யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 4வது வாரம் செவ்வாய்க்கிழமை
2014-05-13

தூய பாத்திமா அன்னை


முதல் வாசகம்

ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 19-26

அந்நாள்களில் ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். அவர்கள் யூதருக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள்; வேறு எவருக்கும் அறிவிக்கவில்லை. அவர்களுள் சைப்பிரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் இருந்தனர். அவர்கள் அந்தியோக்கியாவுக்கு வந்து அங்குள்ள கிரேக்கரை அணுகி ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள். ஆண்டவரின் கைவன்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். பெருந்தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர். இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்றுவர அனுப்பி வைத்தார்கள். அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்; மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்ப் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார். பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்; அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்துவந்தார். அவர்கள் ஓராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்
திருப்பாடல் 87: 1-3. 4-5. 6-7

நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது. 2 யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும் விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார். 3 கடவுளின் நகரே! உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. பல்லவி

4 எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, `இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்' என்று கூறப்படும். 5 `இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!' என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். பல்லவி

6 மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, `இவர் இங்கேதான் பிறந்தார்' என ஆண்டவர் எழுதுவார். 7ய ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து `எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது' என்பர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30

அக்காலத்தில் எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம். கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார். யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, ``இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, ``நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ளமாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம். கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார்'' (யோவான் 10:22-23)

யோவான் நற்செய்தியில் இயேசுவின் போதனையும் பணியும் யூதர்களின் விழாக்கள் பின்னணியில் அமைக்கப்படுவது சிறப்பு. பாஸ்கா விழாவின் பின்னணியில் இயேசு அளித்த போதனையும் புரிந்த அரும் அடையாளங்களும் மூன்று இடங்களில் வருகின்றன (யோவா 2:13; 6:4; 11:55). அடையாளம் குறிப்பிடப்படாத ஒரு விழாவும் வருகிறது (யோவா 5:1). கூடார விழா பற்றிய குறிப்பு உள்ளது (யோவா 7:2). இறுதியாக, கோவில் அர்ப்பண விழா குறிக்கப்படுகிறது (யோவா 10:22-23). கோவில் அர்ப்பண விழாவை இன்றும்கூட ''ஹனுக்கா'' என்னும் பெயரில் யூதர்கள் கொண்டாடுகின்றனர். கி.மு. 167இல் எப்பிபான் என்று அழைக்கப்பட்ட அந்தியோக்கு மன்னன் எருசலேம் கோவிலில் நுழைந்து அதன் தூய்மையைக் கெடுத்துவிட்டான். மூன்று ஆண்டுகளுக்குப் பின் கோவில் தூய்மைப்படுத்தப்பட்டு மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டது. இதன் நினைவாக ''கோவில் அர்ப்பண விழா'' ஆண்டுதோறும் சிறப்பிக்கப்பட்டது. ஒன்பது நாள்கள் நீடித்த அவ்விழாவின்போது ஒளிக் கொண்டாட்டமும் நிகழ்ந்தது. கடவுளுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டது எருசலேம் கோவில். ஆனால் இயேசு கடவுள் உறைகின்ற ''கோவில்''. அவர் ''தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்டவர்'' (காண்க: யோவா 10:36). எனவே, மனிதரால் அர்ப்பணிக்கப்பட்ட கோவிலைவிட கடவுளால் அர்ப்பணிக்கப்பட்ட இயேசு மேலானவர் என்பதை யோவான் குறிப்பாக உணர்த்துகிறார்.

இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு படிப்படியாகப் பரவத் தொடங்கிய கிறிஸ்தவ சமயம் யூத சமயத்தின் ஒரு பிரிவுபோல இயங்கியதுண்டு. ஆனால் எருசலேம் கோவில் கி.பி. 70இல் அழிந்தது. தொடர்ந்து கிறிஸ்துவை மெசியா என ஏற்றவர்கள் யூதர்களின் தொழுகைக் கூடங்களில் வழிபட்டுவந்தனர். ஆனால் விரைவில் யூதர்கள் கிறிஸ்தவர்களைத் தொழுகைக் கூடங்களிலிருந்து வெளியேற்றினர். அப்பின்னணியில்தான் யோவான் ''இயேசுவே கடவுள் உறைகின்ற கோவில்'' என்னும் ஆழ்ந்த கருத்தை உணர்த்துகிறார். இயேசுவிடத்தில் கடவுள் உறைவதால் இனிமேல் நாம் கடவுளை எருசலேம் கோவிலில் தேட வேண்டியதில்லை; அங்குச் சென்று வழிபட வேண்டியதுமில்லை. இயேசுவும் தந்தையும் ஒன்றாயிருக்கின்றனர் (காண்க: யோவா 10:30). இவ்வாறு இயேசு கூறியதைக் கேட்டதும் யூதர்கள் இயேசு தம்மைக் கடவுளுக்கு நிகராக்குகிறர் என்றறிந்து அவரைக் கல்லால் எறிய முனைகின்றனர். இன்றும்கூட இயேசுவைக் கடவுளின் வெளிப்பாடாகக் காண்போர் தங்கள் நம்பிக்கையின் பொருட்டுத் துன்பங்கள் ஏற்க வேண்டிய சூழ்நிலைகள் எழுவதைக் காண்கின்றோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் மகன் இயேசுவில் உம்மைக் கண்டு, அவர் காட்டிய வழியில் நடக்க எங்களுக்கு அருள்தாரும்.