யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C

(இன்றைய வாசகங்கள்: இணைசட்டம் 26:4-10, உரோமை 10:8-13, லூக்கா 4:1-13



உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/>


திருப்பலி முன்னுரை -1

கடவுளுக்குரியவர்களே,

மீட்பளிக்கும் கடவுளின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வர வேற்கிறோம். மனமாற்றத்திற்கு தூண்டும் காலமாகிய தவக்காலத்தின் முதல் ஞாயிறைநாம் இன்று சிறப்பிக்கின்றோம். உலகப் பொருட்களால் ஏற்படும் சோதனைகளுக்கு மயங்காமல், கடவுளுக்கு முழு மனதோடு பணிபுரிய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு திருமுழுக்கு பெற்று, தன் பணிவாழ்வைத் தொடங்கும் முன் பாலை நிலத்தில் தனித்திருந்து இறைவனோடு உறவாடினார். அவ்வேளையில் அலகை அவரை சோதித்தபோது, கடவுளில் முழு நம்பிக்கை கொள்ளும் வழியை நமக்கு காட்டினார். அலகையின் தந்திர மொழிகளில் ஏமாறாமல், அந்த சோதனைகளை இயேசு வெற்றி கொண்டார். அவரைப் பின்பற்றி கடவுளுக்கு எதிராக நம் வாழ்வில் வரும் சோதனை களை முறியடிக்கும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

திருப்பலி முன்னுரை -2

இறைத்திருமகன் இயேசுக் கிறிஸ்துவில் அன்பு கொண்டுள்ள இறைமக்களே! உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தைக் கூறிக்கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன். தவத்தின் அடையாளங்களை அணிந்து நோன்பு நாட்களைத் தொடங்கியிருக்கிற உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

இன்று தவக்காலத்தின் முதல் ஞாயிறு. ஆண்டவர் தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் நாளும் பொழுதும் நமக்கு வாழ்வளித்து நம்மை வளர்த்து வருகின்றார். அவரை நோக்கி நாம் குரலெழுப்பும்போது அவர் நம்மீது இரக்கம் கொண்டு நமக்கு உதவி புரிய விரைந்து வருகின்றார். சோதனைகளை வென்று சாதனை படைக்க வழி அமைத்துத் தருகின்றார் இறைவார்த்தைகள் எடுத்தியம்பி நிற்கின்றன.

எனவே, எப்பொழுதும் இறைவனுக்கு நன்றி செலுத்தவும், எப்பொழுதும் இயேசுவின் நாமத்தை அறிக்கையிடவும், அவரிலேயே முழமையான நம்பிக்கை கொண்டு வாழவும், சோதனைகளை வெல்லவும், செப வாழ்வில் நிலைத்திருக்கவும் வரம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களினத்தின் விசுவாச அறிக்கை.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 4-10

மோசே மக்களை நோக்கிக் கூறியது: முதற்பலன் நிறைந்த கூடையை குரு உன் கையிலிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார். நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது: நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அன்னியராய் இருந்தார். ஆனால் அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார். எகிப்தியர் எங்களை ஒடுக்கினர்; துன்புறுத்தினர்; கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர். அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார். தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டி வந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார். எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற் பலனைக் கொண்டுவந்துள்ளேன் என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

துன்ப வேளையில் என்னோடு இருந்தருளும், ஆண்டவரே.
திருப்பாடல்91: 1-2. 10-11. 12-13. 14-15

உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். 2 ஆண்டவரை நோக்கி, `நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார். பல்லவி

10 தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. 11 நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். பல்லவி

12 உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர். 13 சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்; இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன் பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். பல்லவி

14 `அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்; 15 அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்'. பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவில் விசுவசிக்கிறவனுக்குரிய விசுவாச அறிக்கை.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10: 8-13

