யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 2வது வாரம் சனிக்கிழமை
2014-05-03

புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு விழா


முதல் வாசகம்

யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-8

சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே. நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
திருப்பாடல் 19: 1-2. 3-4

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில்படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. பிலிப்பே, என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும், என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 6-14

அக்காலத்தில் இயேசு, தோமாவை நோக்கி: ``வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்'' என்றார். அப்போது பிலிப்பு அவரிடம், ``ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்'' என்றார். இயேசு அவரிடம் கூறியது: ``பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, `தந்தையை எங்களுக்குக் காட்டும்' என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றை விடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பிலிப்பு இயேசுவிடம், 'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்' என்றார். இயேசு அவரிடம் கூறியது: ''பிலிப்பே,... நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?...'' (யோவான் 14:8,10)

இன்று திருச்சபை திருத்தூதர்களான பிலிப்பு, யாக்கோபு இவர்களின் விழாவைக் கொண்டாடுகிறது. கடவுள் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் கடவுளை காணவேண்டும் என்று நினைப்பது இயல்பு. திருத்தூதர் பிலிப்பு அதற்கு விதி விலக்கல்ல: “ஆண்டவரே தந்தையை எங்களுக்கு காட்டும் அதுவே போதும்” என்கிறார். இயேசு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இறைத் தந்தைக்கும் தனக்குமிடையில் இருக்கும் உறவை வெளிப்படுத்துகிறார். தன்னைக் கண்டவன் தந்தையை கண்டான் என்கிறார். “கடவுளை யாரும் என்றும் கண்டதில்லை. தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிபடுத்தியுள்ளார்”( யோவான1:18); இயேசுவின் இவ்வுலக வாழ்வு. அவரது போதனைகள். இரக்கச் செயல்கள் அனைத்தும் இறைத்தந்தையின் அன்பையும். பராமரிப்பையும் வெளிப்படுத்துகின்றன. சீடர்கள் இதை உணர்ந்திருக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார். எனவே தான் பிலிப்பிடம் “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ள வில்லையா?”என்று வினவுகிறார். இதே கேள்வியை இயேசுவைப் பின்பற்றும் நம்மிடமும் இயேசு இன்று கேட்கிறார். வழியும், உண்மையும். வாழ்வுமான இயேசுவை நாம் அறிந்து கொண்டால் தந்தையையும் அறிந்தவர்களாக இருப்போம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனில் உம்மைக் கண்டு நாங்கள் நல்லுறவில் வளர்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.