யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 4வது வாரம் திங்கட்கிழமை
2014-02-03

புனித பியாசியு


முதல் வாசகம்

தப்பி ஓடுவோம்; இல்லையேல் அப்சலோமிடமிருந்து தப்ப முடியாது.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 15: 13-14, 30;16: 5-13

அந்நாள்களில் தூதன் ஒருவன் தாவீதிடம் வந்து, �அப்சலோம் இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கவர்ந்து கொண்டார்� என்று கூறினான். தாவீது தம்மோடு எருசலேமிலிருந்த அலுவலர் அனைவரிடமும், �வாருங்கள், நாம் தப்பியோடுவோம்; ஏனெனில் அப்சலோமிற்கு முன்பாக நாம் தப்ப முடியாது. விரைவில் வெளியேறுங்கள், இல்லையேல் அவன் விரைவில் நம்மை மேற்கொண்டு, நமக்குத் தீங்கு விளைவிப்பான்; நகரையும் வாள்முனையால் தாக்குவான்� என்றார். தாவீது அழுதுகொண்டே ஒலிவ மலை ஏறிச் சென்றார். தலையை மூடிக்கொண்டு வெறுங்காலோடு அவர் நடந்தார். அவரோடு இருந்த மக்கள் அனைவரும் தம் தலையை மூடிக்கொண்டு அழுதுகொண்டே ஏறிச்சென்றனர். தாவீது பகூரிம் வந்தபோது, சவுலின் குடும்பத்தையும் வீட்டையும் சார்ந்த ஒருவன் அவரை எதிர்கொண்டான். அவன் கேராவின் மகனான சிமயி. அவன் பழித்துக் கொண்டே எதிரே வந்தான் . அவன் தாவீது மீதும், தாவீது அரசரின் எல்லாப் பணியாளர் மீதும், எல்லா மக்கள் மீதும், அவர்தம் வலமும் இடமும் இருந்த வீரர்கள் மீதும் கல்லெறிந்தான். சிமயி பழித்துக் கூறியது: ``இரத்த வெறியனே! பரத்தை மகனே! போ! போ! நீ சிந்திய சவுல் வீட்டாரின் இரத்தப் பழி அனைத்தையும் ஆண்டவர் உன்மீது வரச்செய்துள்ளார். சவுலுக்குப் பதிலாக நீ ஆட்சி செய்தாய் அன்றோ! ஆண்டவர் உன் மகன் அப்சலோமின் கையில் அரசைத் தருவார்! இரத்த வெறியனான நீ உன் தீமையிலேயே அழிவாய்.� அப்போது செரூயாவின் மகன் அபிசாய் அரசரிடம் வந்து, �இச்செத்த நாய் என் தலைவராம் அரசரைப் பழிப்பதா? இதோ நான் சென்று அவனது தலையைக் கொய்து எறிய எனக்கு அனுமதி தாரும்� என்றான். அதற்கு அரசர், �செரூயாவின் மக்களே! இதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவன் பழிக்கட்டும்! ஒருவேளை �தாவீதைப் பழி!� என்று ஆண்டவரே அவனுக்குச் சொல்லியிருந்தால், �இவ்வாறு நீ ஏன் செய்தாய்?� என்று யார் சொல்ல முடியும்� என்றார். மீண்டும் தாவீது அபிசாயிடமும் தம் பணியாளர் அனைவரிடமும் கூறியது: �இதோ! எனக்குப் பிறந்த என் மகனே என் உயிரைப் பறிக்கத் தேடுகிறான். பென்யமின் குலத்தைச் சார்ந்த இவன் செய்யலாகாதோ? அவனை விட்டுவிடு! அவன் பழிக்கட்டும்! ஏனெனில் ஆண்டவரே அவனைத் தூண்டியுள்ளார். ஒருவேளை ஆண்டவர் என் துயரத்தைக் காண்பார். இன்று அவன் பழித்துப் பேசியதற்காக எனக்கு அவர் நன்மை செய்வார்.� தாவீது தன் ஆள்களோடு பயணத்தைத் தொடர்ந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, எழுந்தருளும்; என்னை மீட்டருளும்.
திருப்பாடல் 3: 1-2. 3-4. 5-7

1 ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்துவிட்டனர்! 2 `கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்' என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். பல்லவி

3 ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; என்னைத் தலை நிமிரச் செய்பவரும் நீரே. 4 நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். பல்லவி

5 நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு. 6 என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன். 7ய ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-20