கோதரர் சகோதரிகளே, மறைநூலில் சொல்லியிருப்பது இதுவே: ``வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.'' இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும். ஏனெனில், `இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில், ``அவர்மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்'' என்பது மறைநூல் கூற்று. இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். ``ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்'' என்று எழுதியுள்ளது அல்லவா?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-13

அக்காலத்தில் இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றைவிட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன்பின் அவர் பசியுற்றார். அப்பொழுது அலகை அவரிடம், ``நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்'' என்றது. அதனிடம் இயேசு மறுமொழியாக, `` `மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை' என மறைநூலில் எழுதியுள்ளதே'' என்றார். பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் அவருக்குக் காட்டி, அவரிடம், ``இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்'' என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, `` `உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக' என்று மறைநூலில் எழுதியுள்ளது'' என்றார். பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ``நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; `உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்' என்றும் `உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது'' என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, `` `உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்றும் சொல்லியுள்ளதே'' என்றார். அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்த பின்பு, ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:




பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

என்றும் மாறாத மிகுந்த இரக்கமுள்ள இறைவனே!

வேதனைகளும், துன்பங்களும், இழப்புக்களும், வன்முறைகளும், அழிவுகளும் பெருகிவிட்ட இன்றைய உலகிலே உமது அருட்பணியைத் தொடர்ந்தாற்றும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரையும் நீர் தூய ஆவியின் கொடைகாளால் நிரப்பி, அவர்களை வலுப்படுத்தி, அவர்கள் அனைவரும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் மாபெரும் சக்திகளாக விளங்கச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மீட்பு அளிப்பவராம் இறைவா,

உமது திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்து வாழியாக நீர் அளித்த மீட்பை, உலக மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு நாடித் தேடி பெற்றுக்கொள்ள உதவும், தங்கள் மீட்புக்காக உம்மை நோக்கி கூக்குரல் எழுப்பவும், உமது அருளின் உயிரைப் பெற்றவர்களாய் கிறிஸ்துவின் மரணம், உயிர்ப்பு ஆகியவை வழியாக நீர் அளிக்கும் மீட்பை சுவைத்து மகிழவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

என்னைக் கை பிடித்து நடக்கப் பழக்கின தந்தையே! எம் இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் உமக்குப் பணிபுரிவதற்கு வேண்டிய நல்லுள்ளம் அவர்களிடம் உருவாகிடவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விடுதலையின் தெய்வமே இறைவா!

உம்முடைய அன்பிலிருந்து எம்மைப் பிரிக்க முயற்சிக்கும் மனிதர்கள், பொருட்கள், ஆசைகள், சந்தர்ப்பங்கள் போன்ற கொடிய சோதனைகளிலிருந்து நாங்கள் விடுதலை பெற்று உமக்கும், உமது வார்த்தைக்கும் மாத்திரமே செவிசாய்த்து, உண்மையான விசுவாச வாழ்வு வாழ்வதற்கு வேண்டிய அருளை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

புத்துயிர் கொடுப்பவராம் இறைவா,

தங்கள் மீட்புக்காக உம்மை நோக்கி கூக்குரல் எழுப்பவும், உமது அருளின் உயிரைப் பெற்றவர்களாய் கிறிஸ்துவின் மரணம், உயிர்ப்பு ஆகியவை வழியாக நீர் அளிக்கும் மீட்பை சுவைத்து மகிழவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மனிதனாக அவதரித்த மாபரனின் தந்தையே!

எங்கள் சமூகத்தில் இடம் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் ஏழைகள், அநாதைகள், கைவிடப்பட்டோர், மாற்று திறனாளிகள் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்கள் மறுவாழ்வு பெறவும், எங்கள் ஒவ்வொருடைய உள்ளத்திலும் அவதரித்து அன்பு, அமைதி, சமாதானம் போன்ற புண்ணியங்களை எங்களுக்கு பொழிந்தருள வேண்டுமாய், பிறந்திருக்கின்ற இயேசுபாலன் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஆற்றல் தருபவராம் இறைவா,

