச் சுட்டிக்காட்டி, அவர்கள் கடவுளை நோக்கித் திரும்ப வேண்டும் என்று கேட்டனர். யோவான் கூறிய சொற்களைக் கேட்டு பல மக்கள் யோர்தான் ஆற்றில் இறங்கித் திருமுழுக்குப் பெற்றனர். ஏன், இயேசு கூட யோவானின் சொற்களுக்கு இணங்கி, திருமுழுக்குப் பெற்றார். இயேசுவைவிட யோவான் பெரியவரா என்னும் கேள்வி மக்களிடையே எழுந்திருக்க வேண்டும். அக்கேள்வி அர்த்தமற்றது என்று பதில்கூறுவதுபோல அமைந்துள்ளது யோவானின் கூற்று: ''என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார்'' (மாற்கு 1:7). யோவான் கடவுளின் பெயரால் பேசினார். ஆனால் இயேசுவோ கடவுளின் மகனாக நம்மிடையே வந்தார். இந்த உண்மையை யோவானின் சொற்கள் நமக்கு உணர்த்துகின்றன.

மனிதர் நடுவே யார் பெரியவர் என்னும் கேள்வி இயல்பாகவே எழுவதுண்டு. சிறுவர்கள் விளையாடும்போது யார் அதிகத் திறமையாக ஆடுகிறார்கள் என்று பார்க்க போட்டியில் ஈடுபடுவதை நாம் காணலாம். அதுபோலவே வளர்ந்தவர்கள் நடுவிலும் போட்டி என்பது சில வேளைகளில் மிகக் கடுமையாக இருப்பதும் உண்டு. யோவான் இவ்வாறு போட்டியில் ஈடுபடவில்லை. அவருக்கென்று கடவுள் அளித்த பணி என்னவென்பதை அவர் உணர்ந்தார். அப்பணியை நிறைவேற்றுவதிலேயே அவர் முனைந்திருந்தார். எனவே, இயேசுவைப் பற்றி யோவான் கூறிய சொற்களும், இயேசுவின் வருகைக்குப் பிறகு யோவான் இயேசுவைப் பற்றிச் சான்று கூறியதும் அவருடைய பணிவான, பண்பட்ட மன நிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. போட்டி மனப்பான்மை என்பது சில வேளைகளில் கசப்பான விளைவுகளை உண்டாக்கிவிடுவதுண்டு. எப்படியாவது பிறரைத் தோற்கடிக்க வேண்டும் என முனைந்து செயல்படுவோர் தங்கள் முயற்சியில் தோற்றுப்போனால் ஏதோ வாழ்க்கையே ஒரு தோல்வியாக மாறிவிட்டதாக நினைத்துச் சோர்ந்துபோவதும் உண்டு. கடவுள் நமக்குத் தருகின்ற பணியை நன்முறையில் ஆற்றுவதே நம் பொறுப்பு என நாம் உணர்ந்தால் வீண் போட்டிகள் நம் எண்ணத்திலிருந்தே மறைந்து போகும்.

மன்றாட்டு:

இறைவா, வீண் பெருமைக்கு இடம் கொடாமல் வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.