யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 2வது வாரம் திங்கட்கிழமை
2014-03-17

புனித பேட்ரிக்


முதல் வாசகம்

நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4-11

என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்! நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்; பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைவிட்டோம். எங்களுடைய அரசர்கள், தலைவர்கள், தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் இறைவாக்கினர்களாகிய உம் ஊழியர்கள் உமது பெயரால் பேசியதற்கு நாங்கள் செவிகொடுக்கவில்லை. என் தலைவரே! நீதி உமக்கு உரியது; எமக்கோ இன்று வரை கிடைத்துள்ளது அவமானமே. ஏனெனில், யூதாவின் ஆண்களும் எருசலேம்வாழ் மக்களும், இஸ்ரயேலைச் சார்ந்த யாவரும் ஆகிய நாங்கள், உமக்கு எதிராகச் செய்த துரோகத்தின் பொருட்டு, அருகிலோ தொலையிலோ உள்ள எல்லா நாடுகளுக்கும் உம்மால் இன்றுவரை விரட்டப்பட்டுள்ளோம். ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை எதிர்த்து நின்றோம். எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம் தம் திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார். நாங்களோ அவரது குரலொலியை ஏற்கவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்.
திருப்பாடல் 79: 8. 9. 11. 13

8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். பல்லவி

9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். பல்லவி

11 சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. பல்லவி

13 அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறை தோறும் உமது புகழை எடுத்துரைப்போம். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 36-38

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

'' இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்'' (மத்தேயு 23:9)

இயேசுவின் அன்புக்குரியவரே!

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் தங்களை மக்கள் பாராட்டிப் போற்றவேண்டும் என்றும், சிறப்புப் பெயர்கள் சூட்டி தங்களை அழைக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார்கள். யூத சமயத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த அத்தலைவர்கள் ''ரபி'' (போதகர்), ''தந்தை'' போன்ற பெயர்களால் அழைக்கப்படுவதை விரும்பினார்கள். அவர்களைப் பார்த்து இயேசு கூறியது: ''இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்''. சிலர் இயேசு கூறிய இச்சொற்களுக்குத் தவறான விளக்கம் தந்து, இயேசு நாம் யாரையும் தந்தை என அழைக்கலாகாது எனக் கூறுகிறார் என்பர். இது சரியான விளக்கம் அல்ல. இங்கே குறிக்கப்படுகின்ற ''தந்தை'' என்னும் சொல் நம் சொந்தப் பெற்றோரைக் குறிக்க நாம் பயன்படுத்தும் சொல் அல்ல. மாறாக, வணக்கமும் மரியாதையும் பெறும் வண்ணம் அக்கால மறைநூல் அறிஞரும் பரிசேயரும் தங்களை மக்கள் ''தந்தை'' என அழைக்கவேண்டும் என்று கோரியது சரியல்ல என்பதே இயேசுவின் போதனை. மேலும், கிறிஸ்தவ சபைகளில் தலைமைப் பொறுப்புக் கொண்டவர்களைத் தந்தையர் என அழைக்கும் வழக்கம் உண்டு. இதை இயேசு கண்டனம் செய்தார் என்பதும் சரியாகாது. கடவுள் ஒருவரே நம் அனைவருக்கும் தந்தை. அதே நேரத்தில் கடவுளின் பெயரால் நம்மை வழிநடத்தும் பொறுப்புடையோரை நாம் தந்தையர் என அழைப்பது பொருத்தமே. போதகர் என்றும் தந்தை என்றும் திருச்சபையில் அழைக்கப்படுபவர்கள் உண்மையிலேயே இயேசுவின் போதனையைப் போதிப்பவர்களாக இருக்க வேண்டும்; அனைவருக்கும் தந்தையாகிற கடவுளின் அன்பை மக்களோடு பகிர்ந்துகொள்பவர்களாக வாழ வேண்டும். அப்போது அவர்களுடைய சொல்லும் செயலும் ஒன்றோடொன்று இணைந்து செல்லும். அக்காலப் பரிசேயரிடமும் மறைநூல் அறிஞரிடமும் இயேசு கண்ட குறை நம்மிடையே தோன்றாது. வெளிவேடம் இல்லாத இடத்தில் உண்மையான பண்பு துலங்கி மிளிரும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்குத் தந்தையும் தாயுமாக இருந்து காத்துவருபவர் நீரே என நாங்கள் உணர்ந்து வாழ அருள்தாரும்.