யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
பொதுக்காலம் 12வது வாரம் வெள்ளிக்கிழமை
2014-06-27

யேசுவின் திருஇதயம் பெருவிழா




முதல் வாசகம்

அவரை வெறுப்பவரை நேரடியாகத் தண்டிப்பதற்கும் காலம் தாழ்த்த மாட்டார்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 7: 6-11

உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள். மண்ணிலுள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாகக் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டார். எல்லா மக்களிலும் நீங்கள் திரளானவர்கள் என்பதற்காக ஆண்டவர் உங்கள்மீது அன்பு கொண்டு உங்களைத் தேர்ந்து கொள்ளவில்லை. உண்மையில், எல்லா மக்களிலும் நீங்கள் சொற்பமானவர்களே! மாறாக, உங்களிடம் அன்புகூர்ந்ததனாலும், உங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பொருட்டும், ஆண்டவர் தமது வலிமைமிகு கரத்தால் உங்களைப் புறப்படச் செய்து, அடிமைத்தன வீட்டினின்றும் எகிப்து மன்னனாகிய பார்வோனின் கையினின்றும் உங்களை விடுவித்தார். எனவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவரே கடவுள் எனவும், அவரே உண்மையான இறைவன் எனவும் அறிந்துகொள்ளுங்கள். அவர்மீது அன்புகூர்வோருக்கும் அவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போருக்கும் ஆயிரம் தலைமுறைவரைக்கும் தம் இரக்கத்தின் உடன்படிக்கையைக் காக்கின்றவர் அவரே! ஆனால், அவரைப் பகைப்பவரை அழிப்பதன் மூலம் நேரடியாகப் பதிலளிப்பார்; அவரை வெறுப்பவரை நேரடியாகத் தண்டிப்பதற்கும் காலம் தாழ்த்த மாட்டார். எனவே நீங்கள் கடைப்பிடிக்கும்படி நான் உங்களுக்கு இன்று இடும் கட்டளைகளையும், நியமங்களையும் முறைமைகளையும் நிறைவேற்றுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு அஞ்சுவோர்மீது அவரது பேரன்போ நிலைத்திருக்கும்.
திருப்பாடல் 103: 1-2. 3-4. 6-7. 8,10

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி

6 ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார். 7 அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். -பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. -பல்லவி

இரண்டாம் வாசகம்

நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்;
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-16

அன்பிற்குரியவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது. அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார் எனவும் அறிந்துகொள்கிறோம். தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கின்றோம். இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கை இடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தின் முன்பாக, ``தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்'' என்று கூறினார். மேலும் அவர், ``பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"நான் இளைப்பாறுதல் தருவேன்."

இயேசுவின் திரு இதயம், அது எதையும் தாங்கும் இதயம். உன்னுடையவும் உலகின் எல்லா மக்களுடைய எல்லாச் சுமைகளையும் தாங்கும் இதயம்.உன் எல்லாச் சுமைகளையும் தாங்கும் சுமை தாங்கி அந்த இயேசுவின் திரு இதயம்.அடி தாங்கும் உள்ளம் இடி தாங்குமா என்றால், இயேசுவின் இதயம் உன் எல்லா அடியையும் இடியையும் தாங்க தயாராக இருக்கிறது."பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."

இறைவனிடம் வந்து நம் சுமைகளை அவரிடம் இறக்கி வைத்து, இளைப்பாறுதல் என்பது நம் பொறுப்புக்ளைக்; கை கழுவிவிடுவதல்ல. மாறாக, நம்பெருஞ்சுமைகளை அவரிடம் இறக்கி வைத்து, சில சிறிய எளிய சுமையை, அழுத்தாத நுகத்தை நம் மீது ஏற்றுக்கொள்வது. இயேசு நமக்குத் தருவது ஒரு நுகம். பொதுவாக நுகம் இருவர் சுமக்கும் சுமை. இயேசு நமக்குத் தருவது நுகம் என்பதால் நம்மோடு சுமக்கும் இரண்டாது நபர் இயேசு.ஆகவே, வாழ்க்கைப் N;பாராட்டத்தில் இளைப்பாற்றி என்பது, இறைவனோடு பகிர்ந்து கொள்வதும் இறைவன் தருவதை இறைவனோடு இணைந்து சுமப்பதும் ஆகும்.

இயேசுவின்திரு இதயம், சோர்ந்து மனம் உடைந்து தன்னிடம் தஞ்சம் அடையும் அனைவருக்கும் புகலிடமாகி புது வாழ்வு வழங்குகிறது. இயேசுவோடு சேர்ந்து அவர் தரும் மாற்றுச் சுமையை மனமுவந்து சுமப்போம். நமக்கு நம் சுமை பெரிதாகத் தோன்றாது. சுமையாக இருக்காது. புதிய அனுபவமாக இருக்கும். வாழ்வு இனிதாக இருக்கும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசு என்னும் அடித்தளத்தில் கட்டப்பட்ட வீடாக எங்கள் வாழ்க்கை அமைந்திட அருள்தாரும்.