பொதுக்காலத்தின் 30ஆம் ஞாயிறு


திருவழிப்பாட்டு ஆண்டு A (26-10-2014)

உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக/> உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக/> உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக/> உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக/> உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக/>


திருப்பலி முன்னுரை

அன்புமிக்க இறைத்தந்தைக்கும், இறைச்சமுகத்திற்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்; இனிய வாழ்த்துக்கள் கூறி இன்றைய திருவழிபாட்டிற்கு அன்போடு அழைக்கிறோம். இன்று நாம் பொதுக்காலத்தின் 30ஆம் ஞாயிறை நம் தாயாம் திருச்சபையோடு கொண்டாடுகின்றோம்.

நமக்கு மீட்பளிக்கும் வல்லமையான நம் ஆண்டவரின் திருச் சந்நிதியில் நன்றியோடும், விசுவாசத்தோடும் ஒன்று கூடியுள்ளோம். இறைவனுடனான உறவையும், அயலவருடனான உறவையும் நாம் வளர்த்துக்கொள்வதே மேலான ஆன்மீகம் என்னும் செய்தியை நாம் இன்றைய இறைவார்த்தைகள் வழியாக அறிந்து கொள்ளுகின்றோம். உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக. என்னும் இறைவனின் இரண்டு நெறிமுறைகளும் இறை, மனித உறவுகளின் அவசியத்தை எடுத்துரைக்கின்றன. இறைவனின் இந்த மாபெரும் அழைப்பை நாம் ஒவ்வொருவரும் ஏற்று நிபந்தனையற்றவிதமாக, தூய உள்ளத்தோடு அனைவரையும் அன்பு செய்து வாழ வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

சமூகத்தில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பவர்களையும் ஏழைகளையும் நாம் இரக்க மனப்பான்மையோடு நடத்தவேண்டும் என இன்றைய முதல் வாசகம் நமக்கு அறிவுறுத்துகிறது. மனிதப் பண்போடு நடந்துகொள்வதற்கு யாவே கடவுளே நமக்கு முன் மாதிரியாக இருக்கிறார். அவர் இரக்கம் உள்ளவராக இருப்பதுபோல நாமும் இரக்கம் கொண்டிருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 22: 21-27

ஆண்டவர் கூறியது: அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப் படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன். மேலும் என் சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர். உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே. பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில் நான் இரக்கமுடையவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்.
திருப்பாடல் 18: 1-2 2-3. 46,50

1 என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன். 2ய ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். பல்லவி

2bஉ என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். 3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். பல்லவி

46 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! 50 தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிறருடைய முன்மாதிரி ஆழ்ந்த தாக்கத்தைக் கொணர்கிறது. இயேசு பவுலின் வாழ்விலும், பவுல் கிறிஸ்தவ சபைகளின் வாழ்விலும், தெசலோனிக்க கிறிஸ்தவர் பிற கிறிஸ்தவ சபைகளின் வாழ்விலும் தாக்கம் கொணர்ந்ததை இன்றைய இரண்டாம் வாசகம் நினைவூட்டுகிறது. நாமும் பிறருக்கு முன்மாதிரியாய் விளங்க வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

நீங்கள் கடவுளிடம் திரும்பி, அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5-10

சகோதரர் சகோதரிகளே, உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே எவ்வாறு நடந்து கொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். மிகுந்த வேதனை நடுவிலும் நீங்கள் தூய ஆவி அருளும் மகிழ்வோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள். இவ்வாறு எங்களைப் போலவும் ஆண்டவரைப் போலவும் நடப்பவரானீர்கள். மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் உள்ள, நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் முன்மாதிரியானீர்கள். எப்படியெனில், ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நடுவிலிருந்தே பரவியது. கடவுள்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பது மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் தெரிய வந்துள்ளது. எனவே இதைப் பற்றி நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. நாங்கள் உங்களிடம் வந்தபோது எவ்வாறு நீங்கள் எங்களை வரவேற்றீர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான, வாழும் கடவுளுக்கு ஊழியம்புரியக் கடவுளிடம் திரும்பி வந்தீர்கள் என்றும் கூறிவருகிறார்கள். இவ்வாறு நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப்போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40

அக்காலத்தில் இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், ``போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்று கேட்டார். அவர், `` `உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.' இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. `உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன'' என்று பதிலளித்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எம் ஆற்றலாகிய ஆண்டவரே!

உமது பணியைத் தொடர்ந்தாற்ற நீர் அழைத்திருக்கும் எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: அவர்கள் ஒவ்வொருவரும் அன்பு என்னும் சக்தியை தங்கள் பணியில் முழுமையாகப் பயன்படுத்தி, நல்ல வழிகாட்டிகளாகத் திகழ்ந்திட வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் கற்பாறையும்: எம்; கோட்டையும்: மீட்பருமாகிய இறைவா!

