இன்று பொதுக்காலம் 14 ஆம் ஞாயிறு.‏

திருவழிப்பாட்டு ஆண்டு B (05-07-2015)

சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்/> இது எனது உடல்: இது எனது உடன்படிக்கையின் இரத்தம்/> சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்./> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்./> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> இது எனது உடல்: இது எனது உடன்படிக்கையின் இரத்தம்./> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்/>


திருப்பலி முன்னுரை

இறை மக்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். ஆண்டின் பொதுக்காலம் 14 ஆம் வார திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாகி, கூடி வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும்; என் அன்பு வாழ்த்துகளைக் கூறி மகிழ்கிறேன்.

நம் வலுவின்மையிலும், இகழ்ச்சியிலும, இடரிலும், இன்னலிலும், நெருக்கடியிலும் இறைவனே நமக்கு வலுவும் வாழ்வும் தருகின்றார். என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும், என்னும் ஆசீர்வாத வாக்குகள் வழியாக இறைவன் நமக்குத் தரும் அருட்துணையை உறுதிப்படுத்துகின்றார். நம் துன்பங்களைத் துடைக்கவும், நமக்கு விடுதலையும், மகிழ்வும் அளிப்பதே நம் கடவுளின் விருப்பமாகவும், முதன்மைப் பணியாகவும் இருக்கின்றது. ஆதலால், மனவுறுதியோடும், முழுமையான அர்ப்பணத்தோடும்: பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பதுபோல, எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும். என்னும் செபத்தோடு இறைவனின் பாதத்தில் சரணடைந்தவர்களாய்; இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

அன்பர்களே,

இன்றைய முதல் வாசகம், எசேக்கியேல் இறைவாக்கினரை ஆண்டவர் இஸ்ரயேல் மக்களிடம் அனுப்பிய நிகழ்வை எடுத்துரைக்கிறது. இஸ்ரயேலர் பலர் கடவுளின் பெயரால் வந்த இறைவாக்கினர்களை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாதவர்களாக இருந்ததை இதில் காண்கிறோம். நாம் இறைவனின் பணியாளர்களை ஏற்றுக்கொள்ளும் மனதுள்ளவர்களாக வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

"வன்கண்ணும், கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன்.
இறைவாக்கினர் எசேக்கியல் 2:2-5

அவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது: அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன். அவர் என்னிடம், "மானிடா! எனக்கெதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்றுவரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர் " என்றார். "வன்கண்ணும், கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம் போய், 'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்று சொல். கலக வீட்டாராகிய அவர்கள், செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும், தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்."

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.
திருப்பாடல் 123: 1-4

விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியு ள்ளேன். பல்லவி:

பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப் பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பதுபோல, எம் கடவு ளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியி ருக்கும். பல்லவி:

எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே! எங்களுக்கு இரங்கும்: அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்துவிட்டோம். இன்பத்தில் திளைத்திருப்போரின் வசை மொழி போதும். இறுமாந்த மனிதரின் பழிச்சொல்லும் போதும். பல்லவி:

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

அன்பர்களே,

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், தனது வலுவின்மையில் கடவுளின் வல்லமையைக் காண்பதாக எடுத்துரைக்கிறார். ஆண்டவரின் வெளிப்பாடுகளால் இறுமாப்பு அடையாமல் இருக்குமாறு தனக்கு இந்த துன்பம் வழங்கப்பட்டிருப்பதாக அவர் ஏற்றுக்கொள்கிறார். புனித பவுலைப் போன்று நமது வாழ்வில் வரும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்
திருத்தூதர் பவுல் 2 கொரி 12:7-10

எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள் போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப் போல் இருக்கிறது. நான் இறுமாப்படையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், "என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் " என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது: ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க அவர் என்னை அனுப்பியுள்ளார்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித மாற்கு 6:1-6

அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ;இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகம் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? " என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் " என்றார்.அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

கருணையை வாழ்நாள் முழுவதும் கொண்டுள்ள தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும்; மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக தம்மையே அர்ப்பணிக்கவும். நீர்மிகுதியாய்க் கொடுத்துள்ள நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் கொண்டு அறப்பணியிலும், அன்புப் பணியிலும் அவர்கள் முழுமையாய் ஈடுபட நன்மனதை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்களைத் திக்கற்றவர்களாக விட்டுவிடாத தந்தையே இறைவா!

பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பதுபோல, எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும். என்னும் வேண்டுதலோடு உமது அருட்துணைக்காகக் காத்திருப்போர் மேல் இரங்கியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

முகம் கோணாமல் அனைவருக்கும் வாரி வழங்கும் அன்புத் தந்தையே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். ஞானம் என்னும் கொடையை எங்களுக்கு நிறைவாகத் தந்தருளும். இதனால் நாங்கள் பொதுநன்மைக்காக வல்ல செயல்கள் புரியும் வலிமையைப் பெற்றுக்கொள்ளவும், நீர் எங்களுக்குக் கொடையாகத் தந்திருக்கிற எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக, உடன் பிறப்புகளுக்காக, உடன் உழைப்பாளர்களுக்காக, நண்பர்கள், தோழியருக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களோடு வாழ்கின்ற, உழைக்கின்ற அவர்களைப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், மதிக்கவும், ஊக்குவிக்கவும் எங்களுக்கு துணைபுரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வளிக்கும் தந்தையே இறைவா!

