யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 21வது வாரம் புதன்கிழமை
2014-08-27

புனித மொனிக்கா




முதல் வாசகம்

உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 6-10,16-18

அன்பர்களே! எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுக் கொண்ட முறைமையின்படி ஒழுகாமல் சோம்பித்திரியும் எல்லாச் சகோதரர் சகோதரிகளிடமிருந்தும் விலகி நில்லுங்கள் என, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். எங்களைப் போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித் திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப் பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல; மாறாக, நீங்களும் எங்களைப்போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம். `உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது' என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். அமைதியை அருளும் ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக! ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக! இவ்வாழ்த்தைப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன். நான் எழுதும் திருமுகம் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம். இதுவே நான் எழுதும் முறை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!
திருப்பாடல் 128: 1-2. 4-5

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! -பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 27-32

அக்காலத்தில் இயேசு கூறியது: ``வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லா வகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள். வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்; நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுபடுத்துகிறீர்கள்; `எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்' என்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள். உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்து முடியுங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே,... நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள்'' (மத்தேயு 23:27)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல, வெளுத்ததெல்லாம் பாலல்ல என்பார்கள். கண்ணுக்கு அழகாகத் தோன்றுவது உண்மையிலேயே அதற்கு நேர்மாறாகக் கூட இருக்கலாம். இயேசு பரிசேயரையும் மறைநூல் அறிஞரையும் குறித்துப் பேசியது இதுதான். அவர்கள் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறார்கள்; ஆனால் உள்ளேயோ போலித்தனம் நிறைந்திருக்கிறார்கள். இதை விளக்க இயேசு ''வெள்ளையடித்த கல்லறை'' என்னும் உருவகத்தைப் பயன்படுத்துகிறார். பாலஸ்தீன நாட்டு வழக்கப்படி சாலையோரங்களில் கல்லறைகளை அமைப்பதுண்டு. அக்கல்லறைகளை அணுகிச்சென்றாலோ, தெரியாமல் தொட்டுவிட்டாலோ தீட்டு ஏற்பட்டுவிடும் என்று மக்கள் நம்பினார்கள். எனவே, அக்கல்லறைகளுக்கு அருகில் மக்கள் போய்விடாமல் இருக்க அவற்றின் மீது வெள்ளை பூசுவது வழக்கம். குறிப்பாக மக்கள் அதிகம் நடமாடுகின்ற காலமாகிய விழாக் காலங்களில் இவ்வாறு கல்லறைகள் வெள்ளையடிக்கப்படும். அப்போது சூரிய ஒளியில் அக்கல்லறைகள்மீது வீசும்போது அவை பளிச்சென்று தோற்றமளிக்கும். இதைப் பார்த்துப் பழகிய இயேசு பரியேரும் மறைநூல் அறிஞரும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பாவர் என்றுரைத்தார். மக்களைத் தீட்டுப்படுத்துவது யாது? வெளியே மின்னிக்கொண்டும் உள்ளே அழுகியவற்றைத் தாங்கிக்கொண்டும் இருக்கின்ற கல்லறைபோல இயேசுவின் எதிரிகளும் உள்ளே அழுக்கு நிறைந்தவர்களாகவும் வெளியே மட்டும் கவர்ச்சியுடையவர்களாகவும் இருந்ததால் அவர்களது நிலை ஏற்கத்தகாகது என இயேசு கூறுகிறார். உண்மையாகவே நம்மைத் தீட்டுப்படுத்துபவை பேராசை, அழுக்காறு, சிற்றின்ப நாட்டம், ஆணவம் போன்றவையே.

மக்களிடையே நிலவிய அநீதிகளைச் சுட்டிக்காட்டிய இறைவாக்கினர்களைப் பண்டைக்காலத்தில் கொன்றுபோட்டவர்களே அந்த இறைவாக்கினருக்கு அழகிய கல்லறைகளைக் கட்டிவைத்தார்கள் என்பத முரண்பாடான உண்மை. இயேசு எதிர்பார்க்கின்ற தூய்மை வெளித் தோற்றம் மட்டுமல்ல, மாறாக நம் உள்ளத்தில் நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக வாழ்ந்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் நாங்கள் தூய்மை உடையவர்களாகவும் வெளி நடத்தையில் நேர்மையுள்ளவர்களாகவும் வாழ்ந்திட அருள்தாரும்.