எம் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உம்மை அன்பு செலுத்தி. எம் மீது நாம் அன்பு கூர்வதுபோல எமக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்து வாழ எமக்கு அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீர் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டும் தந்தையே இறைவா!

எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின் பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் தந்தையே!

உலகில் பசியாலும், பட்டியினாலும், நோயினாலும், அன்பின்மையினாலும் வாடிக்கொண்டிருக்கும் அனைத்துக் குழந்தைகளையும் ஆசீர்வதித்து அவர்களது தேவைகளை நிறைவுசெய்து அவர்களைப் பாதுகாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உன்னதரான தந்தையே இறைவா!

உமது வாழ்வுதரும் வார்த்தைகளைத் திரிவுபடுத்தி, தவறான விளக்கங்களைக் கொடுத்து, பிரிவினைகளோடும் பிளவுகளோடும் வாழும் அனைவரும் உமக்குள் ஒன்றுபட்டு இறையரைசைக் கட்டியெழுப்பிடச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் தந்தையே!

வதிட அனுமதிக்காக இந்நாடுகளில் ஏங்கிக்கொண்டிருக்கும் அனைவரும் நிலையான வதிவிட அனுமதியைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' (மத்தேயு 22:36)

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் திருச்சட்டத்தை நன்கு தெரிந்துவைத்திருந்தார்கள். சட்டத்தின் நுணுக்கங்களையும் அறிந்திருந்தார்கள். திருச்சட்டத்தில் அடங்கிய 613 கட்டளைகளையும், அவை பற்றி யூத சமய அறிஞர்கள் வழங்கிய விளக்கங்களையும் பரிசேயர் கற்றிருந்தார்கள். தங்களைப் போன்று இயேசுவும் சமய அறிவில் சிறந்தவர்தானா என்று சோதிக்கும் வகையில் அவர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வி: ''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்பதாகும். இயேசு அவர்களுக்கு அளித்த பதிலில் பெரிய விளக்கங்கள் இல்லை. மிகவும் எளிய முறையில், கடவுள் தந்த கட்டளைகளின் உள் ஆழம் எதில் அடங்கியிருக்கிறது என்பதை இயேசு எடுத்துரைக்கிறார். ''அன்பு செய்க!'' என்பதே திருச்சட்டத்தின் சுருக்கம் என இயேசு போதிக்கிறார். இந்த அன்புக் கட்டளைக்கு இரு பக்கங்கள் உண்டு: ஒன்று கடவுளை அன்பு செய்வது, மற்றது பிறரை அன்பு செய்வது. பழைய ஏற்பாட்டுத் திருச்சட்டத்தில் காணப்பட்ட அன்புக் கட்டளையின் இரு பக்கங்களையும் இணைக்கிறார் இயேசு. இணைச்சட்ட நூலில் ''உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக!'' (6:5) என்னும் சட்டமும், லேவியர் நூலில் ''உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!'' (19:18) என்னும் சட்டமும் தனித்தனியாகக் காணப்பட்டாலும் இயேசுவின் போதனையில் அவை இரண்டும் பின்னிப் பிணைந்த விதத்தில் உள்ளன.

எனவே, திருச்சட்டத்தில் மட்டுமன்று, இயேசுவின் போதனையிலும் அன்புக் கட்டளையே மைய இடம் பெறுவதில் வியப்பில்லை. கடவுளையும் மனிதரையும் அன்பு செய்வோர் உண்மையிலேயே தலைசிறந்த கட்டளையைக் கடைப்பிடிக்கின்றனர். கடவுள் முதன்முதலில் நம்மை அன்புசெய்தார். எனவே, நாமும் அவரை, அவரால் அன்புசெய்யப்படுகின்ற மனிதரை அன்புசெய்ய அழைக்கப்படுகிறோம். கடவுளின் அன்பில் நாம் ஆழ வேரூயஅp;ன்ற வேண்டும் என்றால் முதலில் நாம் அவரை நம்ப வேண்டும்; அவருடைய வாக்குறுதி நிறைவேறும் என ஏற்க வேண்டும். எனவே, நம்பிக்கையும் எதிர்நோக்கும் நம்மில் வளரும்போது அன்பும் வளரும். அன்பு நம்மில் சிறக்கும்போது கடவுள் மட்டில் நாம் கொள்கின்ற நம்பிக்கையும் உறுதிப்படும், அவர் வாக்களிக்கின்ற நன்மைகளை நாம் பெறுவோம் என்னும் எதிர்நோக்கும் திண்ணமாகும்.

மன்றாட்டு:

இறைவா, உம்மையே நாங்கள் நம்பியிருக்கவும், உம் அன்பில் வளர்ந்து, எங்கள் வாழ்வு நிறைவுபெறும் என நாங்கள் எதிர்நோக்கவும் அருள்தாரும்.