யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 17வது வாரம் திங்கட்கிழமை
2014-07-28

புனித அல்போன்சா




முதல் வாசகம்

தீய மக்கள், எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 13: 1-11

ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: ``நீ உனக்காக நார்ப் பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக்கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே.'' ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில் கட்டிக்கொண்டேன். எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது: ``நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக்கொள்: எழுந்து பேராத்து ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்து வை.'' ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில் அதனை மறைத்து வைத்தேன். பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: ``எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா.'' அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது. அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ``ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன். என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப் பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள். கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல இஸ்ரயேல், யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை" என்கிறார் ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்.
இணைச்சட்டம்32: 18-19, 20-21

`உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை மறந்துவிட்டாய்'. 19 தம் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார். பல்லவி

20 அவர் உரைத்தார்: எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்; அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்; ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்; நேர்மை அறவே அற்ற பிள்ளைகள். பல்லவி

21 இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்; அவர்களின் சிலைகளால் எனக்கு சினமூட்டினர்; ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35

அக்காலத்தில் இயேசு மக்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ``ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.'' அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: ``பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்.'' இவற்றை எல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. ``நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்'' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார்... விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்' என்றார்'' (மத்தேயு 13:31-32)

இறையாட்சி என்றால் என்னவென்பதை மக்களுக்கு விளக்கிக் கூற இயேசு பயன்படுத்திய ஓர் உருவகம் கடுகு விதை ஆகும். சிறியதொரு கடுகு விதை பெரியதொரு மரமாக வளர்ந்து ஓங்கும் எனவும் இறையாட்சியும் அவ்வாறே சிறிய அளவில் தொடங்கி மாபெரும் அரசாக உருப்பெறும் எனவும் இந்த உவமைக்குப் பொதுவாக விளக்கம் தரப்படுவதுண்டு. ஆனால் இயேசுவின் உவமைகளில் எதிர்பாராத திருப்பங்கள் வரும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த உவமையைப் புரிந்துகொள்ள வேண்டும் என அறிஞர் கூறுவர். இந்த உவமையின் பின்னணி பழைய ஏற்பாட்டில் உள்ளது. அங்கே எசேக்கியேல் இறைவாக்கினர் வானளாவ வளர்கின்ற கேதுரு மரம் பற்றிப் பேசுகிறார் (காண்க: எசே 17; 31). அதுபோலவே தானியேல் நூலிலும் மிக உயர்ந்து வளர்ந்த வலிமை மிக்க மரம் பற்றிப் பேசப்படுகிறது (காண்க: தானி 4:10-15). மிக உயர்ந்து வளர்ந்த அந்த மரங்களைப் போல கடுகுச் செடி ஒருநாளும் வளர இயலாது. இறையாட்சியைப் புகழ்மிக்க கேதுரு மரத்திற்கு ஒப்பிடாமல் மிகச் சாதாரணமான தோட்டப் பயிரான கடுகுச் செடிக்கு இயேசு ஒப்பிடுகிறார். இது வலிமை மிக்கதோ வானளாவ உயர்வதோ அல்ல. ஆனால் இயேசுவில் நம்பிக்கை கொள்வோரின் வாழ்வில் அதிசயமான மாற்றம் நிகழும். அவர்கள் ஒரு புதிய நிலைக்கு உயர்த்தப்படுவார்கள். இந்த மாபெரும் மாற்றம் நம்மில் நிகழ வேண்டும் என்றால் நாம் இயேசுவிடத்தில் முழுமையான நம்பிக்கை கொண்ட மக்களாக வாழ்ந்திட வேண்டும். அப்போது நிகழ இயலாததும் நிகழும். சிறிய கடுகு விதையை மாபெரும் மரமாக வளர்ந்திடச் செய்யவும் கடவுளுக்கு வல்லமை உண்டு!

மேலும், கடுகுச் செடி கேதுரு மரம் போல வானத்தை நோக்கி நேராக வளர்வதல்ல. மாறாக, அதன் கிளைகள் இங்கும் அங்குமாகப் பல திசைகளில் வளர்ந்து செல்லும். பிற செடிகளின் ஊடேயும் நுழைந்து வளரும். தொடக்க காலத் திருச்சபையில் பிற இனத்தார் பலர் இயேசுவில் நம்பிக்கை கொண்டு, யூத கிறிஸ்தவர்களோடு சேர்ந்து வளர்ந்த செயல்பாடு இந்த உவமையில் உருவகமாக வெளிப்படுகிறது.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் நீரே ஊன்றிய நம்பிக்கை என்னும் விதை வளர்ந்து எங்களுக்கு வாழ்வளிக்க அருள்தாரும்.