யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் வெள்ளிக்கிழமை
2014-08-08

புனித தோமினிக்




முதல் வாசகம்

இரத்தக் கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு!
இறைவாக்கினர் நாகூம் நூலிலிருந்து வாசகம் 1: 15; 2: 2; 3: 1-3,6-7

வெற்றி! வெற்றி!' என்று முழங்கி நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் தென்படுகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு! உன் பொருத்தனைகளை நிறைவேற்று! ஏனெனில், தீயவன் உன் நடுவில் இனி வரவே மாட்டான்; அவன் முற்றிலும் அழிந்துவிட்டான். இஸ்ரயேலின் மேன்மை போலவே யாக்கோபின் மேன்மையை ஆண்டவர் மீண்டும் நிலைநாட்டுகின்றார்; கொள்ளைக்காரர்கள் அவர்களைக் கொள்ளையடித்தனர்; அவர்களின் திராட்சைக் கொடிகளையும் அழித்துப் போட்டனர். இரத்தக் கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு! அங்கு நிறைந்திருப்பது எல்லாம் பொய்களும் கொள்ளைப் பொருளுமே! சூறையாடலுக்கு முடிவே இல்லை! சாட்டையடிகளின் ஓசை! சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி! தாவிப் பாயும் புரவிகள்! உருண்டோடும் தேர்கள்! குதிரை வீரர்கள் பாய்ந்து தாக்குகின்றனர்; வாள் மின்னுகின்றது; ஈட்டி பளபளக்கின்றது; வெட்டுண்டவர்கள் கூட்டமாய்க் கிடக்கின்றனர்; பிணங்கள் குவிந்து கிடக்கின்றன; செத்தவர்களுக்குக் கணக்கே இல்லை; அந்தப் பிணங்கள் மேல் மனிதர் இடறி விழுகின்றனர். அருவருப்பானவற்றை உன்மீது எறிவேன்; உன்னை இகழ்ச்சியுடன் நடத்திப் பகடிப் பொருள் ஆக்குவேன். உன்னை நோக்குவோர் எல்லாரும் உன்னிடமிருந்து பின்வாங்கி, `நினிவே பாழாய்ப் போனது; அவளுக்காகப் புலம்புவோர் யாரேனும் உண்டோ?' என்று சொல்வார்கள்; உன்னைத் தேற்றுவோரை எங்கே தேடுவேன்?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே!
இச 32: 35-36. 39. 41

உன அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன. 36உன ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார்; அவர்தம் ஊழியர்களுக்காக அவர் மனமிரங்கிடுவார். பல்லவி

39ய-ன நானே இருக்கிறவர்! என்னைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்பதை இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள்! கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும்நானே; குணமாக்குபவரும் நானே! பல்லவி

41 மின்னும் என் வாளை நான் தீட்டி, நீதித் தீர்ப்பை என் கையில் எடுக்கும்போது என் பகைவரைப் பழிவாங்கி என்னைப் பகைப்பவருக்குப் பதிலடி கொடுப்பேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப் படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 24-28

அக்காலத்தில் இயேசு தம் சீடரைப் பார்த்து, ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார். நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, 'என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்' என்றார்'' (மத்தேயு 16:24)

இயேசுவின் சீடர்கள் இயேசுவைத் தம் தலைவராக, குருவாக ஏற்பவர்கள். சீடர்கள் தம்மைப் ''பின்பற்ற வேண்டும்'' என இயேசு கேட்டார். பின்பற்றுதல் என்பது ஒருவரின் பின்னால் நடந்துசெல்கின்ற வெளிச்செயலை மட்டுமல்ல, உள்ளார்ந்த விதத்தில் நிகழ்கின்ற ஒரு செயலை இவண் குறிக்கிறது. அதாவது, இயேசுவைப் பின்பற்ற விரும்புவர் முதலில் ''தான், தனது'' என்னும் உணர்வைக் கைவிடவேண்டும்; தன்னைப் பற்றி எண்ணாமல் இயேசுவிடத்தில் தன் எண்ணத்தைத் திருப்ப வேண்டும். கடவுள் நமக்குத் தருகின்ற இவ்வுலக வாழ்வு பொருளற்றது என்பதற்காக அல்ல, மாறாக, இயேசு வாக்களிக்கின்ற ''நிலையான வாழ்வுக்கு'' முன்னால் இவ்வுலக வாழ்வு சிறியதே என உணர்ந்து நாம் வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம். இயேசுவும் தம்மைப் பற்றிக் கவலைப்படாமல் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதிலேயே கருத்தாயிருந்தார் (காண்க: பிலி 2:6-8). அதுபோலவே இயேசுவின் சீடர்களும் இருக்க வேண்டும்.

தம்மைப் பின்பற்றுவோர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு இயேசு விதிக்கின்ற இரண்டாம் நிபந்தனை நாம் நமது ''சிலுவையைச் சுமக்க வேண்டும்'' என்பதாகும் (மத் 16:24). இதுவும் தன்னலம் துறத்தலைக் குறிப்பதே. சிலுவை என்பது நம் வாழ்வில் ஏற்படுகின்ற இன்னல்களையும் தடைகளையும் சிக்கல்களையும் குறிக்கும் அடையாளம்; குறிப்பாக நாம் இயேசுவைப் போல நம் உயிரையே கையளிக்கவும் தயங்கலாகாது என்பதற்குச் சிலுவை ஓர் அடையாளமாக உள்ளது. எனவே, இயேசுவின் சீடர்களாக வாழ விரும்பும் நாம் முழுமனத்தோடு அவரைப் பின்பற்ற அழைக்கப்படுகிறோம். அவ்வாறு செயல்படும்போது நாம் நம் உயிரையும் ஒரு பொருட்டென மதிக்காமல் அவருக்காகவே வாழ்வோம்; அவருக்காக உயிர் துறக்கவும் தயாராயிருப்போம்.

மன்றாட்டு:

இறைவா, எம் வாழ்வையே பற்றிக்கொள்ளாமல் உம் திருமகனைப் பற்றிக்கொண்டு அவர் வழி சென்றிட எங்களுக்கு அருள்தாரும்.