திருவழிப்பாட்டு ஆண்டு A (22-06-2014)

மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்./> மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்./> மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்./> மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்./>


திருப்பலி முன்னுரை - 1

கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே, சிறார்களே, இளைய உள்ளங்களே, சகோதர சகோதிரியரே! இன்று ஆண்டவர் இயேசு தம் திருவுடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தரும் அவரது பேரன்பைப் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.

மனிதரும், விலங்குகளும் உயிர்வாழ வேண்டுமானால், உடல் இயங்க வேண்டும். ஆதற்கு இரத்தம் தேவை. இந்த இரத்தத்தை உற்பத்தியாக்க உணவு தேவை. அத்தோட மனிதரின் சமூக வாழ்விற்கு உறவுகள் தேவை. எனவே நம்முடைய ஆன்மீக, சமூக வாழ்வு சீராக அமைய இயேசு தன்னுடைய உடலையும், இரத்தத்தையும் நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளார். நாம் வாழ்வு பெறும் பொருட்டு, அதுவும் அதனை நிறைவாகப் பெறும் பொருட்டு தன் உடல், இரத்தம் அகியவற்றை வழங்கியுள்ளார். இயேசுவின் இந்தத் தியாக வாழ்வு வெறுமனே உடலையும், இரத்தத்தையும் கொடுத்தலோடு முடிந்துவிடவில்லை. மாறாகத் தமது அன்பை, இரக்கத்தை, மன்னிப்பை, ஆசீர்வாதத்தை தொடர்ந்து நமக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு தொடர் செயற்பாடாக இருந்து கொண்டேயிருக்கின்றது. அதனுடைய பிரதிபலிப்பே நாளாந்தம் நாம் திருப்பலியில் உட்கொள்ளுகின்ற இயேசுவின் திருவுடலாக மாற்றம் பெறும் நற்கருணையாகும். எனவே நாம் இந்த நற்கருணையைத் தகுதியுடன் உட்கொண்டு, கிறிஸ்துவின் திருவுடலாகிய நற்கருணை குறித்துக்காட்டும் அன்பு, ஒற்றுமை, அன்பிய சமூக வாழ்வு ஆகியவற்றை நாம் அர்த்தமுள்ள விதத்திலே வாழ வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.

திருப்பலி முன்னுரை - 2

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா. இத்தினத்தில் நாம் ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தம் என்பவை குறித்துக்காட்டும் ஒற்றுமை, அன்பு ஆகியவைபற்றிச் சிந்திக்க ஒன்று கூடியுள்ளோம்.

நாளாந்தம் இயேசுவின் திருவுடலாம் நற்கருணையை உட்கொள்ளும் நாம், அவர் நமக்காகச் செய்த தியாகங்களையும், நமக்குச் செய்த எல்லா அருள் நலன்களையும் நினைந்து அவருக்கு நன்றி கூறவும், அவர் நமக்கு விட்டுச்சென்ற அன்பு, ஒற்றுமை, தியாகம், மன்னிப்பு, அர்ப்பணம் ஆகிய தலைசிறந்த பண்புகளை நாமும் வாழ்ந்து பிறரோடு அவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் அழைக்கப்படுகின்றோம். நாம் உழைக்க வில்லையேல் நமக்கு உணவில்லை. இதைத்தான் உழைக்க மனமில்லாதவன் எவரும் உண்ணலாகாது என்று புனித பவுல் அடிகளார் கூறுகிறார். வாழ்வின் உணவாக நற்கருணை வடிவில் வந்த இயேசு நமது ஆன்ம தாகத்தையும், பசியையும் போக்குகிறார்; நம்மைக் குணப்படுத்துகிறார். நம் வாழ்வைப் புதுப்பிக்கிறார். விசுவாச வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற ஆற்றல் தருகிறார். நற்கருணை விருந்தில் நம்மீது இயேசு வைத்திருக்கும் அன்பின் ஆழ அகலத்தைப் புரிந்துக்கொள்ள வழி வகுக்கிறார். நம்மோடு நெருக்கமான உறவுகொள்ள நற்கருணையில் வாழும் இயேசுவை ஆவலோடு வரவேற்போம். ஆகவே நாம் அனைவரும் என்றென்றும் நம்மோடு நிலைத்து நின்று வாழ்வுதரும் இறைவனது பேரன்பிற்காக நன்றி சொல்லுவோம், ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தம் என்பவை குறித்துக்காட்டும் ஒற்றுமை, அன்பு ஆகியவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து இறைவனின் சாட்சிகளாய் வாழ நம்மை அர்ப்பணித்து தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 8: 2-3,14b-16

மோசே மக்களை நோக்கிக் கூறியது: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன் மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார். அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார். அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
திருப்பாடல்147: 12-13. 14-15. 19-20

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி

14 அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். 15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். 20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பல்லவி

இரண்டாம் வாசகம்

இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா!