உலக நாடுகளிலே உணவின்றியும், போதிய மருத்துவ வசதியின்றியும் அல்லலுறும் அனைவரையும் காத்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய இறைவா!

ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், நோயுற்றோர் மற்றும் வறுமையில் வாடுவோர் அனைவரும் உமது பாதுகாப்பையும், பராமரிப்பையும் பெற்று மகிழ்ந்திட வேண்டுமென்றும், உடலின் உயிர்ப்பினால் மாட்சிபெற்ற உம் திருமகனைப் போன்று, உள்ளத்தின் உயிர்ப்பினால் உமது மாட்சியில் பங்குபெறும் தகுதி அடையுமாறு எம் நாட்டினர் அனைவருடைய வாழ்வையும் புதுப்பிக்க வேண்டுமென்றும், உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

அருள் வாழ்வின் ஊற்றான தந்தையே!

நாங்கள் உமது வாக்கையும்; நியமங்களையும் நீதி நெறிகளையும் நேரிய முறையில் நாம் கடைப்பிடித்து, அன்பியசமூக வாழ்வு வாழ்வதற்கும், கிறிஸ்துவின் பெயரால் பல்வேறு சபைகளாக வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், தூய ஆவியாரின் வல்லமையால் ஒன்றிணைந்து, ஒரே திருச்சபையாக கிறிஸ்துவுக்கு சான்று பகர உதவவும், எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தூய ஆவியாரின் ஆலயங்களாக வாழ்ந்து, எங்கள் சொற்களாலும் செயல்களாலும் கிறிஸ்து இயேசுவுக்கு சான்று பகரும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு தமது சொந்த ஊருக்கு வந்தார்...அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார்'' (மாற்கு 6:1,5-6)

''யார் இந்த இயேசு?'' என்னும் கேள்வி மாற்கு நற்செய்தியில் மைய இடம் பெறுகிறது. இயேசு தம் சொந்த ஊராகிய நாசரேத்து வந்து, அங்கே ஓய்வுநாளன்று கற்பிக்கத் தொடங்குகிறார். இயேசு யூத முறைப்படி திருச்சட்டம் பயின்றவரல்ல; அக்கால வழக்கப்படி வேறொரு யூத அறிஞரை அணுகி அவரிடம் பாடம் பயின்றவருமல்ல. எனவே, அவர் தொழுகைக் கூடத்தில் கற்பித்தது வழக்கத்துக்கு மாறானது; சட்டத்திற்கு முரணானது. இதை மக்கள் கவனிக்கிறார்கள். ''இவர் தச்சரல்லவா?'' (மாற் 6:3) என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இயேசு தச்சர் என அழைக்கப்படுவது இந்த ஓரிடத்தில் மட்டுமே என்பதையும் நாம் கருதலாம். மேலும் மக்கள் இயேசுவைப் பார்த்து, ''இவர் மரியாவின் மகன்தானே!'' என்று வியப்புறுகின்றனர் (மாற்6:3). வழக்கமாக ஒருவரை அடையாளம் காட்டும்போது அவருடைய தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு அவருடைய மகன் இன்னார் என்று கூறுவது யூத மரபு. ஆனால் இங்கே இயேசு ''மரியாவின் மகன்'' என அடையாளம் காட்டப்படுகிறார். ஒருவேளை இயேசு மரியாவும் யோசேப்பும் கூடி வாழும் முன்னரே மரியாவின் வயிற்றில் கருவானது இவ்வாறு குறிக்கப்படுகிறதோ? எவ்வாறாயினும், ''யார் இந்த இயேசு?'' என்னும் கேள்வி மக்களின் உள்ளத்தில் எழுந்ததையும் அக்கேள்விக்கு மக்கள் வெவ்வேறு பதில்கள் அளித்ததையும் மாற்கு பதிவு செய்கிறார்.

ஆக, இயேசுவின் உறவினரும் சரி, சீடர்களும் சரி, ஊர் மக்களும் சரி, இயேசுவை யார் என அடையாளம் காணத் தவறிவிட்டார்கள். தீய ஆவிகள்தாம் இயேசுவை அடையாளம் கண்டு, அவரை ''உன்னத கடவுளின் மகன்'' (மாற் 5:7) என அழைக்கின்றன. இயேசுவுக்கு மிகவும் நெருக்கமாக நாம் இருக்கின்றோம் என்பதால் மட்டுமே நம்மில் உண்மையான நம்பிக்கை தோன்றிவிடாது. இயேசுவின் குடும்பத்தினரே அவரை அடையாளம் காணத் தவறினார்கள்; அவரை நன்கு அறிந்த ஊர் மக்கள் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை; அவரோடு வழிநடந்து அவருடைய போதனைக்குச் செவிமடுத்த சீடர்கள் கூட அவரை அறிந்திடவில்லை. உள்வட்டத்தில் இருப்போர் பார்வையற்றிருக்க வெளிவட்டத்தில் இருப்போர் தெளிந்த பார்வையோடு இயேசுவை அடையாளம் காண்கிறார்கள். இதிலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக்கொள்ளலாம். இயேசுவை நாம் உண்மையாகவே அறிந்துள்ளோம் என இறுமாப்புக் கொள்ளாமல் அவரை மேன்மேலும் ஆழமாக அறிந்து அன்புசெய்திட நம் உள்ளத்தைத் திறந்திட வேண்டும். அப்போது நம்மில் நம்பிக்கை வளரும். இறை அறிவும் பளிச்சென ஒளிரும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனை அறிந்து அன்புசெய்திட எங்களுக்கு அருள்தாரும்.