யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 3வது வாரம் செவ்வாய்க்கிழமை
2014-05-06


முதல் வாசகம்

ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 7: 51 - 8: 1

அந்நாள்களில் ஸ்தேவான் மக்களையும் மூப்பரையும் மறைநூல் அறிஞரையும் நோக்கிக் கூறியது: ``திமிர் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே, உங்களுடைய மூதாதையரைப் போல நீங்களும் தூய ஆவியாரை எப்போதும் எதிர்க்கிறீர்கள். எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமல் இருந்தார்கள்? நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையும் அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக் கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள். கடவுளின் தூதர்கள் வழியாய்த் தரப்பட்ட திருச்சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் அதனைக் கடைப்பிடிக்கவில்லை.'' இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள். அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்றுநோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, ``இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்'' என்று கூறினார். ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டு, பெருங் கூச்சலிட்டு, ஒருமிக்க அவர் மேல் பாய்ந்தார்கள். நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறிந்தபோது அவர், ``ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்'' என்று வேண்டிக்கொண்டார். பின்பு முழந்தாள்படியிட்டு, உரத்த குரலில், ``ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்'' என்று சொல்லி உயிர்விட்டார். ஸ்தேவானைக் கொலை செய்வதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்
திருப்பாடல்31: 2-3. 5,6-7. 16,20

2 எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும். 3 ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். பல்லவி

5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர். 6 நானோ, பயனற்ற சிலைகளில் பற்றுடையோரை வெறுத்து, ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கின்றேன். 7ய உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன். பல்லவி

16 உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். 20b மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி, உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது, என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-35

அக்காலத்தில் மக்கள் இயேசுவிடம், ``நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! `அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!'' என்றனர். இயேசு அவர்களிடம், ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது'' என்றார். அவர்கள், ``ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்'' என்று கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், ``வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு மக்களிடம் , 'அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்' என்றார்'' (யோவான் 6:27)

வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது: என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவனுக்கு என்றுமே தாகமே இராது”என்கிறார் இயேசு. மனிதர் வாழ்வுபெற தந்தை கடவுளால் அனுப்பப்பட்ட இந்த உணவை அனுதினமும் திருப்பலி வழியாக உண்ண பாக்கியம் பெற்றவர்கள் நாம். உயிர் வாழ நாம் உண்ணும் உணவு நம் உடலிலே மாற்றம் பெற்று இரத்தம் சதையாகவும் மாறுகிறது: நாம் ஆற்றலுடன் வாழ உதவுகிறது. நிலைவாழ்வு பெற நாம் உண்ணுகின்ற உணவான இயேசுவின் உடலும் இரத்தமும் நம்மில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருகின்றது? இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் உண்டு பருகும் நாம் சிறிது சிறிதாக இயேசுவாக மாறவேண்டும். நமது மனநிலை இயேசுவின் மனநிலைக்கு ஒத்ததாகவும். நமது மதிப்பீடுகள் இயேசுவின் மதிப்பீடுகளாகவும். நமது கண்ணோட்டங்கள் இயேசுவின் கண்ணோட்டங்களாகவும் மாறவேண்டும். தூய பவுலைப் போல “வாழ்வது நானல்ல என்னில் இயேசுவே வாழ்கிறார்” என்று கூறும் நிலைக்கு வரவேண்டும். அப்போதுதான் நிலைவாழ்வு பெறத் தகுதியுள்ளவர்கள் என நம்மைக் கருத முடியும். அன்றாட திருப்பலியிலும். ஞாயிறுத் திருப்பலியிலும் திருவிருந்துப் பந்தியில் பங்கு கொள்ளும் நாம் இயேசுவாக மாற்றம் பெற்றிருக்கின்றோமா?

மன்றாட்டு:

இறைவா, எங்கள் ஆன்ம பசியைப் போக்கியருளும்.