திருவழிப்பாட்டு ஆண்டு A (02-02-2014)

சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றி, 
'ஆண்டவரே...மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன' என்றார்/> சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றி, 
'ஆண்டவரே...மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன' என்றார்/> சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றி, 
'ஆண்டவரே...மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன' என்றார்/>


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புநிறை சகோதரர்களே சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் இயேசுவின் பெயரில் என் அன்பையும் வாழ்த்தையும் உரித்தாக்குகிறேன். மீண்டும் ஒரு புதிய மாதத்தில் நம்மை தொடர்ந்து வழிநடத்தும் இறைவனைப்போற்றி நம் நன்றியை அவருக்கு சமர்ப்பிப்போம். ஆண்டின் பொதுக்காலம் 4 ஆம் வாரத்திலிருக்கும் நாம், மாசி மாதம் 2 ஆம் திகதி மனுக்குலத்தின் மீட்பராகப் பிறந்த இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை நாம் நினைவுகூருகின்றோம்.

இயேசு எருசலேம் தேவாலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படும் போது அவர் யார் என்பது சிமியோனுக்கும், அன்னாளுக்கும் வெளிப்படுத்தப்படுகிறது. ஆண்டவர் நல்மனத்தோடு தன்னைத் தேடுபவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்துகிறார். நல்மனத்தோடு ஆண்டவரைத் தேடுகிறவர்கள் அவரைக் கண்டுகொள்கிறார்கள். வாழ்க்கை நிகழ்வுகளில் அவரைச் சந்திக்கிறார்கள். சுயநலம் கொண்டவர்களாக, அடுத்திருப்பவர்களை அன்பு செய்ய மனமில்லாதவர்களாக வாழ்பவர்களுக்கு அவர் தன்னை வெளிப்படுத்துவதில்லை. ஆகவே நல்மனம் கொண்டவர்களாக ஆண்டவரைத் தேடுவோம். அவரைக் கண்டுகொள்வோம். எண்ணங்களோடு இன்று இத்திருப்பலியில் ஆண்டவரில் இணைந்து பலியாவோம்.



முதல் வாசகம்

யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.
முதலாம் வாசகம் மலாக்கி .3:1-4

கடவுளாகிய ஆண்டவர் கூறுவது "இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்" என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப்போல் அவர்களைப் புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்;
திருப்பாடல்24;7-10

7 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். பல்லவி

8 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர். பல்லவி

9 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். பல்லவி

10 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர் பல்லவி .

இரண்டாம் வாசகம்

தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2:14-18

சகோதர சகோதரிகளே! ஊனும் இரத்தமும் கொண்ட அப்பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார். வாழ்நாள் முழுவதும் சாவுபற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார். ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை. மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு. ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதர் சகோதரிகளைப்போல் ஆக வேண்டிதாயிற்று. இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:22-40

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒருசோடி மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது எருசலேமில் சிமியோன் என்பவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். "ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது. சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவெ உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்றார். குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார். ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார். ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது. .

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு: மன உறுதிகொள்: உன் உள்ளம் வலிமை பெறட்டும்: ஆண்டவருக்காகக் காத்திரு.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

மருத்துவர் நோயற்றவருக்கு அன்று நோயுற்றவருக்கே தேவை என்று மொழிந்த எம் இறைவா!

உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து நோயினாலும், பிணியாலும் வாழுகின்ற மக்கள் அனைவருக்கும் உம் வல்லமையின் கரங்கள் அவர்கள் வழியாக வந்து மக்களை ஆசிர்வதிதத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கொடைகளின் தந்தையே,

ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் குழந்தைகள் என்னும் உமது கொடைக்காக நன்றி கூறுகிறோம். இந்தக் குழந்தைகள் உமக்கும், இந்த சமூகத்துக்கும் சொந்தமானவர்கள் என்ற உணர்வில் நாங்கள் ஆழப்பட, அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகனின் இறப்பால் எங்களை உமக்குரியவர்களாக மாற்றினீரே, உமக்கு நன்றி. நாங்கள் உமக்குச் சொந்தமானவர்கள் என்னும் உணர்வுடன் ஒவ்வொரு நாளும் வாழும் வரத்தைத் தந்தருள வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்களையெல்லாம் பராமரிக்கும் நல்லதெய்வமே,

நவீனம் என்னும் பெயரில் கலாச்சாரத்தையும, பண்பாட்டையும் துளைத்து நிற்கும் இச்சமுதாயத்திற்காக மன்றாடுகிறோம். நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும், தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்புக் கொடுக்கவும் தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல்லாயனே இறைவா!

இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள் என்று கூறினீரே. அதுபோல எம் இளைஞர்களைத் தீய வழிகளில் திசை திருப்பும் அனைத்துத் தீமைகளிலிருந்தும் அவர்களைக் விடுவித்து, அவர்களை ஆன்மீகத்திலும் அருள்வாழ்விலும் உறுதிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பாதுகாப்பின் நாயகனே!

எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''சிமியோன் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்'' (லூக்கா 2:25)

இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்ச்சியை விவரிக்கின்ற லூக்கா சிமியோன் என்னும் நேர்மையாளர் பற்றியும் அன்னா என்னும் திருப்பணியாளர் (லூக் 2:37) பற்றியும் உயர்வாகக் குறிப்பிடுகிறார். இவ்விருவரும் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்ந்தவர்கள்; கடவுளை மையமாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள். இயேசு கோவிலுக்கு வந்ததும் இவர்கள் கடவுளின் திட்டம் இயேசுவில் நிறைவேறுவதைக் கண்டுகொள்கிறார்கள். பழைய ஏற்பாட்டு நேர்மையாளர்கள் வரிசையில் உயர்வாக எண்ணப்படுகின்ற சிமியோன், அன்னா ஆகிய இருவரும் யூத சமய அருள்நெறிக்குச் சீரிய -எடுத்துக்காட்டுகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். கடவுளின் வழி யாதெனக் கண்டு அதைக் கவனமாகக் கடைப்பிடிப்போர் அவருடைய அன்பிலும் அருளிலும் நிலைத்திருப்பார்கள். கடவுளிடத்தில் முழு நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.

சிமியோன் நேர்மையாளராக இருந்தார் என்பது அவருடைய வாழ்க்கை முறையில் துலங்கியது. கடவுள் தம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேறும் என சிமியோன் உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையின் காரணமாக அவர் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார். கடவுள் வாக்களித்த மீட்பு இயேசுவின் வழியாக நிறைவேறப் போகின்றது என்னும் உண்மை சிமியோனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. நம் வாழ்க்கையில் கடவுளின் வாக்குறுதிகள் நிறைவேறுவதை நாம் ஒவ்வொரு நாளும் காணலாம். கடவுளின் அன்புக் கரம் நம்மை வழிநடத்துவதை நாம் உணரலாம். நேர்மையான மன நிலையோடு கடவுளை அணுகுவோருக்கு அவருடைய ஆவி வாக்களிக்கப்படுகிறது. அந்த உறுதி நமக்கு இருப்பதால் நாமும் இறைப்பற்றுக் கொண்டு, இறைவழியில் தொடர்ந்து வழி நடக்க முன்வர வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளம் நேர்மையாய் இருக்க அருள்தாரும்.