திருவழிப்பாட்டு ஆண்டு A (24-12-2013)

உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/>


திருப்பலி முன்னுரை

நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாட பெருமகிழ்ச்சியுடன் ஒன்று கூடியுள்ளோம்.

மார்கழி பெற்றெடுத்த மனிதநேயம் பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்தான் இந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கன்னிமரி வயிற்றில் மனுவுரு எடுத்த இறைவன், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இன்றும், இந்த மண்ணில் மனுஉரு எடுக்கிறார். மீண்டும் ஒருமுறை மனிதருக்கு போதிக்க, புதுமைகள் புரிய மண்ணகத்தை படைத்தவன், இன்று நம்மிடையே மனிதனாக பிறக்கிறார். அன்று இறைமகன் இயேசுவின் நோக்கம் எதுவாக இருந்ததோ, அதுவே இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்த கூடியதாக இருக்கிறது. இதைதான் விவிலியத்தில் வானதூதர்களின் வாய்வழியாக “உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக” என்று வாசிக்கிறோம். “அமைதி உருவாக்கம” என்பதுதான் கிறிஸ்து பிறப்பின் மையமாக இருக்கிறது. உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய அமைதியை உருவாக்கம் செய்வது தான் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியாக உள்ளது. ஆகவே அச்சத்தை அகற்றி, அன்பை பெருக்கியும், உறவுகளை உண்டாக்கி, உயிரூட்டியும், எளியோரையும், வலியோரையும், ஏழையையும், பணக்காரரையும், ஆணையும், பெண்ணையும் சக மனிதராக சமமான மனிதராக உறுதி செய்யவும், நச்சு மனங்களை நல்ல மனங்களாக பிறக்கவும் தான் இந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழா நமக்கு அழைப்பு விடுகிறது. ஆகவே ஆண்டவரின் அருள், அவனியில் அபரிவிதமாக அருளப்படவும், ஆண்டவரின் பிறப்பு அவனியில் அனுகூலமாகவும், இந்த திருப்பலியில் தொடர்ந்து செபிப்போம்.

அல்லது



இறையேசுவில் இனிய சகோதரர்களே சகோதரிகளே நண்பர்களே, மகிமை மிகு இப் பெருவிழாவில் மனமுவந்து உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். மானிடரின் முழு விடுதலைக்காகத் தன்னையே கையளித்த இறைமகன் இயேசு உண்மையாகவே மானுடத்திற்கு விடுதலை அளிக்க, மனிதரின் மாண்பினை மீட்டெடுக்க வந்துள்ளார் என்பதை உணர்ந்து மகிழவும் நம் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்க்கு அம் மகிழ்வை உணர்த்தி வாழ்த்தி மகிழ்வோம்.

முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இக்காலத்தில்; தம் மகன் வழியாக நம்மோடு பேசுகின்றார். நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தினால் கடவுள் நம்மை மீட்டார்: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன, என்பது இயேசுவின் பிறப்பு நமக்குத் தரும் உறுதி மொழியாகும். இதுவே நமக்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி. இயேசுவின் பிறப்பு நம் ஒவ்வொருவருக்கும் எண்ணிறைந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகின்றது. விடுதலையும், மகிழ்வும், அமைதியும் அவரது பிறப்பின் வழியாக நாம் பெற்றுக்கொள்ளும் செல்வங்களாகும். இதற்காகவே மீட்பர் இயேசு நமக்காகப் பிறந்துள்ளார். இந்த நற்செய்தி கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோருக்கு நிறைவான மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாக இருக்கும். இந்த அருள் உண்மைகளை நம் மனத்தில் ஆழமாகப் பதித்தவர்களாக, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழவும், ஆண்டவருக்குள் மகிழ்ந்திருந்து, அவரை எப்பொழுதும் புகழ்ந்தேத்தவும், நாம் அனைவரும் அமைதியின் தூதர்களாக வாழவும் பணிபுரியவும் வரம் கேட்டுச் செபிப்போம்.

அல்லது

அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! அமைதியின் அரசர் இயேசுவின் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று நாம் அனைவரும் பெரும் மகிழ்வோடும் கிறிஸ்துவே எங்கள் சமாதானம், அவரே எங்கள் விடுதலை என்னும் மாபெரும் நம்பிக்கையோடும் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட ஒன்று கூடி நிற்கின்றோம்.

இழப்பின் மத்தியிலும், நம் இருப்பே கேள்விக்குறியாகி, வெறுமையையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கும் இந் நிலையிலும் நம் உறவுகளுக்கும், ஏன் நமக்கும் இன்றைய அருள்வாக்கு வழியாக நம் இறைவன் புதியதொரு விடுதலையும், அமைதியும் நீடித்ததுமான வாழ்வை வாக்களிக்கின்றார். படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும் என்னும் மாபெரும் வாக்குறுதி இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றது. அதுவே நமக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் அமைகின்றது. எனவே நாம் நம்பிக்கையற்று வாழும் நிலையிலிருந்து விடுபட்டு இறைவனில் நம்பிக்கை கொள்ளுவோம். இறையரசின் வீரர்களாக நாம் மாறுவோம், கிறிஸ்துவுக்கே முன்னுரிமை கொடுப்போம். ஏனெனில் ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஓர் ஆண்மகவு நமக்காகக் தரப்பட்டுள்ளார். இந்தச் சிந்தனைகளை ஆழமாக உள்ளத்தில் இருத்தியவர்களாக இறைவனுக்கு நன்றி கூறி விசுவாசத்தோடு இறைவரம் கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்:
எசாயா ஆகமத்திலிருந்து வாசகம் 9:1-6

ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது; முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார். காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்; அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர். அமளியுற்ற போர்க்களத்தில் போர்வீரன் அணிந்திருந்த காலணிகளும், இரத்தக் கறைபடிந்த ஆடைகள் அனைத்தும் நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும். ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ "வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்" என்று அழைக்கப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
திருப்பாடல் 6(95):1-2a.2b-3.11-12.13.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.

அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.

அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்.

இரண்டாம் வாசகம்

நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது.
திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2:11-14.

மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:1-14

அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், ' அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.12 குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் ' என்றார். உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, ' உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! ' என்று கடவுளைப் புகழ்ந்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

இறைவாக்கினரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தந்தையே இறைவா!

நீர் இவ்வுலகில் எமக்கு இறைவாக்குரைத்துப் பணிசெய்யத் தந்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் திருமுழுக்கு யோவானைப் போல வலிமையும், சக்தியும், மாற்றமும் மனப்பக்குவமும் பெற்று, இறைமக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்லும் பணியை இக்காலத்தில் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லுவதற்கு வேண்டிய ஞான ஒளியை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அரும்பெரும் செயல்கள்; புரியும் வல்லவராம் தந்தையே இறைவா!

நீர் எமக்கு கொடுத்துள்ள எல்லா வளங்களுக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம். இம் மகிழ்வின் காலத்தில் அவற்றை நாம் விரயமாக்காது, தேவையற்ற, ஆடம்பரப் பொருட்களுக்காகச் செலவிடாது பெறுப்புணர்வோடு அவைகளைப் பயன்படுத்துவதற்கும், ஏழைகளோடு அவற்றைப் பகிர்ந்து வாழ்வதற்கும் வேன்டிய நல்லுள்ளத்தை எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

இந்நாட்களிலே எமக்கு நீர் பல்வேறு விதமாக வெளிப்படுத்தும் உமது செய்தியையும், விருப்பத்தையும், சித்தத்தையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு உம்மோடும், எம் உறவுகளோடும் ஒப்புரவாகி, மனமாற்றமடைந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சிய+ட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!

இன்று இத்திருப்பலியில் பங்குகொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

எமது இளைஞர்கள் மனமிரங்கி, அவர்கள் தீமைகளைத் தவிர்த்து ஆன்மீக வாழ்வில் ஆர்வமுள்ளவர்களாக வாழுவதற்கு வேண்டிய அருளை அளித்து, அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, 'உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!' என்று கடவுளைப் புகழ்ந்தது'' (லூக்கா 2:13-14)

இயேசு இவ்வுலகில் ஒரு சிறு குழந்தையாகப் பிறந்தார் என்பது கிறிஸ்து பிறப்பு விழாவின் மையாமாக உள்ளது. அக்குழந்தை மனித இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தெய்வக் குழந்தை. அதே நேரத்தில் மனித இனத்தோடு தம்மை ஒன்றித்துக்கொண்ட கடவுளின் வெளிப்பாடு. மரியாவின் மகனாகப் பிறந்த குழந்தையைக் கண்டு வணங்கிட இடையர்கள் செல்கிறார்கள். இடையர்கள் அக்காலத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த வகுப்பினர். உலகத்தை மீட்க வந்த கடவுளுக்கு வணக்கம் செலுத்திட இவ்வுலகப் பெருமக்கள் வரவில்லை, மாறாக, இவ்வுலகம் கடையர் என யாரைக் கருதுகிறதோ அவர்களே கடையராக வந்து பிறந்து குழந்தையை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அவர்கள் இயேசுவுக்கு வணக்கம் செலுத்தியபோது விண்ணகமும் அவர்களோடு சேர்ந்துகொண்டது என லூக்கா விளக்குகிறார். விண்ணகத்தில் கடவுளின் பணியாளர்களாக விளங்குவோர் அவருடைய தூதர்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்த இசைத்த பண்புயர் கீதம் ''உன்னதத்தில்...'' எனத் தொடங்குகின்ற புகழ்ப்பாடல் ஆகும். அதில் கடவுளின் மாட்சி போற்றப்படுகிறது. அதே நேரத்தில் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்கின்ற மனிதருக்குக் கடவுளின் அமைதியும் வாக்களிக்கப்படுகிறது,

கடவுளின் மாட்சியும் மனிதரின் வாழ்வில் நிலவுகின்ற அமைதியும் தொடர்புடையனவா? கடவுளே மனிதராக மாறிவிட்டதால் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நெருங்கிய பிணைப்பு உருவாகிவிட்டது. அப்பிணைப்பின் விளைவுதான் மனித வாழ்வில் கடவுள் வழங்குகின்ற அமைதி. இந்த அமைதி வெறும் உளவியல் சார்ந்த சலனமற்ற நிலையைக் குறிப்பதில்லை. இந்த அமைதி கடவுளிடமிருந்து நமக்கு வருகின்ற ஒரு கொடை. கடவுளே தம்மை நம்மோடு பகிர்ந்துகொள்வதின் அடையாளம் இந்த அமைதி. இதை நம் வாழ்வில் ஒரு கொடையாக நாம் ஏற்கும்போது கடவுளின் மாட்சி ஆங்கே துலங்கி மிளிரும். மனிதரின் நிறை வாழ்வுதான் கடவுளின் மாட்சி என்றொரு கூற்று உண்டு. உண்மையிலேயே நாம் மனிதத்தை மதித்து வாழ்ந்தால் கடவுளின் உடனிருப்பு அங்கே ஒளிவீசும். அந்த ஒளியே கடவுளின் மாட்சியாக நம்மிடையே துலங்கி மிளிரும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு உம் அமைதியைத் தந்தருளும்.