யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 14வது வாரம் செவ்வாய்க்கிழமை
2014-07-08




முதல் வாசகம்

அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும்புயலை அறுப்பார்கள்.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 8: 4-7,11-13

ஆண்டவர் கூறுவது: இஸ்ரயேல் மக்கள் தாங்களே அரசர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்; அது என்னாலே அன்று; அவர்களே தலைவர்களை நியமித்துக் கொண்டார்கள்; அதைப் பற்றியும் நான் ஒன்றுமறியேன். தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும் தங்களுக்கு எனச் சிலைகளைச் செய்தார்கள்; தாங்கள் அழிந்து போகவே அவற்றைச் செய்தார்கள். சமாரியா மக்கள் வழிபடும் கன்றுக்குட்டியை நான் வெறுக்கின்றேன்; என் கோபத் தீ அவர்களுக்கு எதிராய் எரிகின்றது. இன்னும் எத்துணைக் காலம் அவர்கள் தூய்மை அடையாது இருப்பார்கள்? அந்தக் கன்றுக்குட்டி இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ! அது கடவுளல்லவே! கைவினைஞன் ஒருவன்தானே அதைச் செய்தான்! சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும். அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும் புயலை அறுப்பார்கள். வளரும் பயிர் முற்றுவதில்லை; கோதுமை நன்றாக விளைவதில்லை; அப்படியே விளைந்தாலும், அன்னியரே அதை விழுங்குவர். எப்ராயிம் பாவம் செய்வதற்கென்றே பலிபீடங்கள் பல செய்து கொண்டான்; அப்பீடங்களே அவன் பாவம் செய்வதற்குக் காரணமாயின. ஆயிரக்கணக்கில் நான் திருச்சட்டங்களை எழுதிக் கொடுத்தாலும், அவை நமக்கில்லை என்றே அவர்கள் கருதுவார்கள். பலியை அவர்கள் விரும்புகின்றார்கள்; பலி கொடுத்து, அந்த இறைச்சியையும் உண்ணுகிறார்கள்; அவற்றின் மேல் ஆண்டவர் விருப்பம் கொள்ளவில்லை; அதற்கு மாறாக, அவர்கள் தீச்செயல்களை நினைவில் கொள்கின்றார்; அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை வழங்குவார்; அவர்களோ எகிப்து நாட்டிற்குத் திரும்புவார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்
திருப்பாடல் 115: 3-4. 5-6. 7-8. 9-10

3 நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார். 4 அவர்களுடைய தெய்வச் சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே! பல்லவி

5 அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை; கண்கள் உண்டு; ஆனால் அவை பார்ப்பதில்லை; 6 செவிகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை; மூக்குகள் உண்டு; ஆனால் அவை முகர்வதில்லை. பல்லவி

7 கைகள் உண்டு; ஆனால் அவை தொட்டுணர்வதில்லை; கால்கள் உண்டு; ஆனால் அவை நடப்பதில்லை; தொண்டைகள் உண்டு; ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை. 8 அவற்றைச் செய்கின்றோரும் அவற்றில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவற்றைப்போல் ஆவர். பல்லவி

9 இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். 10 ஆரோனின் குலத்தாரே! ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38

அக்காலத்தில் பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, ``இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை'' என்றனர். ஆனால் பரிசேயர், ``இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்'' என்றனர். இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய்நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள். அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, ``அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''திரண்டிருந்த மக்களை இயேசு கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகைளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்'' (மத்தேயு 9:36)

வாழ்க்கையில் சோர்வு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். செய்து முடிக்க நினைத்த காரியம் முறையாக முடிவுபெறாவிட்டால் நமக்குச் சோர்வு ஏற்படலாம். நம் எதிர்பார்ப்புகள் நிறைவேறா நிலையில் சோர்வு வரலாம். நமக்குச் சிக்கல்கள் ஏற்படுகின்ற போது அவற்றிற்குத் தீர்வுகாண நம்மால் இயலவில்லையே என்னும் எண்ணம் எழும்போது சோர்வு நம்மைப் பாதிப்பதுண்டு. பிறரிடமிருந்து எதிர்பார்த்த உதவி நமக்குக் கிடைக்காதபோது நமக்குச் சோர்வு வரலாம். இயேசு ஊர் ஊராகச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, புதுமைகள் பல புரிந்துவந்த அச்சமயத்தில் திரளான மக்கள் கூடியிருக்கின்றனர். அந்த மக்கள் ''சோர்ந்து காணப்பட்டார்கள்'' (மத் 9:36). சோர்ந்து போய் இருந்த அந்த மக்களைக்; கண்டபோது ''இயேசு அவர்கள் மேல் பரிவுகொண்டார்'' (மத் 9:36). பரிவு என்னும் சொல்லுக்கு இரக்கம், அருள், பாசம், அன்புணர்வு போன்ற பல பொருள்கள் உண்டு. மக்கள் சோர்ந்திருக்க முக்கிய காரணம் அவர்களை வழிநடத்திச் செல்ல திறமையான, தகுதிவாய்ந்த தலைவர்கள் (''ஆயர்கள்'') இல்லாமல் போனதுதான் (காண்க: மத் 9:36).

இயேசு நம்மை வழிநடத்துகின்ற ஆயராக வந்தார். தம்மை ''நல்ல ஆயருக்கு'' ஒப்பிட்ட இயேசு, பழைய ஏற்பாட்டில் கடவுள் ஒரு நல்ல ஆயருக்கு ஒப்பிடப்பட்டிருப்பதை அறிந்திருந்தார் (காண்க: திபா 22; 100; எசா 40:11). அதுபோலவே யூத சமயத்தில் தலைவர்களாக இருந்தோரைக் குறிக்கவும் ஆயர் என்னும் உருவகம் பயன்பட்டது (காண்க: எசே 34:8-12). மத்தேயு நற்செய்தி இயேசுவை ''நல்ல ஆயர்'' என வேறு இரண்டு இடங்களிலும் அழைக்கிறது (காண்க: மத் 10:6; 18:12-14). இவ்வாறு நம் ஆயராக வந்த இயேசு நம்மை நல்வழியில் நடத்திச் செல்வதோடு, நாம் உயிர்வாழ நமக்கு உணவளிப்பார்; நம்முடைய பிற தேவைகளையும் நிறைவுசெய்வார் என்பது நம் நம்பிக்கை. நல்ல தலைவர்கள் இருந்தால் சமுதாயம் தழைக்கும். திருச்சபையில் பொறுப்பு வகிக்கின்ற தலைவர்களும் இயேசுவைப் போல பரிவுள்ளம் கொண்டோராக இருக்க வேண்டும். அப்போது அவர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நன்முறையில் வழிநடத்திச் செல்வர்; நம் ஆயராம் இயேசுவைப் போல மக்களின் நலனை மேம்படுத்தத் தம்மையே ஈடுபடுத்துவர்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் நல்வழியில் நடந்து, பிறரையும் நல்வழியில் நடத்திச் சென்றிட அருள்தாரும்.