சகோதரர் சகோதரிகளே, கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58

அக்காலத்தில் இயேசு யூதர்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: ``விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.'' ``நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?'' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களிடம், ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்: அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர் நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” என்று மொழிந்த எம் அன்பு இறைவா,

எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: தூய ஆவியின் நிறை வல்லமையால் அவர்களை நிரப்பி, கிறிஸ்துவின் திருவுடலாகிய நற்கருணை குறித்துக்காட்டும் அன்பு, ஒற்றுமை, அன்பிய சமூக வாழ்வு ஆகியவற்றை அர்த்தமுள்ள விதத்திலே வாழுவதற்கு வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வானக உணவான இயேசுவே,

நிலைவாழ்வு தரும் உணவாக உம்மையே எங்களுக்குத் தந்திருப்பதற்காக உம்மைப் போற்றுகிறேன். நிறைவு தரும் உம் திருவுடலை நான் மதிப்புடன் பெற அருள் தாரும். மாபெரும் உமது கொடைக்காக எந்நாளும் நான் நன்றி சொல்லீ வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உமது வார்த்தையால் எம்மைக் குணப்படுத்தும் தந்தையே இறைவா!

பல்வேறு நோய்களினாலும், கவலைகளினாலும் பாதிக்கப்பட்டு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்கள் உடல் நலமும், மனநலமும் பெற்று மகிழ்ந்திட அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியை நிலைநாட்டும் இறைவா,

உம்மடைய பிள்ளைகளாகிய நாம் அனைவரும் உமது திருமகனாம் இயேசுவின் திருவுடலாகிய நற்கருணைக்குரிய மாண்பையும் மதிப்பையும் உணர்ந்து வாழவும் இறைவார்த்தையாலும் நற்கருணையாலும் ஊட்டம் பெற்று உமது சாட்சிகளாக வாழ அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

எமது இளைஞர்கள் அனைவரும் நற்கருணை குறித்துக் காட்டும் தூய்மையான வாழ்வை வாழ்ந்து தாம் வாழுகின்ற சூழலில் என்றும் ஒளியாகத் திகழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“வாழும் தந்தை என்னை அனுப்பினார் நானும் அவரால் வாழ்கிறேன் அதுபோல் என்னை உன்போரும் என்னால் வாழ்வர்” என்று மொழிந்தவரே

எம்பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர் இளையோர் பல்வேறு குழுப்பொறுப்பாளர்கள்; அனைவரும் உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள, அனுப்பப்பட்டவர்கள் என்பதனை உணர்ந்தவர்களாக படிப்பிலும் நல்லொழுக்கத்திலும் விசுவாசத்திலும் உதவிபுரிபவர்களாகவும் தங்கள் பணிகளிலே பொறுப்பு மிக்கவர்களாகவும் வாழ்ந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்' என்றார்'' (யோவான் 6:55)

கிறிஸ்தவ நம்பிக்கையின் ஒரு முக்கிய கூறு நற்கருணை ஆகும். இயேசு தம்மையே நமக்கு உணவாகவும் பானமாகவும் அளித்துள்ளார் என்பதே அந்நம்பிக்கை. யோவான் நற்செய்தி இந்த உண்மையை விரிவாக விளக்குகிறது (யோவா 6). இயேசு தந்தையாம் கடவுளிடமிருந்து பெற்ற வாழ்வை நம்மோடு பகிர்ந்துகொள்கின்ற கருவியாக நற்கருணை உள்ளது (யோவா 6:57). இயேசு நமக்குத் தம் உடலை (''சதை''யை) உணவாகவும், இரத்தத்தைப் பானமாகவும் தருகிறார் (யோவா 6:55). மனித இறைச்சியை யாராவது உண்டால் அது சரியே என நாம் ஏற்பதில்லை. அப்படியிருக்க, இயேசு தம் சதையை நமக்கு உணவாக்குவது எப்படி முறையாகும்? இக்கேள்வியை இயேசுவிடமே கேட்டனர் அக்கால மக்கள். அதற்கு இயேசு அளித்த பதில்: ''எனது சதை உண்மையான உணவு; என் இரத்தம் உண்மையான பானம்'' என்பதே (யோவா 6:55). உடலை வளர்க்க உதவும் உணவு நமக்கு நிலையான வாழ்வை அளிக்க முடியாது. ஆனால் இயேசு வழங்குகின்ற அவருடைய ''சதை'' என்னும் உணவு நமக்கு நிலை வாழ்வை அளிக்கும் (யோவா 6:51,54,58).

எனவே, இயேசு தருகின்ற உணவு முற்காலத்தில் வழங்கப்பட்ட மன்னா என்னும் உணவை விடவும் உயர்ந்தது. அவ்வுணவை உண்டவர்கள் மீண்டும் இறந்தார்கள். ஆனால் இயேசுவின் உடலை உண்போர் எந்நாளும் உயிர்வாழ்வர். இயேசு வழங்குகின்ற உயிர் இம்மண்ணகத்தைச் சார்ந்ததல்ல, மாறாக, எந்நாளும் நிலைத்துநிற்கின்ற விண்ணகத்தைச் சார்ந்தது. தந்தையாம் கடவுள் இயேசுவோடு எந்நாளும் இணைந்து வாழ்வதுபோல நாமும் கடவுளின் உயிரை நம்மில் கொண்டு அவர் வழியாகவே வாழ்வோம். அந்த வாழ்வுக்கு ஒருநாளும் முடிவு இராது.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் உம்மில் இணைந்து உயிர் வாழ எங்களுக்கு அருள்தாரும்.