யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 3வது வாரம் வியாழக்கிழமை
2014-05-08


முதல் வாசகம்

நீர் முழுஉள்ளத்தோடு நம்பினால் தடையில்லை.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 26-40

அந்நாள்களில் ஆண்டவரின் தூதர் பிலிப்பிடம், ``நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ'' என்றார். அது ஒரு பாலைநிலப் பாதை. பிலிப்பு அவ்வாறே புறப்பட்டுப் போனார். அப்போது எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று, கடவுளை வணங்கிவிட்டுத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். அவர் ஓர் அலி; எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர். அவர் தமது தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருந்தார். தூய ஆவியார் பிலிப்பிடம், ``நீ அந்தத் தேரை நெருங்கிச் சென்று அதனோடு கூடவே போ'' என்றார். பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, ``நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?'' என்று கேட்டார். அதற்கு அவர், ``யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?'' என்று கூறித் தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார். அவர் வாசித்துக்கொண்டிருந்த மறைநூல் பகுதி பின்வருமாறு: ``அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக் குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவருடைய தலைமுறையைப்பற்றி எடுத்துரைப்பவன் யார்? ஏனெனில் அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே!'' அவர் பிலிப்பிடம், ``இறைவாக்கினர் யாரைக் குறித்து இதைக் கூறுகிறார்? தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா? தயவு செய்து கூறுவீரா?'' என்று கேட்டார். அப்போது பிலிப்பு, இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவித்தார். அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள். அப்போது அவர், ``இதோ, தண்ணீர் உள்ளதே, நான் திருமுழுக்குப் பெற ஏதாவது தடை உண்டா?'' என்று கேட்டார். அதற்குப் பிலிப்பு, ``நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை'' என்றார். உடனே அவர், ``இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன்'' என்றார். உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார். பிலிப்பு, அமைச்சர் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்குத் திருமுழுக்கு கொடுத்தார். அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியேறினவுடனேயே ஆண்டவரின் ஆவியார் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அமைச்சர் அதன்பின் அவரைக் காணவில்லை; அவர் மகிழ்ச்சியோடு தம் வழியே சென்றார். பின்பு பிலிப்பு ஆசோத்து என்னும் இடத்தில் காணப்பட்டார். செசரியா போய்ச் சேரும்வரை அவர் சென்ற நகரங்களிலெல்லாம் நற்செய்தியை அறிவித்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்
திருப்பாடல் 66: 8-9. 16-17. 20

8 மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள். 9 நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே; அவர் நம் கால்களை இடற விடவில்லை. பல்லவி

16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். 17 அவரிடம் மன்றாட என் வாய் திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது. பல்லவி

20 என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்,'' என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 44-51

அக்காலத்தில் இயேசு யூதர்களைப் பார்த்துக் கூறியது: ``என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். `கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்' என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு மக்களிடம், ''என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபரை நானும் இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்வேன்' என்றார்'' (யோவான் 6:44)

என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்” என்கிறார் இயேசு. எல்லா மனிதர்களும் நிலைவாழ்வைப் பெறவேண்டும் என்பதுதான் தந்தையின் திருவுளம்;. அதற்காகத்தான் தன் மகனையே உலகிற்கு அனுப்புகிறார். அந்த மகனின்மேல் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுகின்றனர்;. இயேசு தந்தையால் அனுப்பப்பட்டவர்: அவர் வழியாகவே மனிதர்கள் நிலைவாழ்வைப் பெறமுடியும்: அவரது போதனைகள். அருஞ்செயல்கள் அனைத்தும் தந்தையை உலகிற்கு காட்டும் செயல்கள்: அவரது பாடுகளும், மரணமும் மனிதகுல மீட்பிற்காக அவர் ஏற்றுக் கொண்டவை: இயேசுவின் வாழ்வு இறப்போடு முடிந்துவிடவில்லை. அவர் உயிர்த்தார். இப்போது தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார் என நாம் நம்பவேண்டும். தொடக்கத் திருச்சபையில் திருத்தூதர்கள் இதைத்தான் போதித்தனர். இயேசுவில் நாம் கொள்ளும் நம்பிக்கை மனத்தளவில் தோன்றி மறைந்துவிடக் கூடாது. அவை செயல்களில் வெளிப்பட வேண்டும். செயலற்ற நம்பிக்கை பயனற்றது” (யாக்கோபு 2:20)என்கிறார் யாக்கோபு. செயலற்ற நம்பிக்கை செத்த நம்பிக்கை. இயேசுவின் மீதுள்ள நமது நம்பிக்கை செயல் வடிவம் பெறும்போது நிலைவாழ்வு பெற நம்மைத் தகுதியுள்ளவர் ஆக்குகின்றோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை ஈர்க்கின்ற உம்மை நாடி வந்து உம்மில் நிறைவுபெற எங்களுக்கு அருள்தாரும்.