திருவழிப்பாட்டு ஆண்டு A (11-05-2014)

நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை/> நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை/> நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை/>


திருப்பலி முன்னுரை - 1

இறைமகன் இயேசுவில் அன்பு நிறை அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) அன்புநிறை சகோதர்களே! சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம். உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால், இன்று பாஸ்காக் காலம் நான்காம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.

கிறிஸ்தவ வாழ்வின் முழுமையை அடைய நாம் கடைப்பிடிக்கவேண்டிய வாழ்க்கை முறை என்ன என்பது பற்றிய ஒரு தெளிவு இன்றைய இறைவார்த்தைகள் வழியாக நமக்குத் தரப்படுகின்றது.

· நாம் வாழ்வை அதுவும் அதனை நிறைவாகப் பெற விரும்பினால், நாம் நல்லாயனாகிய இயேசுவின் வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

· நம் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக மனம்மாறித் தூய ஆவியாரைக் கொடையாகப் பெறவேண்டும்.

· நெறிகெட்ட தலைமுறையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

· நன்மை செய்து துன்புற்றாலாலும் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அதனைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே இவற்றை நம் வாழ்வில் கடைப்பிடித்து கிறிஸ்தவ வாழ்வின் முழுமையை அடைய வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14, 36-41

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: "நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்." அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, ``சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். அதற்குப் பேதுரு, அவர்களிடம், ``நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது'' என்றார். மேலும் அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி, ``நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்'' என்று அறிவுறுத்தினார். அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
திருப்பாடல் 23: 1-6.

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். -பல்லவி

3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி

இரண்டாம் வாசகம்

நன்மை செய்தும், அதற்காகப் பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும்
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 20b-25

அன்பிற்குரியவர்களே, நன்மை செய்தும், அதற்காகப் பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும். கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன் மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள். ``வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை.'' பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; நியாயமாகத் தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார். சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள். நீங்கள் வழி தவறி அலையும் ஆடுகளைப்போல இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-10

அக்காலத்தில் இயேசு கூறியது: ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்குமுன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். அறியாத ஒருவரை அவை பின்தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது.'' இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. மீண்டும் இயேசு கூறியது: ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே. எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அன்புத் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: அவர்கள் நல்லாயன் இயேசுவின் வழியில் இறைமக்களை வழிநடாத்துவதற்கு வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உயிர்ப்பின் நாயகனே இறைவா,

உமது பிள்ளைகளாகிய நாங்கள் ஒவ்வொருவரும் நல்லாயனாம் இயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி: எம் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக மனம்மாறி, நெறிகெட்ட வாழ்விலிருந்து விடுபட்டு, நன்மை செய்து துன்புற்றாலும் அதனைப் பொறுமையோடு ஏற்று வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வேதனைகளோடும், விரக்தியோடும், கண்ணீரோடும் வாழும் கணவன் மனைவி அனைவர் மீதும் மனமிரங்கி அவர்களின் அன்பு தூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆன்மாக்களின் ஆயரும், கண்காணிப்பாளருமான தந்தையே இறைவா!

எமது இளைஞர், இளம் பெண்களை நிறைவாக ஆசீர்வதித்து, அவர்கள் நெறிகெட்ட தலைமுறையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொண்டு உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய இறைவா!

உமது வார்த்தையை தாம் விரும்பியவாறு விளக்கியுரைத்துக்கொண்டு விசுவாசிகளிடையே பிளவை ஏற்படுத்துவோர் அதிகமாகிவிட்ட இன்றைய நாட்களிலே நீரே உண்மையை வெளிப்படுத்தி உண்மை விசுவாசத்தை நோக்கி மக்களை வழிநடாத்தவும், பிளவுபட்டுக்கிடக்கும் அத்தனை விசுவாசிகளையும் ஒன்று சேர்த்து உமது தலைமைத்துவத்தின் கீழ் அவர்களை வைத்துக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

"நானே வாயில்."

வீட்டுக்கு வீடு வாசல் எப்போதும் இருக்கிறது. அதோடு கதவு,இரும்பு கேட், பூட்டு, காவலாளி என்று இக்காலத்தில் கதவின் பரிமாணம் நீண்டுகொண்டே போகிறது. வீட்டுக்கு வாசல் அவசியம். கதவு தேவையில்லை. எங்கு திருட்டும் தீய வாழ்க்கையும் இருக்கிறதோ அங்கு அவசியம். கதவின் பரிமாணம் விரிந்துகொண்டு போவதன் அடையாளம், நாட்டில் திருட்டும் தீமையும் பயமும் பாதுகாப்பின்மையும் பெருகிவருகிறது என்று அர்த்தம்.

உன் வீட்டுக்கு வாயில் இயேசு. உன் இதயத்திற்கு கதவு இயேசு. என்ன நடக்கும்? அனைத்தும் வடிகட்டப்படும். தீயவர்கள் அனைவரும் வாசலிலே நிறுத்தப்படுவர். தீய எண்ணங்கள், தீய செயல்வடிவங்கள் இதயத்துள் நுழையாமல் வடிகட்கடப்படும். வெளியிலிருந்து தீயவன், திருடன் உள்ளே நுழையமுடியாது. உள்ளிருந்தும் தீய பாதிப்பபை வெளிறே ஏற்படுத்த முடியாது. இயேசு உங்கள் வீட்டின் வாயிலாக இருக்கட்டும். தீமை உங்களை அணுகாது.

எல்லாருடைய வீட்டிற்கும் இதயத்திற்கும் இயேசுதான் வாயில். அதுவும் தலை வாயில். ஆனால் நாமே அவ்வப்போது அமைக்கும் புற வாசல்களால்தானே விவகாரம், பிரச்சனை, பாதிப்பு, குடும்பத்தில் குழப்பம் எல்லாம் வருகிறது. தவரான நட்பு என்றொரு புறவாசல், குடி வெறி என்ற புறவாசல், தொலைக்காட்சி என்னும் தொல்லை வாசல், சந்தேகம், பொருளாசை, பேராசை, இன்னும் அவ்வப்போது திறக்கும் ஜன்னல்கள், வென்றிலேட்டர்கள், இப்படி பல புற வாசல்களை அமைத்து, வீட்டையும் இதயத்தையும் வீணடித்துவிடுகிறோம்.

மன்றாட்டு:

"நானே வாயில்" என்ற இயேசுவின் பாதுகாப்பில் வீட்டையும் இதயத்தையும் வாழ்க்கையையும் அமையுங்கள். அவர் தம் உயர் கொடுத்தும் உனனைக் காக்கும் நல்ல ஆயன். அவர் பாதுகாப்பில் இனிது வாழ்வோம்.