யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 3வது வாரம் புதன்கிழமை
2015-01-28

அக்குவினோ நகர் புனித தோமா




முதல் வாசகம்

தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்
திருத்தூதர் பவுல் எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்

11 ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. 12 ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார். 13 அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார். 14 தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார். 15 இதுபற்றித் தூய ஆவியாரும், "அந்நாள்களுக்குப்பிறகு அவர்களோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே; 16 என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன்" என்று நமக்குச் சான்று பகர்கிறார். இவ்வாறு சொன்ன பின், 17 "அவர்களது தீச்செயலையும் அவர்களுடைய பாவங்களையும் இனிமேல் நினைவுகூர மாட்டேன்" என்றும் கூறுகிறார். 18 எனவே பாவமன்னிப்பு கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமேயில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே
திருப்பாடல்110;1-4

ஆண்டவர் என் தலைவரிடம் 'நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார்.பல்லவி

2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச்செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!பல்லவி

3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.பல்லவி

4 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார் அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-20

அக்காலத்தில் இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது: ``இதோ, கேளுங்கள். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.'' அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்துகொண்டு, உவமைகளைப் பற்றி அவரிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், ``இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. எனவே அவர்கள் `ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்' '' என்று கூறினார். மேலும் அவர் அவர்களை நோக்கி, ``இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும், உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால், பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மறைநூல் அறிஞரும் பரிசேயரும்...செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்' என்றார்'' (மத்தேயு 23:2,3)

சொல்லுக்கும் செயலுக்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. சிலர் மிகுந்த பேச்சு வன்மையோடு உயரிய கருத்துக்களை எடுத்து விளக்குவதில் தலைசிறந்தவர்களாக இருப்பார்கள். பிறர் என்னென்ன செய்ய வேண்டும் என அறிவுரை கூற எப்போதும் தயாராய் இருப்பார்கள். ஆனால் தங்கள் சொந்த வாழ்வில் அந்த அறிவுரையைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். அவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடையே பெரிய முரண்பாடும் இடைவெளியும்தான் இருக்கும். இத்தகைய போக்கினை இயேசு கடுமையாகக் கண்டிக்கிறார். இயேசுவை எதிர்த்த பரிசேயர் யூத சமயத்தில் சீர்திருத்தம் கொணர விரும்பியவர்கள்தாம். சமய ஒழுங்குகளைப் பொறுத்தமட்டில் பொதுநிலையினருக்கு உரிய இடம் கொடுக்க வேண்டும் என அவர்கள் பாடுபட்டதுண்டு. எனவே, தூய்மைச் சடங்கு சார்ந்த சட்டங்கள் குருக்களுக்கு மட்டுமல்ல, பொதுநிலையினருக்கும் பொருந்தும் என அவர்கள் கற்பித்தனர். ஓய்வு நாளை எல்லாரும் துல்லியமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் அவர்களது போதனை. எனவே, பரிசேயர் மக்கள்மீது பெரிய பளுவைச் சுமத்தினார்கள் என்பது உண்மையே. இயேசுவும் கூட மக்கள் நன்னடத்தை கொண்டவர்களாக விளங்க வேண்டும் என போதித்தார். ஆயினும் இயேசுவின் போதனை தாங்கமுடியாத ஒரு பளு அல்ல. ''என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது'' என இயேசு விளக்குகிறார் (காண்க: மத் 11:30).

மக்கள் தம் வாழ்வை மாற்றியமைக்க வேண்டும் என்பதில் இயேசுவும் கருத்தாயிருந்தார். ஆனால், பரிசேயரைப் போல இயேசு சமயச் சடங்குகளுக்கு முதன்மையிடம் அளிக்கவில்லை. ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பதிலும் இயேசு அக்கறை காட்டவில்லை. மாறாக, சமயச் சட்டங்களும் ஓய்வு நாள் பழங்கங்களும் மக்களுடைய நன்மையைக் கருத்தில் கொண்டே விளக்கப்பட வேண்டும் என்பதில் இயேசு உறுதியாயிருந்தார். சட்டத்தைக் கடைப்பிடிக்காத சாதாரண மக்களைப் பரிசேயர் ''பாவிகள்'' என்றழைத்து ஒதுக்கினார்கள். ஆனால் இயேசுவோ ''பாவிகளைத் தேடி வந்தார்'' (மத் 9:13). கடவுளின் அன்பை எல்லா மக்களோடும் பகிர்ந்திட விழைந்தார். அவர் அறிவித்த இறையாட்சியில் ஏற்றத் தாழ்வுகளுக்கு இடம் கிடையாது. கடவுள் ஒருவரே அனைவருக்கும் தந்தையாக இருப்பார். மக்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்னும் முறையில் ஒருவர் ஒருவருக்குச் ''சகோதரர், சகோதரிகளாக'' இருப்பார்கள் (காண்க: மத் 23:8-9). இவ்வாறு சமத்துவம் நிலவுகின்ற சமுதாயத்தை உருவாக்க வந்த இயேசு பணிசெய்வதிலேயே முனைந்திருந்தார். அவருடைய பணி வாழ்வு நமக்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாக உள்ளது. ''உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்'' என்று அறிவித்த இயேசுவின் சொற்கள் நமக்கும் பொருந்தும் (காண்க: மத் 23:11).

மன்றாட்டு:

இறைவா, எங்கள் சொல்லும் செயலும் முரண்பட்டிருக்காமல் இசைவுடன் அமைந்திட எங்களுக்கு அருள்தாரும்.