இவ்வுலகில் எழும் பலவித சோதனைகளால் வாழ்வின் நோக்கத்தை மறந்து திசைமாறி அலையும் மனிதகுலத்துக்கு, உமது அருள் ஒளியால் தீமைகளை வென்று விண்ணக வாழ்வை உரிமையாக்கும் ஆற்றலைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

தாயும் தந்தையுமான இறைவா,

உடல், உள நோயினால் வேதனையுறும் அனைவரையும் நீர் இரக்கத்துடன் கண்நோக்கி: அவர்களின் வேதனையைத் தணித்து, நிறைவான உடல், உள நலத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்றும், இன்று எமது சமூகத்திலே வீணான விவாதங்களாலும், குழப்பங்களாலும், தவறான போதனைகளாலும், பிடிவாதத்தாலும், உறவை முறித்து, விசுவாசத்தை மறந்து பாதை மாறிச் செல்லும் அனைவர்மீதும் மனமிரங்கி உமது வழியில் செல்ல அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்றும், எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின் பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார்'' (லூக்கா 4:1-2)

இயேசு தம் இறையாட்சிப் பணியைத் தொடங்கவிருக்கிறார். அதற்குமுன் அவர் ''சோதிக்கப்பட்டார்'' (லூக் 4:1). இயேசு ''பாலைநிலத்தில்'' சோதிக்கப்பட்டார் என்னும் செய்தியை மாற்கு, மத்தேயு, லூக்கா ஆகிய மூவருமே தருகிறார்கள். பாலைநிலம் என்றால் சகாரா போன்று பரந்துவிரிந்த மணல்வெளி அல்ல. மாறாக, பாலஸ்தீன நாட்டுப் பாலைநிலம் என்பது ஒரு வறண்ட பிரதேசம். அங்கே குளிர்காலத்தில் மட்டும் தாவரங்கள் வளர்வதுண்டு. பொதுவாகப் பாழடைந்த ஓர் இடமாக இருந்த அப்பாலைநிலத்தில் கள்வர் நடமாடினர்; தீய ஆவிகள் குடிகொண்டதாக மக்கள் நம்பினர். இயேசுவும் அங்கே ''அலகையினால்'' சோதிக்கப்படுகிறார்.

பாலைநிலத்திற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதாவது, இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வந்தபோது ''பாலைநிலம்'' வழி நடந்துவந்தனர். அங்கே அவர்களுக்குச் சோதனைகள் எழுந்தன. ஆக, இயேசு பாலைநிலத்தில் சோதிக்கப்பட்டபோது அலகையின் தூண்டுதல்களுக்கு இடம்கொடுக்கவில்லை. அலகை இயேசுவை ''கடவுளின் மகன்'' என அழைத்தது; அவர் நினைத்தால் கோபுர உயரத்திலிருந்து கீழே குதித்தாலும் தீங்கு ஏற்படாது என்று சொல்லிப்பார்த்தது; ஏன், விவிலிய வாக்குகளை மேற்கோள் காட்டி இயேசுவை மயக்கப்பார்த்தது. ஆனால் இயேசு அச்சோதனைகளுக்கு இடம் கொடு;க்கவில்லை. மாறாக, கடவுளிடத்தில் மட்டுமே அவர் தம் முழு நம்பிக்கையை வைத்திருந்தார். கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நடப்பதே அவருக்கு ''உணவு''. அவர் கடவுளைச் சோதனைக்கு உட்படுத்தமாட்டார். மாறாக, கடவுளிடம் தம்மை முழுமையாகக் கையளித்துவிட்டு, அவருடைய விருப்பத்தையை தம் விருப்பமாக மாற்றிக்கொண்டு, அதன்படியே எந்நாளும் நடப்பார். இவ்வாறு கடவுளிடம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்த இயேசு நமக்கு முன்மாதிரி வழங்கியுள்ளார். நாமும் கடவுளையே பற்றிக்கொண்டு வேறு பற்றுக்களை அறுத்திட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம்மிடம் நாங்கள் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அருள் தாரும்.