யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 1வது வாரம் வியாழக்கிழமை
2014-03-13


முதல் வாசகம்

ஆண்டவரே, உமது கைவன்மையால் எங்களைக் காப்பாற்றும்;
எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி) 4: 17

சாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை அவர் பின்வருமாறு மன்றாடினார். ``என் ஆண்டவரே, நீர் மட்டுமே எங்கள் மன்னர். ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்; ஏனெனில், நான் என் உயிரைப் பணயம் வைத்துள்ளேன். ஆண்டவரே, நீர் எல்லா இனங்களிலிருந்தும் இஸ்ரயேலைத் தெரிந்தெடுத்தீர் என்றும் அவர்களின் மூதாதையர் அனைவரிடையிலிருந்தும் எங்கள் முன்னோரை என்றென்றைக்கும் உம் உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்தீர் என்றும், நீர் அவர்களுக்கு வாக்களித்ததையெல்லாம் நிறைவேற்றினீர் என்றும், நான் பிறந்த நாள்தொட்டு என் குலத்தாரும் குடும்பத்தாரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆண்டவரே, எங்களை நினைவுகூரும்; எங்கள் துன்ப வேளையில் உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தும். தெய்வங்களுக்கெல்லாம் மன்னரே, அரசுகள் அனைத்துக்கும் ஆண்டவரே, எனக்குத் துணிவைத் தாரும். சிங்கத்துக்குமுன் நாவன்மையுடன் பேசும் வரத்தை எனக்கு வழங்கும்; எங்களுக்கு எதிராகப் போரிடுபவனை மன்னர் வெறுக்கச் செய்யும்; இதனால் அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அழியச் செய்யும். ஆண்டவரே, உமது கைவன்மையால் எங்களைக் காப்பாற்றும்; ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.
திருப்பாடல் 138: 1-2. 2,3. 7-8

1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2ய உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி

2bஉ உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி

7உ உமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். 8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 7-12

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா! ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்'' (லூக்கா 11:9)

கேட்டல், தேடல், தட்டுதல் ஆகிய செயல்களில் மனித ஈடுபாடு துலங்குவதைக் காணலாம். அந்த ஈடுபாடு தீவிரமாகும்போது அதன் விளைவாக மனிதர் கேட்டதைப் பெறுவார்கள்; தேடியதைக் கண்டடைவார்கள்; தட்டிய கதவு திறப்பதை உணர்வார்கள். கடவுளை நோக்கி நாம் வேண்டுதல் செய்யும்போது நமக்குத் தேவையானவற்றைக் கேட்கிறோம். எனவேதான் இறைவேண்டலுக்கு ''மன்றாட்டு'' என்னும் பெயரும் உண்டு. என்றாலும் இறைவேண்டலை இக்குறுகிய கண்ணோட்டத்தில் நாம் புரிதல் சரியல்ல. இங்கே நாம் இயேசுவின் முன்மாதிரியைக் கடைப்பிடிக்கலாம். அவர் தம் தந்தையாம் கடவுளை நோக்கி வேண்டினார். பல மணி நேரம் இறைவேண்டலில் செலவிட்டார். தந்தையின் விருப்பம் யாதென உணர்ந்து அதைக் கடைப்பிடித்தலே இயேசுவின் வாழ்க்கைத் திட்டமாக இருந்தது. தம்மைப் போலத் தம் சீடரும் இறைவேண்டலில் ஈடுபட வேண்டும் என இயேசு கேட்டார்.

நாம் கேட்டது கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது இறைவேண்டலின் பண்பாக இருத்தலாகாது. நம் உள்ளத்தைக் கடவுளை நோக்கி எழுப்புதலே இறைவேண்டல். கடவுளின் முன்னிலையில் தாழ்ச்சியோடு நம்மை நிறுத்தும்போது அங்கே இறைவேண்டல் நிகழ்கிறது. நம் கவலைகளையும் கலக்கங்களையும் களைந்துவிட்டு, இறைப்பிரசன்னத்தின் அமைதியில் நாம் புகும்போது நம் இறைவேண்டல் அர்த்தமுள்ளதாகும். நம்மைக் கடவுளின் கைகளில் முழுமையாக ஒப்படைத்துவிட்டால் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதைச் செயலாக்க நாம் முன்வருவோம். தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டு, அவருடைய உந்துதலுக்கு நம்மைப் பணிவுடன் கையளித்துச் செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம். நம் இதயத்தில் தூய ஆவியின் சக்தியை நாம் உணர்ந்து, கடவுளிடத்தில் முழுமையாக நம்பிக்கை வைத்து, அவருடைய பாதுகாப்பில் நம்மைக் கையளிப்பதே உண்மையான இறைவேண்டல், நிறைவான மன்றாட்டு. அப்போது நாம் கேட்பதும் தேடுவதும் கடவுளின் புகழாக இருக்கும்; நாம் கடவுளின் இதயக் கதவுகளைத் தட்டும்போது அவர் நம்மைத் தம் இல்லத்தில் ஏற்று நம்மை அன்பின் அரவணைப்பில் பிணைத்திடுவார்; நாமும் இறையன்பு என்னும் ஆழ்கடலில் மூழ்கித் திளைத்திடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம்மை நோக்கி மன்றாடும்போது எங்களை முழுமையாக உம்மிடம் கையளிக்க அருள்தாரும்.