யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
கிறீஸ்து பிறப்புக்காலம்
2014-01-06


முதல் வாசகம்

தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 22 - 4: 6

அன்பார்ந்தவர்களே, கடவுளிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக்கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம். அன்பார்ந்தவர்களே, தூய ஆவியின் தூண்டுதல் தமக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே நம்பிவிடாதீர்கள்; அந்தத் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள்; ஏனெனில் போலி இறைவாக்கினர் பலர் உலகெங்கும் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவது. இவ்வாறு கடவுளிடமிருந்து வரும் தூண்டுதல் எது என அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடமிருந்து வருவதல்ல. இதுவே எதிர்க் கிறிஸ்துவிடமிருந்து வரும் தூண்டுதல். இந்த எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இதோ! இப்போதே அவன் உலகில் இருக்கிறான். பிள்ளைகளே, நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள். நீங்கள் அந்தப் போலி இறைவாக்கினர்களை வென்று விட்டீர்கள்; உங்களுள் இருப்பவர் உலகில் இருக்கும் அந்த எதிர்க் கிறிஸ்துவைவிடப் பெரியவர். அவர்கள் உலகைச் சார்ந்தவர்கள். எனவேதான் உலகு சார்ந்தவற்றையே பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிசாய்க்கிறது. ஆனால் நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; கடவுளை அறிந்துகொண்டோர் நமக்குச் செவி சாய்க்கின்றனர். கடவுளைச் சாராதோர் நமக்குச் செவிசாய்ப்பதில்லை. இதிலிருந்து, உண்மையான தூண்டுதல் எது, பொய்யான தூண்டுதல் எது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நான் பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்.
திருப்பாடல் 2: 7-8. 10-11

7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; `நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். 8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லை வரை உமக்கு உடைமையாக்குவேன். பல்லவி

10 ஆகவே, மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்; பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள். 11 அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்! அவர்முன் அகமகிழுங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 12-17, 23-25

அக்காலத்தில் யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது: �செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப் பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது.'' அதுமுதல் இயேசு, �மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' எனப் பறைசாற்றத் தொடங்கினார். அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அவரைப் பற்றிய பேச்சு சிரியா நாடு முழுவதும் பரவியது. பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனைவரும் அவரிடம் அழைத்து வரப்பட்டனர். அவர் அவர்களைக் குணமாக்கினார். ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றத் தொடங்கினார்'' (மத்தேயு 4:17)

இயேசு திருமுழுக்குப் பெற்று, பாலைநிலத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்ச்சியை விவரித்தபின், மத்தேயு இயேசுவின் பணித் தொடக்கம் பற்றிப் பேசுகிறார். கடவுளிடமிருந்து பணிப்பொறுப்புப் பெற்ற இயேசு அப்பணியினை முழுமையாக நிறைவேற்றுவதையே தம் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டுச் செல்கின்றார். அவருடைய பணி அவர் உரைக்கின்ற சொல், புரிகின்ற செயல், நினைக்கின்ற எண்ணம், உணர்கின்ற மனநிலை போன்றவை வழியாக வெளிப்படுகிறது. இவ்வெளிப்பாட்டினை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. இயேசு தம் பணியைத் தொடங்கிய முதல் கட்டத்திலேயே ஓர் அறிவிப்போடு மக்களை அணுகுகிறார். அதாவது, ''மனம் மாறுங்கள்... விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' (மத் 4:7) என்னும் அறிவிப்பு இயேசுவின் வாயிலிருந்து வெளிப்படுகிறது. விண்ணரசு என்பது இறையாட்சியைக் குறிக்கும். விண்ணில் உறைபவர் கடவுள் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் விண் என்றாலே கடவுளைக் குறிக்கும் சொல் ஆயிற்று. ஆக, கடவுளின் ஆட்சி நெருங்கி வந்துவிட்டது என இயேசு மக்களுக்கு அறிவிக்கிறார்.

மக்கள் தம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், கடவுளின் பார்வையைப் பெற வேண்டும், கடவுளின் திருவுளம் யாதென அறிந்துணர்ந்து அதைத் தம் வாழ்வில் செயல்படுத்த வேண்டும் - இதுதான் இயேசு கடவுளாட்சி பற்றி அறிவித்த நற்செய்தியின் சாரம். மனம் மாற வேண்டும் என்றால் மனித சிந்தனை நன்னெறிக்கு ஏற்ப அமைய வேண்டும் எனப் பொருள்படும். சிந்தனை நலமாக மாறும்போது அதிலிருந்து பிறக்கின்ற செயல் நலமாக இருக்கும். செயல் நலமாகும்போது அது பிறருக்கு நலம் பயக்கும். மனம் உள்ளிருந்து செயலாற்றும் சக்தி. எனவே மனம் மாறும்போது நம்மில் உள்ளார்ந்த மாற்றம் ஏற்படும். உள்ளத்தில் புத்துணர்ச்சி ஏற்பட வேண்டும்; உள்ளம் கடவுளிடம் திரும்பவேண்டும்; தீமையை எண்ணுகின்ற போக்கு மறைந்து நன்மையை நாடுகின்ற வேட்கை வளர வேண்டும். இவ்வாறு நாம் மனம் மாறினால் கடவுளின் ஆட்சியில் பங்கேற்க கடவுள் நமக்கு அருள்வார்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தைப் புதுப்பித்து உம்மை நாடிவர அருள்தாரும்.