இன்று பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு

திருவழிப்பாட்டு ஆண்டு B (26-04-2015)

நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/>


திருப்பலி முன்னுரை

அன்புக்குரியவர்களே,
நம் ஆயர் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலிக்குஉங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

நல்லாயன் ஞாயிறை சிறப்பிக்கும் இன்றைய திருவழிபாடு இயேசுவை நமது ஆயராக ஏற்று, அவரது குரலுக்கு செவிகொடுக்கும் நல்ல ஆடுகளாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமக்காக உயிரைக் கொடுத்த நல்லாயர் இயேசுவுக்குரிய ஒரே மந்தையின் உறுப்பினர்களாக உலக மக்களை ஒன்றிணைக்க நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளின் அழைப்பை உணர்ந்தவர்களாய், கிறிஸ்து இயேசுவில் இணைந்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

அன்பர்களே,

இன்றைய முதல் வாசகம், இயேசுவின் பெயரால் கால் நலமடைந்தவரைப் பற்றிய செய்தியை நமக்கு தருகிறது. குணமடைந்தவரைச் சுட்டிக்காட்டி, 'இயேசுவே மக்கள் அனைவருக்கும் மீட்பராகவும், திருச்சபைக்கு மூலைக்கல்லாகவும் விளங்குகிறார்' என்று திருத்தூதர் பேதுரு சான்று பகர்கிறார். விலையுயர்ந்த மூலைக்கல்லாகிய இயேசுவோடு இசைந்த கட்டடமாக திருச்சபை வளர்ச்சி பெற வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இயேசுவினாலே அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 8-12

அந்நாள்களில் பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு கூறியது: ``மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, உடல்நலமற்றிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, `கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்.' இவராலே அன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!
திருப்பாடல் 118: 1,8-9. 21-23. 26,28,29

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 8 மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! 9 உயர்குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! பல்லவி

21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். 22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! பல்லவி

26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 28 என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். 29 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

அன்பர்களே,

இன்றைய இரண்டாம் வாசகம், இயேசுவில் வெளிப்பட்ட கடவுளின் அன்பைப் பற்றிக் கூறுகிறது. இயேசுவின் இணையற்ற தியாகத்தால் கடவுளின் பிள்ளைகளாகி இருக்கும் நாம், இறையாட்சியின் நாளில் கடவுள் இருப்பது போலவே அவரைக் காண்போம் என திருத்தூதர் யோவான் நமக்கு எடுத்துரைக்கிறார். கிறிஸ்து வழியாக கடவுளை அறிந்து கொண்ட நாம் அனைவரும், இறைமாட்சியைக் காணும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

கடவுள் இருப்பதுபோல் அவரைக் காண்போம்
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-2

அன்பிற்குரியவர்களே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக் கின்றன, என்கிறார் ஆண்டவர்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18

அக்காலத்தில் இயேசு கூறியது: "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக் கொண்டுபோய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றிக் கவலை இல்லை. நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக்கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எங்கள் நல்லாயராம் இறைவா,

உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு உகந்த மந்தையாக இறைமக்களை உருவாக்க துணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் மருத்துவராம் இறைவா,

உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திடவும், உலகில் குடி, புகை, போதைப் பழக்கங்களாலும், சுயநலம், பேராசை, வன்மம் போன்ற தீய குணங்களாலும், தங்களையும் பிறரையும் அச்சுறுத்தி வருவோர் அனைவருக்கும் உமது அருளால் குணமளிக்க வேண்டுமென்றும், எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது மந்தையின் நல்ல ஆடுகளாகவும், உமக்கு சான்று பகரும் நல்ல கிறிஸ்தவர்களாகவும் வாழத் தேவையான நலன்களை எம்மில் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கத்தின் ஊற்றே இறைவா,

உலகத்தின் கவலைகளுக்கும், துன்பங்களுக்கும் தீர்வு தேடி அலையும் மக்கள் அனைவரும், உம் வழியாக அமைதி காணவும், நீரே உண்மையான கடவுள் என்பதை உணரவும், உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் நற்கருணையில் உம் திருமகனின் உடனிருப்பை உணரவும், பிற சமயத்தினர் முன்னிலையில் உமக்கு சான்று பகரவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் வழிகாட்டியாம் இறைவா,

உம்மைப் பற்றிய உண்மையைப் புறக்கணித்து, தவறான கொள்கைகளையும் சமயங்களையும் பின்பற்றி வாழும் மக்கள், உண்மை கடவுளாகிய உம்மை ஏற்றுக்கொள்ளவும் உமது அரசில் ஒன்றிணையவும், எங்கள் நாட்டை வழிநடத்தும் அரசியல், சமூகத் தலைவர்கள் அனைவரும் நீதியோடும், நேர்மையோடும் மக்களை உண்மையின் பாதையில் வழிநடத்தவும், அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய இறைவா!

ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், நோயுற்றோர் மற்றும் வறுமையில் வாடுவோர் அனைவரும் உமது பாதுகாப்பையும், பராமரிப்பையும் பெற்று மகிழ்ந்திட வேண்டுமென்றும், உடலின் உயிர்ப்பினால் மாட்சிபெற்ற உம் திருமகனைப் போன்று, உள்ளத்தின் உயிர்ப்பினால் உமது மாட்சியில் பங்குபெறும் தகுதி அடையுமாறு எம் நாட்டினர் அனைவருடைய வாழ்வையும் புதுப்பிக்க வேண்டுமென்றும், உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு, 'நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்' என்றார்'' (யோவான் 10:11)

இஸ்ரயேல் மக்களை அன்போடும் பரிவோடும் வழிநடத்திய கடவுள் தம்மை அவர்களுக்கு ஒரு நல்ல ஆயராக வெளிப்படுத்தினார். மக்களும் கடவுள் தங்களைப் பராமரிக்கின்ற நல்ல ஆயர் என்பதை அனுபவித்து உணர்ந்தார்கள். ஆயராக இருந்து தம் மக்களை வழிநடத்திய கடவுள் அவர்களுக்கு உணவு அளித்தார்; அவர்களை எதிரிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாத்தார்; அவர்களை ஒரு மக்களினமாக உருவாக்கினார். இவ்வாறு கடவுளின் அன்பினைத் துய்த்துணர்ந்த மக்கள் கடவுள் தங்களோடு உடனிருந்து தங்கள் இன்பதுன்பங்களில் பங்கேற்றதை அனுபவத்தில் உணர்ந்தார்கள். நல்ல ஆயராகத் தம் மக்களை வழிநடத்திய கடவுள் அம்மக்களுக்காகத் தம் உயிரையும் கொடுப்பார் என்பதை இயேசு மக்களுக்கு அறிவிக்கிறார். இயேசுவின் வாழ்வில் துலங்கிய அன்பு பல விதங்களில் வெளிப்பட்டது. இயேசு மக்களுக்குக் கடவுளின் சட்டத்தைக் கற்பித்தார்; அவர் மக்களின் பிணிகளைப் போக்கி அவர்களுக்கு நலமளித்தார்; முறிந்த மனித உறவுகளை அவர் சீர்ப்படுத்தினார். இவ்வாறு மக்களுக்காக வாழ்ந்த இயேசு அவர்களுக்காக இறக்கவும் தயங்கவில்லை.

ஆடுகளை மேய்க்கின்ற ஆயர் அந்த ஆடுகளுக்காகத் தம் உயிரைப் பலியாக்குவது ஓர் அதிசயமான செய்தியாகத்தான் நமக்குத் தென்படும். ஆனால் இயேசுவோ தம் உயிரை நமக்காகக் கல்வாரியில் பலியாக்குகிறார். நம்மேல் கொண்ட எல்லையற்ற அன்பின் வெளிப்பாடாக அமைகிறது அவருடைய சிலுவைச் சாவு. இயேசு என்னும் நல்ல ஆயர் மற்ற ஆயர்களைப் போல் அல்லாமல் தம் உயிரையே தம் ஆடுகளுக்காகக் கையளிக்கத் தயங்காதவர். இத்தகைய பேரன்பு கொண்ட ஆயர் நம் மீட்பராகிய இயேசு. இந்த இயேசுவையே நாம் நம் மீட்பராகவும் நமக்கு விடுதலை அளிக்கும் வீரராகவும் ஏற்றுள்ளோம். இதுவே நாம் இயேசுவின்மீதும் அவரை நம்மிடையே அனுப்பிய தந்தையாம் கடவுள்மீதும் கொள்கின்ற நம்பிக்கை ஆகும். இந்த நம்பிக்கை உறுதியாக இருந்தால் நாம் இயேசுவின் அன்பை ஒவ்வொரு நாளும் ஆழமாக உணர்ந்து அனுபவிக்கும் பேறு பெறுவோம். நமக்காகத் தம்மைக் கையளிக்கின்ற இயேசு நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகிறார். அதே நேரத்தில் அவரே நமக்குப் புது வாழ்வு அளித்து அந்த வாழ்வில் நாம் இடையறாது நிலைத்து நிற்கின்ற அருளையும் நமக்கு அளிக்கிறார். இவ்வாறு நம்மை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கின்ற ''நல்ல ஆயர்'' நம்மோடு இருப்பதால் நமக்குக் குறையேதும் இல்லை (காண்க: திபா 23). அவரே நம்மை பசும்புல் வெளிக்கு அழைத்துச் செல்வார்; நம் தாகத்தைத் தணிப்பார்; நம்மை ஆபத்திலிருந்து பாதுகாத்து நமக்குப் புத்துயிர் அளிப்பார். அவர் அளிக்கின்ற உயிர் நம்மைக் கடவுளோடு நிலைவாழ்வில் இணைக்கும் சக்தி கொண்டது. எனவே நம் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பிட வேண்டும்; நம் உள்ளம் உவகை கொண்டு களித்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை அன்போடு வழிநடத்துகின்ற உம்மை நம்பி வாழந்திட எங்களுக்கு அருள்தாரும்.