யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 14வது வாரம் திங்கட்கிழமை
2014-07-07




முதல் வாசகம்

முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மணஒப்பந்தம் செய்துகொள்வேன்
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 2: 14-16,19-20

ஆண்டவர் கூறுவது: ``நான் இஸ்ரயேலை நயமாகக் கவர்ந்திழுப்பேன்; பாலைநிலத்துக்கு அவளைக் கூட்டிப்போவேன்; நெஞ்சுருக அவளுடன் பேசுவேன். அவளுடைய திராட்சைத் தோட்டங்களை அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்; ஆக்கோர் பள்ளத்தாக்கை நம்பிக்கையின் வாயிலாக மாற்றுவேன்; அப்போது அவள் அங்கே தன் இளமையின் நாள்களிலும், எகிப்து நாட்டினின்று வெளியேறிய காலத்திலும் பாடியது போல் பாடுவாள். அந்நாளில், `என் கணவன்' என என்னை அவள் அழைப்பாள்; `என் பாகாலே' என இனிமேல் என்னிடம் சொல்லமாட்டாள்'' என்கிறார் ஆண்டவர். ``இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்; நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மணஒப்பந்தம் செய்துகொள்வேன். மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்; ஆண்டவராம் என்னை நீயும் அறிந்து கொள்வாய்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்
திருப்பாடல் 145: 2-3. 4-5. 6-7. 8-9

2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். 3 ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. பல்லவி

4 ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும். 5 உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். பல்லவி

6 அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப் பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன். 7 அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்து கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-26

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, ``என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்'' என்றார். இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர். அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். ஏனெனில் அப்பெண், ``நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம் பெறுவேன்'' எனத் தமக்குள் சொல்லிக் கொண்டார். இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, ``மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று'' என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார். இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார். அவர், ``விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்'' என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள். அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார். அவளும் உயிர் பெற்று எழுந்தாள். இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்... இயேசு அவரைத் திரும்பிப்; பார்த்து, 'மகளே, துணிவோடிரு. உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று' என்றார்'' (மத்தேயு 9:21-22)

இரண்டு பெண்கள் இயேசுவின் வல்லமைமிகு செயலால் புத்துயிர் பெறுகிறார்கள். முதல் பெண் இரத்தப் போக்கினால் 12 ஆண்டுகள் அவதிப்பட்டவர். மற்ற பெண் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துபோகிறார். இயேசு அவரை மீண்டும் உயிர்பெற்றெழச் செய்கிறார். மாற்கு நற்செய்தியாளர் இயேசு புரிந்த இந்த இரு உவமைகளையும் விரிவாகத் தருகிறார் (காண்க: மாற் 5:21-43). இரத்தப் போக்கினால் துன்புற்ற பெண் இயேசுவின் அருகே செல்ல எவ்வளவோ முயல்கிறார். ஆனால் மக்கள் கூட்டம் இயேசுவை நெருக்கிக் கொண்டிருந்ததால் அவரால் இயேசுவிடம் சென்று தன் நோயைப் போக்க வேண்டும் என்று மன்றாட வாய்ப்புக் கிடைக்கவில்லை (காண்க: மாற் 5:25-34). இருந்தாலும், இயேசுவின் மேலுடையையாவது தொட்டுவிட்டால் போதும், தனக்குக் குணம் கிடைத்துவிடும் என அவர் உறுதியாக நம்புகிறார். அப்படியே இயேசுவின் ''மேலுடையின் ஓரத்தை'' தொடுகிறார் (மத் 5:20). அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. அவர் தம் நோய் நீங்கி நலம் பெறுகிறார்.

இயேசு நமக்காகத் துன்புற்றார். அவர் அனுபவித்த துன்பத்திற்கும் இப்பெண்ணின் நிலைக்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. இப்பெண் இரத்தப்போக்கினால் அவதியுற்றதுபோலவே இயேசுவும் துன்புறுகிறார், இரத்தம் சிந்துகிறார், உலகறிய தம் குரலை எழுப்பவில்லை, ஆனால் கடவுளிடத்தில் முழுமையாக நம்பிக்கை கொள்கிறார், இறுதிவரை உறுதியாக இருந்த அவர் சாவின் பிடியிலிருந்து ''மீட்கப்படுகிறார்''. அதுபோலவே இப்பெண்ணும் தனக்கு ஏற்பட்ட இரத்தப்போக்கின் காரணமாகத் துன்புற்றார். தன்னைக் காப்பாற்ற வேண்டும் என அவர் பிற மனிதரை அண்டிச் சென்று அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை. மாறாக, இயேசு தன்னை நலமாக்க முடியும் என உறுதியாக இப்பெண் நம்பினார். அந்த நம்பிக்கை எவ்வளவு உறுதியாக இருந்தது என்றால் அப்பெண் இயேசுவின் மேலாடையைத் தொட்டாலே தனக்குக் குணம் கிடைத்துவிடும் என நம்பினார். நம் வாழ்க்கையிலும் துன்பங்கள் பல உண்டு. சில வேளைகளில் பிற மனிதர் நம் துன்பங்களைப் புரிந்துகொள்வதில்லை. ஆனால் கடவுள் நம் உள்ளத்திலிருப்பதை அறிவார். நாம் அனுபவிக்கின்ற துன்பங்கள் உலகத்தின் கண்களுக்குத் தெரியாவிட்டாலும் கடவுள் அவற்றை நன்கே அறிவார். நாம் நம்பிக்கையோடு அவரை அணுகிச் செல்ல வேண்டும். அப்போது ''மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று'' (மத் 9:22) என்று இயேசு கூறிய சொற்கள் நமக்கும் ஆறுதல் தரும் சொற்களாக அமையும். நம் வாழ்விலும் கடவுளின் அருளையும் இரக்கத்தையும் நாம் அனுபவித்து, அவருடைய வல்லமையால் நலம் பெறுவோம்; மீட்படைவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் வல்லமையில் நம்பிக்கை கொண்டு வாழவும் புத்துயிர் பெறவும் எங்களுக்கு அருள்தாரும்.