அக்காலத்தில் இயேசுவும் அவர் சீடரும் கடலுக்கு அக்கரையில் இருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகை விட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால் கூடக் கட்டிவைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார். அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு, ஓடிவந்து அவரைப் பணிந்து, ``இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்'' என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், ``தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ'' என்று சொல்லியிருந்தார். அவர் அம்மனிதரிடம், ``உம் பெயர் என்ன?'' என்று கேட்க அவர், ``என் பெயர் `இலேகியோன்', ஏனெனில் நாங்கள் பலர்'' என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாம் என்று அவரை வருந்தி வேண்டினார். அங்கே மலைப் பகுதியில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. ``நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்'' என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடுகூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, ``உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்'' என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அம்மனிதரிடம், 'உம் பெயர் என்ன?' என்று கேட்க அவர், 'என் பெயர் 'இலேகியோன்', ஏனெனில் நாங்கள் பலர்' என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாமென்று அவரை வருந்தி வேண்டினார்'' (மாற்கு 5:9-10)

இயேசு பிற இனத்தார் வாழ்ந்த பகுதியாகிய கெரசேன் என்னும் இடத்தில் பேய்பிடித்த ஒருவருக்கு நலமளிக்கிறார். அந்த வரலாற்றைப் பதிவு செய்த மாற்கு (மாற் 5:1-20) மிக விரிவான விளக்கம் தருகிறார்; வேடிக்கையான சில தகவல்களையும் வழங்குகிறார். அதாவது தீய ஆவி பிடித்த அந்தப் பிற இன மனிதரின் உறைவிடம் ''கல்லறைகள்'' (மாற் 5:2-3). அதாவது அவர் உயிர் வாழ்ந்தாலும் இறந்தவர் போலவே இருந்தார். அவரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டு, அவரை ''உன்னத கடவுளின் மகன்'' என அழைக்கின்றன (மாற் 5:7). ஆனால் இயேசுவோடு கூட இருந்து, அவர் வழங்கிய போதனைகளைக் கேட்டு, அவர் புரிந்த அரும்செயல்களைக் கண்டு அனுபவித்த சீடர்களோ இயேசு யார் என்பதைக் கண்டுகொள்ளாமல் மந்த புத்தியுடையோராய் இருக்கின்றனர். பிற இனத்தாராகிய கெரசேனர் பகுதியில் பெரும் திரளான பன்றிக் கூட்டம் மேய்ந்துகொண்டிருக்கிறது. பன்றிகளின் எண்ணிக்கை இரண்டாயிரம் என மாற்கு மிகைப்படுத்திக் கூறுகிறார். பன்றி என்றாலே மிகவும் அசுத்தமான மிருகம் எனக் கருதினர் யூதர். அவர்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை. இயேசு தீய ஆவிகளை விரட்டியதும் அவை பன்றிக் கூட்டத்தில் நுழைந்துவிடுகின்றன. அவை ''இலேகியோன்'' எனத் தங்களை அழைக்கின்றன. இங்கேயும் மாற்கு நகைச் சுவையோடு பேசுவதைக் காண்கிறோம். அதாவது, பிற இனப்பகுதியாகிய கெரசேனில் உரோமைப் படை (''இலேகியோன்'') நிறுத்தப்பட்டிருந்தது. நாட்டை ஆக்கிரமித்த உரோமையர்களை மாற்கு ''பன்றிகளுக்கு'' ஒப்பிடுகிறாரா? -- இயேசுவின் வல்லமையால் நலமடைந்த மனிதர் தம்மிடமிருந்து தீய ஆவிகள் நீங்கியதும் ''ஆடையணிந்து, அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருக்கிறார்'' (மாற் 5:15). உயிரற்ற மனிதரைப் போலக் கல்லறைகளில் வாழ்ந்த அந்த மனிதர் முற்றிலும் மாற்றமடைந்து விட்டார். அவருடைய வாழ்வில் புதுமை நிகழ்ந்ததால் அவர் புதிய மனிதராக மாறிவிட்டார். இயேசுவைப் பின்தொடர்ந்து செல்ல விரும்புகிறார் அந்தப் புதிய மனிதர். ஆனால் இயேசு அவரைப் பார்த்து, ''நீர் பெற்ற இறை அனுபவத்தை உம் வீட்டாரோடும் ஊராரோடும் பகிர்ந்துகொள்ளும்'' என்று கூறி அனுப்பிவிடுகிறார். நாம் மனமாற்றம் பெற்றுப் புதிய மனிதராக மாற வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். சாவிலிருந்து விடுதலை பெற்றுப் புது வாழ்வு பெற்றிட வேண்டும் என்றால் நாமும் இயேசுவைக் ''கடவுளின் மகன்'' என அடையாளம் கண்டு, அவர் காட்டிய வழியில் நடந்து செல்ல வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தையும் வாழ்வையும் புதுப்பித்தருளும்.